ஜி.பி.முத்து ஒரு பெரிய நடிகனா வர நிறைய வாய்ப்புகள் இருக்கு...சொல்கிறார் ஓஎம்ஜி இயக்குனர் யுவன்
டிக் டாக் புகழ் ஜி.பி. முத்து ஒரு சாதாரண மனிதராக இருந்து பிரபலமானவர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கருப்பட்டிக்குப் புகழ் பெற்ற ஊர். அந்த புகழையும் தாண்டி இப்போது உடன்குடி என்றாலே ஜி.பி.முத்து தான் நம் நினைவுக்கு வருகிறார். இவர் பிக் பாஸில் காலடி எடுத்து வைத்ததும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி விட்டார்.
இவர் 29.3.1985ல் பிறந்தார். முழுபெயர் ஜி.பேச்சி முத்து. 4பிள்ளைகள், மனைவியுடன் வசித்து வரும் இவர் ஆரம்பகாலத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளார். பின்னர் டிக் டாக் வந்ததும் கொரோனா காலத்தில் சிறு சிறு வீடியோ போட்டு வந்துள்ளார். அதில் இவரது நகைச்சுவையான நாட்டுப்புற வசனங்கள் ரசிகர்களைக் கவர ஆரம்பித்தன. செத்தப்பயல, பேயில போவான், நாரப்பயல என்ற வசனங்கள் தான் இவரது பஞ்ச்.
இதை இவர் சொல்லும் விதம் அந்தத் தொனி, முகபாவனைகள்...பாஷையே தெரியாதவரையும் சிரிக்க வைத்து விடும். அதன் பிறகு யூடியூபில் இவர் தனது ரசிகர்கள் அனுப்பும் கடிதங்களைப் பிரித்துப் படித்து வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். வருமானம் வர வர இவரது ரேஞ்சே வேற லெவலுக்குச் சென்றுவிட்டது.
எப்போது நாலு நண்பர்களுடன் ஊர் சுற்றி வீட்டிற்குத் தேவையான மெத்தைகள், செல்போன்கள் என பஜார் பஜாராகச் சென்று வாங்கி அதை வீடியோ எடுத்து வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். சமீபத்தில் கூட லட்டரைப் பிடித்துப் படிப்பதற்காக துபாய் பாலைவனம் சென்று வந்துள்ளார் நம்ம ஜி.பி.முத்து.
பிக்பாஸ் சீசனில் இவர் தான் எல்லோருக்கும் பெரிய டஃப் கொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் எனக்கு பணம்...காசு முக்கியமல்ல...பாசம் தான் முக்கியம்...எனக்கு பையன் நினைப்பா இருக்கு...அவனுக்கு உடம்பு சரியில்ல...வீட்டுக்குப் போய் பார்க்கப் போகணும் என வந்த சிலநாட்களில் தானாகவே வெளியேறி விட்டார்.
பிக்பாஸ் சீசன் 6ல் இவர் தான் முதல் ஆளாக வீட்டிற்குள் நுழைந்தவர். கமல் உள்பட அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர். இவருக்கு என்று தனி ரசிகர்கள் குவிந்து விட்டனர்.
இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நகைச்சுவை ஜாம்பவானை தமிழ்த்திரை உலகமும் சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது.
ஓ மை கோஸ்ட் (ஓஎம்ஜி) என்ற படத்திற்காக இயக்குனர் யுவன் இவரை அறிமுகப்படுத்துகிறார். இந்தப்படத்தில் கவர்ச்சித் தாரகை சன்னிலியோனும் நடிக்கிறார் என்பதும், பட அறிமுகவிழாவில் ஜி.பி.முத்து சன்னிலியோனுக்கு பால்கோவா ஊட்டியதும் சமூகவலைத்தளவாசிகளிடம் பெரிய பரபரப்பை உண்டு பண்ணியது.
இவர் டிக்டாக், யூடியூப்பில் தான் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். அது தவிர, நாடகம் சினிமாவில் இவர் இதுவரை நடித்ததே இல்லை. அனுபவம் இல்லாத இவருக்கு சினிமா ஒத்துவருமான என முதன் முதலில் கொஞ்சம் பயம் இருந்தது என்கிறார் இயக்குனர் யுவன். இதுபற்றி அவரே சொல்லக் கேட்போம்.
ஜி.பி.முத்து வந்து நான் வந்து சோஷியல் மீடியால பெரிசா ஃபாலோ பண்ணுனேன். எனக்குத் தெரியாது. பட் என்னோட டீம் தான் இன்ட்ரொடியூஸ் பண்ணாங்க ஜி.பி.முத்து. பட் அந்த கேரக்டருக்கு கொஞ்சம் ஆப்ட்டா இருப்பாருன்னு நினைச்சி ரொம்ப பயந்தேன் ஆக்சுவலி.
எப்படி பண்ணப்போறாரு பர்ஸ்ட் படமாச்சே அப்படின்னு பயந்து தான் வரவச்சேன். பட் நான் எதிர்பார்த்ததை விட டக்குன்னு கேச் பண்ணிட்டாரு. அவருக்குள்ள ஒரு நடிகன் வந்து இருக்கான் ஆக்சுவலி. அது இந்தப்படத்துல கண்டிப்பா தெரியும். ஒரு பெரிய நடிகனா வர நிறைய வாய்ப்புகள் இருக்கு.
இந்தப்படத்துல ஒரு நாட்டு வைத்தியர் மாதிரி ஒரு கேரக்டர் பண்ணிருக்காரு. ஆக்சுவலா எனக்குத் தெரிஞ்சு அந்தக் கேரக்டரை ஜி.பி.முத்துவ மாதிரி வேற யாரும் பண்ண முடியாது. பண்ணினா கூட அது அந்த அளவுக்கு சூட்டபிளா இருக்குமான்னு தெரியாது. ஏன்னா அவரு அவ்ளோ ஆப்டா இருந்தாரு அந்தக் கேரக்டருக்கு. எனக்குத் தெரிஞ்சி ஜனங்க பயங்கரமா என்ஜாய் பண்ணுவாங்க.
ஜி.பி.முத்து எனக்குத் தெரிஞ்சி இந்தப்படத்துல தான் முதல் தடவையா கேமராவைப் பார்க்குறாரு. முதல் நாள் ரொம்ப நர்வஸா இருந்தாரு. பட்...நான் கூட்டிட்டுப் போயிட்டு அவருக்கிட்ட எக்ஸ்பிளைன் பண்ணினேன். நீங்க யூ டியூப்ல எப்படி பேசுனீங்களோ...அதே மாதிரி ப்ரீயா பேசுங்க. யாருக்கும் பயப்படத் தேவையில்லை.
ஆக்சுவலா இருங்க. எனக்குத் தெரிஞ்சி காலைல 8 மணிக்கு வந்தாரு. ஒன்பதரை மணி பத்து மணிக்கெல்லாம் அவரு ஆர்டிஸ்டா ஆயிட்டாரு. அதுக்கு அப்புறம் அவரு ப்ரீயா எல்லாத்தையும் கேச் பண்ணி பக்காவா நான் என்ன டயலாக் சொல்றேனோ அதையே பேச ஆரம்பிச்சிட்டாரு. அந்த அளவுக்கு ஒரு ஆர்டிஸ்டா புரொபஷனலா பண்ண ஆரம்பிச்சிட்டாரு.
தென்னகத்தில் இருந்து ஒரு நகைச்சுவை ஜாம்பவானான ஜி.பி.முத்து தமிழ்த்திரை உலகிலும் வெற்றி பெற்று மென்மேலும் சாதனை படைக்க வாழ்த்துவோம்.