அறிஞர் அண்ணா பாராட்டிய நகைச்சுவை நடிகர்..! சினிமாவில் மட்டுமல்ல...நிஜத்திலும் மன்னர் தான்..!
காமெடி நடிகர்களில் பலர் தமிழ்சினிமாவில் உள்ளனர். அவர்களில் ஒரு சிலரைத் தான் ரசிகர்கள் ஆர்வத்துடன் ரசிக்கின்றனர். அவர்கள் அனைவரையும் உற்றுநோக்கினால் ஒவ்வொருவரும் ஒரு பாணியில் நடிப்பார்கள்.
அது யாரையும் போல் காபி அடிப்பதாக இருக்காது. அப்போது தானே ரசனை வரும். அந்த வகையில் நகைச்சுவை மன்னர் என்று தான் சொல்ல வேண்டும். உண்மையிலும் இவர் மன்னர் தானே..! ஆம்...சுருளிராஜன் அல்லவா? 3ம் வகுப்பு வரை மட்டுமே படித்து தமிழ்த்திரை உலக வரலாற்றில் தடம் பதித்த அற்புத மனிதர். இனி இவரைப் பற்றிய சுருக்கமான விவரங்களைப் பார்ப்போம்.
நாடக உலகில் இருந்து தான் பெரும்பாலான நடிகர்கள் சினிமாவுக்கு வந்துள்ளனர். அவர்களில் நகைச்சுவை நடிகர் சுருளிராஜனும் ஒருவர். இவர் மதுரையை அடுத்துள்ள பெரிய குளத்தில் பிறந்தார். இயற்பெயர் சங்கரலிங்கம்.
நடிகர் நாகேஷ் இவரது நண்பர். நாடகங்களில் நடிக்கும்போது எல்லாம் தனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுவார். அப்போது அவருக்கு சினிமாவில் வர வேண்டுமானால் கட்டுக்கோப்பான உடல்வாகு இருக்க வேண்டும் என்று எண்ணினார்.
நாகேஷ் வந்து ஜொலித்ததும் தான் தன்னாலும் வர முடியும் என்ற நம்பிக்கை அவருக்குப் பிறந்தது. அதே போல நாகேஷ்சும் அவர் சினிமாவுக்கு வந்துவிடலாம் என்று அவ்வப்போது உற்சாகப்படுத்தினார்.
டைரக்டர் ஜோசப் தளியத் தனது விளக்கேற்றியவள் படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகிற்கு ஒரு நகைச்சுவை ஜாம்பவானை அறிமுகப்படுத்தினார். அவர் தான் சுருளிராஜன். முதல் படத்திலேயே டைரக்டருக்கு பரமதிருப்தி.
அடுத்து காதல் படுத்தும்பாடு என்ற படத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார். இந்தப்படத்தில் நடிக்கும்போது இவருக்கு 30 வயது தான். ஆனால் 60 வயது கிழவராக நடித்து இருப்பார்.
திமுகவின் பிரசார நாடகங்களான ஆகட்டும் பார்க்கலாம், காகிதப்பூ ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார். இவர் காங்கிரஸ்காரராக வேடம் போட்டு அசத்திவிடுவார். இவர் வந்தால் கைதட்டல் காதைப்பிளக்கும். அப்படி ஒரு உற்சாக வரவேற்பு இவருக்குக் கிடைத்தது.
அறிஞர் அண்ணா ஒருமுறை சுருளிராஜனை இப்படி பாராட்டினார். சுருளிராஜன் சிறந்த நகைச்சுவை நடிகர். அவரைப் பயன்படுத்திப் பலன் அடையாவிடில் தமிழ்த்திரை ஒரு சிறந்த நகைச்சுவை நடிகரை அநியாயமாக இழந்ததாகவே நான் கருதுவேன் என்றார்.
சுருளிராஜன் பெரும்பாலான படங்களில் கதாநாயகியின் தந்தையாகவே வலம் வந்தார். நான் படத்தில் ஜெயலலிதாவின் தந்தையாக வந்தார். 70...80களில் தமிழ்த்திரை உலகை ஒரு கலக்கு கலக்கிவிட்டார்.
சுருளிராஜன் தீவிர ஐயப்ப பக்தர். தன்னைப் பார்க்க வந்த எழுத்தாளர் ஆர்.சி.சம்பத்திடம் இவ்வாறு கூறினார்.
மனுசனுக்கு யாரிடத்திலாவது இல்லே, எதன் மேலாவது நம்பிக்கை இருக்கணும். ஏன்னா நம்பிக்கை தான் வாழ்க்கைக்கே அஸ்திவாரம். நம்பிக்கைங்கற ஒண்ணை முழுவதுமா இழந்துடறவங்க தான் சிவனேன்னு ஓடிக்கிட்டிருக்கிற ரயில் முன்னாடி விழுந்து அதை நிறுத்த ட்ரை பண்றாங்க.
இல்லேன்னா மூட்டைப்பூச்சிக்குன்னு வச்சிருக்கிற மருந்தைக் குடிச்சிட்டுப் பாவம் மூட்டைப்பூச்சியைத் தவிக்க விட்டுறாங்க...என்று தமக்கே உரிய நகைச்சுவையில் தத்துவத்தை உதிர்த்தார்.
இவர் சினிமாவில் மட்டுமல்ல...நிஜத்திலும் இவர் மன்னர் தான்..!