மாரி செல்வராஜ் ஜாதிய திணிக்கிறாரு- காமெடி நடிகரின் பேட்டியால் வெகுண்டெழுந்த ரசிகர்கள்…
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “மாமன்னன்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் போன்ற பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளிவந்தது. இப்பாடலை வடிவேலு பாடியிருந்தார். எளிய மனிதனின் துயரத்தை கூறுவது போல் அந்த பாடல் அமைந்தது. வடிவேலுவின் குரல் அப்பாடலை கேட்பவர்களின் இதயத்தை கணமாக்குவது போல் இருந்தது. அந்த பாடலை கேட்டவுடன் கண்ணீர் வந்துவிட்டதாக பலரும் கூறிவருகின்றனர்.
மாரி செல்வராஜ் இதற்கு முன்பு இயக்கிய “பரியேறும் பெருமாள்”, “கர்ணன்” ஆகிய திரைப்படங்கள் ஜாதி வேற்றுமையை அடிப்படையாக வைத்து உருவான திரைப்படங்கள் ஆகும். இத்திரைப்படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தாலும் ஒரு பக்கம் இத்திரைப்படத்திற்கு விமர்சனங்களும் எழுந்தது.
இந்த நிலையில் வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்த சக காமெடி நடிகரான டெலிஃபோன் ராஜ், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அதில் அவர், “மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படங்கள் அத்தனையும் ஜாதி அரசியல் பேசுவதுதான். கூடிய விரைவில் மாரி செல்வராஜே அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இந்த காலகட்டத்தில் நாம் ஜாதி ஒழிய வேண்டும் என முயற்சி செய்து வருகிறோம். என்றைக்கோ நடந்த விஷயத்தை மீண்டும் ஜாதியை கொண்டு திணிப்பது போல் இருக்கிறது. இது ஒரு நல்ல செயல் கிடையாது. ஏன் வெள்ளைக்காரனை பற்றி எடுக்கமாட்டிக்கிறீங்க. அவுங்க பண்ணாத கொடுமையா?” என பேசியிருந்தார்.
டெலிஃபோன் ராஜின் இந்த பேட்டியால் ரசிகர்கள் பலரும் கொந்தளித்து வருகின்றனர். கம்மெண்ட்டுகளில் “தாழ்த்தப்பட்டவர்களின் வலியை கூறினால் எப்படி ஜாதி படம் ஆகும்” என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.