தேங்காய் சீனிவாசனுடன் படத்தில் மெய்மறந்து நடித்த நடிகை....அட...இது தான் காரணமா..?!
தமிழ்த்திரை உலகில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் உள்ளனர். இவர்களில் கண்களை உருட்டி உருட்டி நகைச்சுவையாகப் பேசி தான் சிரிக்காமல் பிறரை மகிழ்விக்கும் நடிகர் யார் என்றால் நமக்கு சட்டென நினவுக்கு வருபவர் தேங்காய் சீனிவாசன்.
ரஜினிகாந்துடன் இவர் நடித்த தில்லுமுல்லு படத்தை யாராலும் மறக்க முடியாது. இது தவிர மாவீரன், முரட்டுக்காளை, படிக்காதவன், பில்லா, ஆறிலிருந்து அறுபது வரை, நெற்றிக்கண், மூன்று முகம் என பல படங்களில் இவர் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார்.
தேங்காய் சீனிவாசன் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர். ராஜவேலு -சுப்பம்மாள் தம்பதியின் 3 குழந்தைகளில் கடைக்குட்டி சிங்கம் இவர் தான். 26.10.1937ல் பிறந்தார். தனது 7வது வயதிலேயே சென்னைக்கு வந்துவிட்டார். தந்தை ராஜவேலு ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தனது மகனுக்கு நடிப்புத் துறையில் திடீரென ஏற்பட்ட ஆர்வம் அவனை ஒரு திறமை மிக்க நடிகனாக ஆக்கிவிட்டது கண்டு தந்தை மிகவும் மகிழ்ந்தார்.
தேங்காய் சீனிவாசனுக்கோ நடிப்புத்துறையில் இருந்த ஆர்வம் போகப்போக வெறியாக மாறிவிட்டது. தனது கலையுலக வளர்ச்சிக்கு உத்தியோகம் ஒரு தடையாக இருப்பதாக நினைத்தார். அதனால் தான் பார்த்த வேலையை விட்டு விட்டு சினிமாவில் முழுநேர நடிகராகி விட்டார்.
நடிப்புத்துறையின் தனக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி என்று தேங்காய் சீனிவாசன் இவ்வாறு சொல்கிறார்.
நான் என் பெற்றோருக்கு ஒரே மகன். கவலையின்றி வாழ்ந்தவன். பொழுது போக்குவதற்காக வருபவர்களை மகிழ்விக்க வேண்டும். அப்படி செய்யாமல் குடும்பக்கவலைகளை கிளறி விடக்கூடாது. அப்படி நினைத்துத் தான் நான் நடித்தேன்.
அதற்காக நகைச்சுவை வேடத்தில் நடித்தேன். எடுத்த எடுப்பிலேயே ஜனாதிபதி பரிசு பெற்றேன். அதையே தொடர்ந்தேன். இடையே நான் கதறி அழுத நாள்களும் உண்டு. இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்பதற்காகவே மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதற்காகவே நகைச்சுவை பாத்திரத்தில் நடித்தேன்.
சினிமா உலகில் நான் நுழைய காரணமாக இருந்தவர்கள் கண்ணன், ரவீந்தர். இவர்களை மறக்கவே முடியாதுர். கல்மனம் நாடகத்தால் தான் நான் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தேன்.
டங்கன் எனக்காக பெர்னாண்டஸிடம் சிபாரிசு செய்தார். டங்கன் என்னை நடிகராக்கியது மட்டுமல்லாமல் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்ற வைத்தார்.
ஒரு விரல் படத்தைப் போட்டுப் பார்த்த ஆர்.சுந்தரம் துணிவுடன் அவரது படத்தில் நகைச்சுவை நடிகராக்கி விட்டார். கதாசிரியர் ஏ.எல்.நாராயணன். நடிகர் ஜெய்சங்கர் மற்றும் சக நடிகர்களும் பெரிதும் ஊக்கமூட்டினர்.
ஒரு விரல் படத்தில் தேங்காய் சீனிவாசனின் நடிப்பைப் பாராட்டாதவர்களே இல்லை. அதுமட்டுமல்லாமல் அவர் திறமையைக் கண்டு வெகுவிரைவில் நகைச்சுவை நடிகராகி விடுவார் என்றும் சொன்னார்கள்.
நாடக அனுபவமும் ஆர்வமும் கொண்ட அவர் அப்படத்தில் ரொம்பவே அற்புதமாக அதே நேரத்தில் இயல்பாக நடித்து அசத்தினார். டைரக்டரும், தயாரிப்பாளரும் ஊக்கம் கொடுத்ததால் முதல் படம் என்ற பயமோ கூச்சமோ இல்லை.
படத்தில் உள்ள அனைவரும் புதியவர்கள் தான். தயாரிப்பாளர்கள், டைரக்டரும் புதியவர்கள் தான்.
ஆர்வமும், உழைப்பும் மேடை அனுபவமும் ஒன்று சேர்ந்து தேங்காய் சீனிவாசனை சிறந்த நகைச்சுவை ஜாம்பவானாக மாற்றியது.
இன்னொரு தடவை நடிப்புத் துறைக்கு நீங்கள் வர என்ன காரணம் என்று கேட்ட ஒரு பத்திரிகை நிருபருக்கு இவ்வாறு பதில் அளித்தார்.
அது விளையாட்டாக ஏற்பட்டது. இந்த ஊதியத்தையே மையமாக வைத்து வாழ்க்கை நடத்துவேன் என்பது கனவு கண்டது போல் இருக்கிறது. ரயில் பெட்டித் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது ரயில்வே வார விழாவில் முதன் முதலில் ஒப்பனை செய்து கொண்டு கலாட்டா கல்யாணம் என்ற ஒரு நாடகத்தில் நடித்தேன்.
அப்போது பிரசிடெண்டு அவார்டு வாங்கியதன் காரணத்தால் கலைத்துறையின் ஆரம்பப் படியிலேயே வெற்றியை அடைந்ததால் அடுத்து கலைத்துறையில் மிகவும் ஈடுபாடு ஏற்பட்டது.
நடிப்புத்துறையையே முழுக்க முழுக்க நாடிச் செல்லாமல் ஆற்றில் ஒரு காலும், சேற்றில் ஒரு காலுமாக நின்றேன். கலைத்துறையும் ரயில்வே பணியும் என்னை இழுத்துப் பறித்துக் கொண்டு இருந்தன.
ஜோசப் தளியத் நாடகத்தைப் பார்த்து தன்னுடைய இரவும் பகலும் என்ற படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தார். அந்தப்படத்தின் நகைச்சுவை நடிகனாக 3000 அடி வரை நடிக்க வைத்து படமாக எடுத்தனர். அதன்பின் வியாபார நோக்கம் கருதி என்னை கேன்சல் செய்துவிட்டார்.
அன்று முதல் எனக்கு இரவும் இல்லை. பகலும் இல்லை என்றாகி விட்டது. படத்தை நம்பி ரயில்வே வேலையையும் விட்டு விட்டேன். ஜோசப் தளியத் என்னை படத்தில் இருந்து நீக்கியிருக்கா விட்டால் இன்று நான் 400 படங்களுக்கு மேலாக நடித்திருக்க மாட்டேன். வீம்பும் வைராக்கியமும் ஏற்பட்டு இருக்காது.
அதிர்ஷ்டம் அழைக்கிறது, கலியுகக்கண்ணன் படங்களில் என்னுடன் இணைந்து நடித்த சௌகார் ஜானகி தன்னை மறந்து நடித்ததாக அவரே சொன்னார்.
அதற்கு காரணம் காட்சி அமைப்பும், அதற்கு உகந்த வசனங்களும் திறமையான இயக்குனரும் என்பதோடு நானும் உணர்ச்சிவசப்பட்டு காட்சியோடு இணைந்து விட்டேன் என்று சொன்னார்.