இளையராஜாவுடன் ஏற்பட்ட மோதல்??… இசையமைப்பாளராக அவதாரம் எடுத்த பாக்யராஜ்… ஓஹோ இதுதான் காரணமா??
திரைக்கதை மன்னர் என்று போற்றப்படும் கே.பாக்யராஜ், தனது தனித்துவமான நடிப்பாலும், சுவாரஸ்யமூட்டும் கதையம்சத்தாலும் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். 1980களில் பாக்யராஜ்ஜிற்கு என்றே தனி மார்கெட் இருந்தது. அவரது திரைப்படங்களுக்கென்று பெரும்பான்மையான ரசிகர் கூட்டமும் இருந்தது.
பாக்யராஜ் இயக்கி நடித்த பல திரைப்படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்து வந்தார். எனினும் ஒரு கட்டத்தில் பாக்யராஜ்ஜே அவரது திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். “இது நம்ம ஆளு” திரைப்படம்தான் பாக்யராஜ் இசையமைத்த முதல் திரைப்படமாகும்.
பாக்யராஜ் இசையமைப்பாளாராக உருவானதற்கு இளையராஜாவுடன் ஏற்பட்ட மோதல்தான் காரணம் என அப்போது பல பேச்சுக்கள் அடிபட்டன. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கே.பாக்யராஜ், இளையராஜாவுடன் ஏற்பட்ட சிக்கல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
“நான் இயக்க இருந்த புதிய திரைப்படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் முடிந்த பிறகு இளையராஜாவை ஒப்பந்தம் செய்ய அவரது ஸ்டூடியோவிற்கு சென்றிருந்தேன். அங்கே இருந்த இளையராஜாவின் உதவியாளரிடம் விவரத்தை கூறினேன். அப்போது அந்த உதவியாளர் ‘இளையராஜா சாரை வீட்டிற்கு போய் சந்தித்து பேசுங்கள்’ என கூறினார்.
அதற்கு நான் ‘இது என்ன புதுசாக இருக்கிறது. எப்போதுமே அவரை அலுவலகத்தில்தானே சந்திப்பேன். ஏன் அவரை தனியாக வீட்டிற்கு சென்று வேறு பார்க்கவேண்டும். எனக்கு புரியவில்லையே’ என கேட்டேன். அதற்கு அவர் ‘இப்போதெல்லம் பலரும் அவரை வீட்டிற்குச் சென்றுதான் சந்திக்கிறார்கள்’ என கூறினார்.
இதையும் படிங்க: டைட்டானிக் ஹீரோயினின் காதலுக்கு தூது போன மிர்ச்சி சிவா… எல்லாம் நேரம்தான்!!
உடனே அவரிடம் ‘இது என்ன புதிய வழக்கமாக இருக்கிறது. ஒரு வேளை அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் வீட்டிற்குச் சென்று பார்க்கலாம். தொழில் ரீதியாக எதற்கு வீட்டிற்குச் சென்று பார்க்கவேண்டும்?’ என கேட்டுவிட்டு ’இளையராஜாவிடம் நான் வந்துபோனதாக கூறுங்கள்’ என சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டேன். ஆனால் அதன் பின் என்ன நடந்தது என தெரியவில்லை. இளையராஜாவிடம் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை” என அப்பேட்டியில் கூறியிருந்தார்.
மேலும் பேசிய அவர் “இந்த சம்பவத்திற்கு பிறகு ஒரு கட்டத்தில் எனக்கு தெரிந்த சுதாகர் என்ற நண்பரிடம் நான் இசை பயில தொடங்கினேன். இப்படித்தான் “இது நம்ம ஆளு” திரைப்படத்திற்கு இசையமைத்தேன்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.