லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம். இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், மலையாள நடிகர் சௌபின் சாஹிர், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பரபர ஆக்சன் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜுடன் ரஜினி கூட்டணி அமைத்ததால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. அதோடு, முதல் 1000 கோடி வசூலை அள்ளும் திரைப்படமாக கூலி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அனிருத்தின் பாடல்களும், படம் தொடர்பான வீடியோக்கள் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த படத்திற்கு பெரிய ஹைப் உருவானது. ஆனால் படம் வெளியான பின் கூலி திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. கதை திரைக்கதையில் லோகேஷ் கனகராஜ் கோட்டை விட்டுவிட்டார்.. படம் சுவாரசியமாக இல்லை.. என்றெல்லாம் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள்.
ஆனாலும் இப்படம் 500 கோடி வசூலை பெற்றது. இந்நிலையில்தான் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘ஜென் சி ரசிகர்கள் கூலி படம் நன்றாக இல்லை என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்கள். ஆனால் நான் விமர்சனங்களை வைத்து ஒரு படத்தை மதிப்பிட மாட்டேன்.
கூலி திரைப்படத்தை ஓடிடியில் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்தது. ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன். எந்த காட்சியும் எனக்கு போர் அடிக்கவில்லை. படத்தின் விமர்சனங்களை வைத்து ஏன் இவ்வளவு நாட்கள் படத்தை பார்க்காமல் விட்டோம் என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்’ என படத்தை பாராட்டி பேசியிருக்கிறார்.
