ரிலீஸே ஆகல...ஆனால் கோடிக்கணக்கில் லாபம் பார்த்த ஆர்ஆர்ஆர் படம்....!
பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் இளம் நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தான் ஆர்ஆர்ஆர். பாகுபலி படத்திற்கு பின்னர் இந்திய சினிமாவில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் என்றால் அது ஆர்ஆர்ஆர் படம் தான்.
இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு அனைத்து மொழிகளிலும் பயங்கர எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதேபோல் அனைத்து மொழிகளிலும் படத்திற்கான புரமோஷன் பணிகளும் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
படம் விரைவில் வெளியாக போகிறது என்ற மகிழ்ச்சியில் ரசிகர்கள் இருந்த சமயத்தில் திடீரென படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் படக்குழுவினர் இந்த முடிவை எடுத்துள்ளனர். அதன்படி ஆர்ஆர்ஆர் படம் மூன்று மாதங்கள் கழித்து ஏப்ரல் 28 ஆம் தேதி நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம். முன்னதாக படம் ஜனவரி 7 ஆம் தேதி வெளியாக இருந்த சமயத்தில் படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் பல கோடிக்கு விற்பனையாகி விட்டதாம்.
ஆனால் தற்போது படத்தின் வெளியீடு தள்ளி சென்றுள்ளதால் அந்த டிக்கெட் தொகையினை திருப்பி அளிக்கும் பணி நடைபெற்று வருகிறதாம். ஆர்ஆர்ஆர் படத்தின் டிக்கெட் முன்பதிவு சர்வீஸ் சார்ஜில் மட்டுமே கோடிக்கணக்கில் லாபம் கிடைத்துள்ளதாம். அப்படியெனில் படம் வெளியானால் நிச்சயம் வசூலை வாரி குவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.