தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட் நுனியில் அமர வைத்து மிரட்டியதில் டிமான்ட்டி காலனிக்கு ஸ்பெஷல் இடமே உண்டு. இன்றும் அந்த படத்தை பார்த்து பார்த்தால் நிச்சயம் அல்லு விடும்.
கடந்த 2015-ம் ஆண்டு இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் டிமான்ட்டி காலனி . ஒரு பக்கா ஹாரர் த்ரில்லராக வந்த இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்ட் செட்டராக மாறியது. நான்கு நண்பர்கள், ஒரே அறை, ஒரு சங்கிலி என மிகவும் குறைவான பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்தது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான டிமான்ட்டி காலனி 2 திரைப்படமும் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கவில்லை. முதல் பாகத்தின் கதையோடு ஒன்றிணைத்து, விறுவிறுப்பை சற்றும் குறைக்காமல் மிரட்டலான திரைக்கதையுடன் வெளியான இரண்டாம் பாகமும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை கொடுத்தது.
இரண்டு பாகங்களின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து, தற்போது டிமான்ட்டி காலனி 3 மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதிலும் அருள் நிதி, பிரியா பவானி சஙகர் ஜோடி இணைந்து நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ‘டிமான்ட்டி காலனி 3’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இது குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர்.





