ரஜினிதான் ஹீரோ! கன்ஃபார்ம்… விட்ட வாய்ப்பை மறுபடியும் பிடித்த ஹிட் இயக்குனர்…
கடந்த 2020 ஆம் ஆண்டு துல்கர் சல்மான், ரீது வர்மா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. இத்திரைப்படம் யாரும் எதிர்பாரா வகையில் மாபெரும் வெற்றிபெற்றது.
டிவிஸ்ட்டுக்கு மேல் டிவிஸ்ட்டுகளால் நிறைந்த காட்சிகள் படம் முழுவதும் இடம்பெற்றிருந்ததால், ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். வித்தியாசமான கதையம்சமும் விறுவிறுப்பான திரைக்கதையும் பார்வையாளர்களை நகத்தை கடிக்க வைத்தது. அந்த அளவுக்கு சிறப்பான திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்தது.
“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” திரைப்படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி. இவர் அத்திரைப்படத்தில் நடித்த நிரஞ்சனியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி, ரஜினியிடம் கதை சொன்னதாகவும், ரஜினியும் அந்த கதைக்கு ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது. ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை, இது குறித்த அப்டேட் எதுவும் வெளிவரவில்லை.
இதனிடையே ரஜினிகாந்த், நெல்சன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். தற்போது நெல்சன் இயக்கும் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
ஒரு முறை தேசிங்கு பெரியசாமியிடம் இது குறித்து கேட்டபோது “ரஜினி சாரை வைத்து இயக்குவதாக இருந்தது. ஆனால் எதுவும் கைக்கூடவில்லை” என கூறினார். இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்று வந்துள்ளது.
“தலைவர் 170” திரைப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கப்போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இத்திரைப்படத்தை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி ரஜினிகாந்தை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளாராம். ரஜினிகாந்த்தின் 171 ஆவது திரைப்படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதற்கான ஆரம்பக்கட்ட ஸ்கிரிப்ட் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறதாம்.
இதற்கு முன் ரஜினியை இயக்கும் வாய்ப்பை தவறவிட்ட தேசிங்கு பெரியசாமி, தற்போது ரஜினியை வைத்து மீண்டும் இயக்கப்போவதாக தகவல் வருகிறது. இந்த முறையாவது இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொள்வாரா??