படத்தின் காட்சிகளை நீக்கியதால் தேவா மீது விழுந்த திருட்டு பழி… ஓஹோ இதுதான் விஷயமா?
இசையமைப்பாளர் தேவா, கானா பாடல்களுக்கு பெயர் போன இசையமைபபளர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனினும் அவரை இணையவாசிகள் காப்பி கேட் என்று கிண்டல் செய்வதும் உண்டு.
இந்த நிலையில் தான் கந்த சஷ்டி கவசத்தை காப்பியடித்ததாக தன் மேல் விழுந்த குற்றச்சாட்டை தெளிவுப்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் தேவா. சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட அவர் இது குறித்து பேசியுள்ளார்.
1992 ஆம் ஆண்டு சரத்குமார், ரோஜா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “சூரியன்”. இத்திரைப்படத்தை பவித்ரன் இயக்கியிருந்தார். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இதில் “பதினெட்டு வயது இள மொட்டு மனது” என்று ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும். அப்பாடல் கந்த சஷ்டி கவசம் பாணியில் அமைந்திருக்கும்.
ஆதலால் தேவா இந்த பாடலை காப்பி அடித்துவிட்டார் என்று பலரும் கூறிவிட்டார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், அத்திரைப்படத்தில் சரத்குமாருக்கும் ரோஜாவுக்கும் திருமணம் ஆனப்பிறகு ஒரு காட்சியில் சரத்குமார் கந்த சஷ்டி கவசம் கேட்டுக்கொண்டிருப்பாராம். அப்போது ரோஜா அவரிடம் வந்து “என்னய்யா இந்த நேரத்துல கந்த சஷ்டி கவசம் கேட்டுட்டு இருக்க, உள்ள வா, நான் ஒரு கந்த சஷ்டி கவசம் காட்டுறேன்” என கூறி அவரை உள்ளே அழைத்துக்கொண்டுப் போவாராம். இந்த இடத்தில்தான் அந்த பாடல் வருமாம்.
ஆதலால் இயக்குனர் பவித்ரன், கந்த சஷ்டி கவசம் பாணியிலேயே ஒரு பாடலை உருவாக்குங்கள் என தேவாவை கேட்டிருந்தாராம். அப்படி உருவாக்கிய பாடல்தான் “பதினெட்டு வயது” பாடல்.
ஆனால் அந்த படம் வெளியானபோது அந்த பாடலுக்கு முந்திய காட்சியை நீக்கிவிட்டார்களாம். ஆதலால் “அந்த பாடலை நான் காப்பி அடித்துவிட்டேன் என்று என்னை குற்றம் சாட்டிவிட்டார்கள்” என தேவா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.