லால் சலாம் படத்துல நான் பாடினதுக்கு அவன்தான் காரணம்!.. உருக்கமாக பேசும் தேவா!....
லால் சலாம் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தில் அன்பாலனே என்ற பாடலை தேனிசைத் தென்றல் தேவா பாடியுள்ளார். இந்தப் பாடல் ஒரு அற்புதமான இறை அனுபவத்தைப் பெற்றுத் தரும். பாடலைக் கேட்கும் நமக்கே இப்படி என்றால், பாடலைப் பாடிய தேவாவின் அனுபவம் எப்படி இருக்கும்? அவர் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா...
லால் சலாம் எனக்கு ஒரு அற்புதமான திருப்புமுனை. என்னோட மியூசிக்ல நான் கானா பாட்டுத் தான் பாடுவேன். கானா தான் மெயின். நான் மியூசிக் பண்ற படங்கள்;ல 400க்கும் மேல இருக்கு. நிறைய மெலோடி பாட்டுக்கள்லாம் இருக்கு. கம்போஸ் பண்ணிருக்கேன். வேற பாடகர்கள் பாடுவாங்க.
ஆனால் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானோ இந்தப் பாட்டைக் கம்போஸ் பண்ணி என்னைக் கூப்பிடணும்னு அவருக்கு எப்படி தோணுச்சோ தெரியல. அது எனக்கு ஒரு பெரிய ஆச்சரியம். என்னை ரெக்கார்டிங் கூப்பிட்டாரு. எனக்கு லிரிக்ஸ் கொடுத்தாரு. டியூன் சொல்லிக் கொடுத்தாரு. டியூன் நான் பிராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன்.
அப்போ நான் நினைச்சேன். இப்படி ஒரு அற்புதமான மெலோடியா? இறைவனை அப்படியே நேரடியா வேண்டுற மாதிரியே இருக்கும். அந்தப் பாட்டும் சரி. டியூனும் சரி. இறைவனை நேரடியா பார்த்து கதறி அழுற மாதிரி இருக்கும்.
அதுதான் எனக்கு ஆச்சரியம். இந்தப் பாட்டை என்னைக் கூப்பிட்டு எதுக்கு பாடச் சொன்னாங்க? இறைவனோட அருள் தான் காரணம். ஏஆர்.ரகுமான் தம்பி பக்குவமா குழந்தையை தாலாட்டுற மாதிரி வேலை வாங்கினாரு.
திடீர்னு ஆடியோ லாஞ்ச் அன்னைக்கு இந்தப் பாட்டை ஸ்டேஜ்ல பாடணும்னு சொல்லிட்டாங்க. நான் பாடுவேன். ஆனா என்னோட சூழல் அப்படி ஒரு இருமல். 10 நாளா தூங்கவும் முடியாது. எப்படி நான் பாடுவேன். அவ்ளோ ஒரு இருமல். ஆடியோ லாஞ்ச் அன்னைக்கு கேரவன்ல இருக்கேன். இட்லியைத் தவிர காபி, சமோசான்னு எதுவும் சாப்பிடல.
ஆனா ஸ்டேஜிக்குக் கூப்பிடும்போது எனக்கு இருமல். பாட்டைப் பாடுவேனான்னு தெரியல. அன்னைக்குத் தான் இறைவன் இருக்காங்கன்னு. அதைத் தெரிஞ்சிக்கிட்டேன். ரஜினி, ஏ.ஆர்.ரகுமான், சுபாஸ்கரன்னு எல்லாரும் இருக்காங்க. மேல போயி பாடும்போது நான் எப்படிக் கட்டுப்படுத்துவேன் இறைவா? இறைவனை வேண்டுறேன். இறைவா பத்து நிமிஷம் மட்டும் எனக்கு இருமலை நீக்கி விடு இறைவா. பாடிட்டு வந்த பிறகு வந்தா பரவாயில்லை.
அற்புதமா நின்னு பாடிட்டு வந்தேன். எனக்கு அப்போ யாருமே தெரியல. இருமலுக்குப் பயந்தே பாடி முடிச்சிட்டேன். வந்து உட்கார்ந்தேன். இருமல் வந்துடுச்சு, அவ்வளவு தான். இறைவனிடம் பத்து நிமிஷம் கேட்டேன். தந்துட்டான். அப்புறம் இப்போ கொஞ்சம் பரவாயில்லை. இவ்வாறு தேனிசைத் தென்றல் தேவா தெரிவித்துள்ளார்.