தமிழ் சினிமாவில் தனக்கென தனி இசை பாணியை உருவாக்கி ரசிகர்களை கவர்ந்தவர் இசையமைப்பாளர் தேவா. குறிப்பாக கானா பாடல்களை தமிழ் சினிமாவில் பிரபலப்படுத்தியதில் அவருக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்நிலையில், கானா இசையை தான் ஏன் கொண்டு வந்தேன் என்பது குறித்து தேவா சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மீசைய முறுக்கு 2. படம் வெளிவந்த நாள் முதல் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதால் வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிரது இப்படம்.
இந்த நிலையில் மீசைய முறுக்கு 2 படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இசையமைப்பாளர் தேவாவும் கலந்துகொண்டு பேசினார். அப்போது, மீசைய முறுக்கு 2 படத்தின் வெற்றி மற்றும் இளம் தலைமுறையினர் மத்தியில் கானா இசைக்கு இருக்கும் வரவேற்பு குறித்தும் அவர் பேசினார்.

அவர் பேசியபோது, நான் வந்த காலத்தில் ஒரு பக்கம் இளையராஜா சார் இருந்தார். இந்தப் பக்கம் ஏ.ஆர்.ரஹ்மான் தம்பி இருந்தார். நான் எந்தப் பாட்டு போட்டாலும் ஒன்று ராஜா சார் மாதிரி இருக்கும், இல்லையென்றால் ரஹ்மான் மாதிரி இருக்கும். இதை பத்திரிகைகளில் கழுவி ஊற்றுவார்கள். அப்போதுதான் நமக்கென ஒரு முத்திரை வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகத்தான் கானா பாடலை கொண்டு வந்தேன் என்று தெரிவித்தார்.




