Cinema News
தனுஷுக்கு மாஸ் ஹிட் ஆன பாடல்… ஆனா யாருக்கும் பிடிக்கல… புதுசால்ல இருக்கு!!
கடந்த 2003 ஆம் ஆண்டு தனுஷ், சாயா சிங், கருணாஸ் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “திருடா திருடி”. இத்திரைப்படம் தனுஷுக்கு திருப்புமுனையான திரைப்படமாக அமைந்தது. மேலும் இத்திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது.
காமெடி, செண்ட்டிமென்ட், காதல் என கலந்துகட்டிய ஒரு பக்கா கம்மெர்சியல் திரைப்படமாக இத்திரைப்படம் உருவாகியிருந்தது. தனுஷ், சாயா சிங் ஆகியோர் திரைப்படத்தின் தொடக்கத்தில் மோதிக்கொள்வார்கள். அதன் பின் அவர்களின் மோதல் காதலாக மாறும். இருவருக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகியிருந்தது.
மேலும் இத்திரைப்படத்தில் நடித்திருந்த தனுஷ், கருணாஸ், சாயா சிங் என பலரும் நகைச்சுவையில் பிச்சு உதறியிருப்பார்கள். தனுஷ், சாயா சிங் மோதும் காட்சிகள் அனைத்தும் நகைச்சுவையாகவே அமைந்திருக்கும். இது போக இத்திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது இதில் இடம்பெற்ற பாடல்கள்.
இசையமைப்பாளர் தினா இசையில் பாடல்கள் அனைத்தும் தாறுமாறான ஹிட். அனைத்து பாடல்களும் துள்ளல் ரகம் கொண்டவை. எனினும் “திருடா திருடி” திரைப்படம் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது “மன்மத ராசா” பாடல்தான்.
தனுஷும் சாயாசிங்கும் புயல் போல் நடனமாடிய பாடல் அது. இப்பாடல் வெளிவந்த சமயத்தில் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டே இருந்தது. எந்த விழாவாக இருந்தாலும் இப்பாடலுக்கே நடமாடினார்கள். அந்த அளவுக்கு மக்களிடம் பின்னி பிணைந்துகொண்டது இப்பாடல்.
இந்த நிலையில் இப்பாடல் குறித்து ஒரு சுவாரசியமான பின்னணியை சமீபத்தில் பகிர்ந்துகொண்டார் இத்திரைப்படத்தின் இயக்குனர் சுப்ரமணியம் சிவா. அதில் “திருடா திருடி திரைப்படத்தில் டூயட்டே இருக்காது. ஆதலால் அந்த திரைப்படத்தின் இறுதியில் வேகமான பாடல் ஒன்றை இடம்பெறச்செய்யவேண்டும் என நினைத்தேன். ஆனால் அந்த பாடல் உருவானபோது யாருக்கும் அந்த பாடல் பிடிக்கவில்லை.
பலரும் அப்பாடல் வேண்டாம் என்று கூறினார்கள். அந்த பாடல் படத்துக்குத் தேவை இல்லாத பாடல் என பலரும் கூறினர். ஆனால் நான் தயாரிப்பாளரிடம் இப்பாடல் படத்தில் இடம்பெற வேண்டும் என வற்புறுத்திக்கொண்டே இருந்தேன். அதன் பின்தான் இப்பாடல் இத்திரைப்படத்தில் இடம்பெற்றது. இப்பாடல் வெளியான பின் அது திடீரென பரபரப்பான பாடலாக மாறியது” என கூறியுள்ளார்.
ஒர்க் அவுட்டே ஆகாது என்று அனைவரும் நினைத்த பாடல் காலத்திற்கும் பேசப்படும் பாடலாக அமைந்தது என்பது ஆச்சரியமே!!