இரட்டை வேடத்தில் மிரட்டும் தனுஷ்…தூக்கலா? சொதப்பலா?.. “நானே வருவேன்” திரை விமர்சனம்
தனுஷ் நடிப்பில் எந்த வித புரோமோஷனும் இல்லாமல் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் “நானே வருவேன்”. இத்திரைப்படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, புவன் ஸ்ரீநிவாசன் எடிட்டிங் செய்துள்ளார். கலைப்புலி எஸ் தாணு இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் “நானே வருவேன்” திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்..
கதை
கதிர், பிரபு என இரண்டு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். கதிராக வரும் தனுஷ் சிறுவயதிலேயே வித்தியாசமாக நடந்துகொள்கிறார். மேலும் ஒரு பெண்ணின் ஆடையையும் எரித்துவிடுகிறார். கதிரின் பெற்றோர் அவரை அடித்து ஊர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வைக்கின்றனர்.
அதன் பின் ஒரு வேட்டைக்காரனாக வரும் செல்வராகவனிடம் கதிருக்கு பழக்கம் ஏற்படுகிறது. இவ்வாறு இருக்க இரண்டு தனுஷ்களும் வளர்கின்றனர்.
பிரபுவாக வரும் தனுஷிற்கு மனைவியும் ஒரு மகளும் இருக்கிறார்கள். மூவரும் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார்கள். இதனிடையே ஒரு நாள் பிரபுவாக வரும் தனுஷின் மகளுக்கு அமானுஷ்யமாக பல சம்பவங்கள் நிகழ்கிறது. அதன் மூலம் கதிரை பற்றிய கதையும் அவர் செய்யும் கொடுமைகளும் பிரபுவுக்கு தெரியவருகிறது. பிரபுவாக வரும் தனுஷ் தனது மகளை காப்பாற்றினாரா? கதிரை அவர் என்ன செய்தார்? என்பதே “நானே வருவேன்” திரைப்படத்தின் கதை.
பிளஸ்கள்
தனுஷ் இரட்டை வேடத்தில் மிரட்டியுள்ளார். கதிராக அவரது வில்லதனமும், பிரபுவாக அவரின் அப்பாவித்தனமும் நன்றாக எடுபட்டிருக்கிறது. பிரபுவாக வரும் தனுஷின் மனைவியாக வரும் இந்துஜா தனது கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மிகவும் குறைந்த நடிகர்களையே வைத்து எடுக்கப்பட்டிருப்பதால் தேவையில்லாத நடிகர்கள் என்று கூறுவதற்கு இடமே இல்லை.
ஹாரர் தன்மை படத்திற்கு மேலும் வலு கூட்டுகிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மிரட்டி எடுத்திருக்கிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதவு டெரர். படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது.
மைனஸ்கள்
படத்தின் முதல் பாதி சிறப்பாகவே அமைந்திருந்தாலும், இரண்டாம் பாதி அரைத்த மாவையே அரைப்பது போல் இருக்கிறது. கணிக்ககூடிய காட்சிகளாகத்தான் இருக்கிறது என்றாலும் இரண்டாம் பாதியில் புதிதாக எதுவும் இல்லாதது பார்வையாளர்களை சோர்வடையவைக்கிறது. முதல் பாதி கொடுத்த அந்த பரபரப்பு இரண்டாம் பாதியில் இல்லை. இயக்குனர் செல்வராகவன் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருந்தால் ஒரு சிறப்பான த்ரில்லர் திரைப்படமாக அமைந்திருக்கும்.
மொத்தத்தில் திரைக்கதை கொஞ்சம் சொதப்பலாக அமைந்திருந்தாலும் , தனுஷின் மிரட்டலான நடிப்பிற்காகவே ஒரு முறை “நானே வருவேன்” க்கு போய் வரலாம்..