தனுஷ் நடிக்க வேண்டிய படம்… ஆனால் சிம்புவுக்கு அடித்த பிளாக் பஸ்டர்… செம மேட்டரா இருக்கே!!
ஒரு நடிகர் தனக்கு வரும் கதைகளை தேர்வு செய்வதில் மிகவும் உஷாராக இருப்பார். ஆனாலும் சில நேரங்களில் அத்திரைப்படங்கள் தோல்வியை தழுவிவிடும். சில திரைப்படங்களின் கதையை அவர் நிராகரித்திருப்பார். ஆனால் அந்த கதை வேறு ஒரு நடிகருக்குச் சென்று மாஸ் ஹிட் ஆகிவிடும். இது போன்ற சம்பவங்கள் சினிமாவில் நடைபெறுவது சகஜம்தான்.
இந்த நிலையில்தான் தனுஷிற்கு அப்படிப்பட்ட ஒரு கதை வந்தது. ஆனால் அவர் நிராகரித்தப்பின் அந்த கதையில் சிம்பு நடித்தார். அத்திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. அதுமட்டுமல்லாது சிம்புவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகவும் அத்திரைப்படம் அமைந்தது.
பதிமூன்று வருடங்களுக்கு முன்பு கௌதம் வாசுதேவ் மேனன், ஒரு அழகான காதல் கதையை திரைப்படமாக இயக்க வேண்டும் என நினைத்தாராம். அந்த கதையை முதலில் தெலுங்கில் இயக்க முடிவு செய்த கௌதம் மேனன், மகேஷ் பாபுவிடம் அந்த கதையை கூறினாராம். ஆனால் மகேஷ் பாபு இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
அதன் பின் தமிழிலேயே இத்திரைப்படத்தை இயக்கலாம் என முடிவெடுத்த கௌதம் மேனன், தனுஷிடம் இந்த கதையை கூறினாராம். ஆனால் தனுஷிற்கு கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை என்பதாலும் கால்ஷீட் பிரச்சனைகள் இருந்ததாலும் அவர் ஒப்புக்கொள்ளவில்லையாம்.
இதனை தொடர்ந்து கௌதம் மேனன், இந்த கதையை அப்படியே விட்டுவிட்டு, “சென்னையில் ஒரு மழைக்காலம்” என்ற திரைப்படத்தை இயக்க முடிவெடுத்தாராம். ஆனால் அந்த நேரத்தில்தான் எதிர்பாராவிதமாக சிம்புவிடம் கதை சொல்ல கௌதம் மேனனுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது.
சிம்புவும் அந்த கதைக்கு ஓகே சொல்ல, “சென்னையில் ஒரு மழைக்காலம்” திரைப்படத்தை அப்படியே நிறுத்திவிட்டு “வெண்ணிலவே வெண்ணிலவே” என்ற திரைப்படத்தை இயக்க முடிவு செய்தாராம் கௌதம் மேனன்.
இதனைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, “வெண்ணிலவே வெண்ணிலவே என்ற டைட்டில் வேண்டாம். விண்ணைத்தாண்டி வருவாயா என்று வைத்துக்கொள்ளலாம்” என கூறினாராம். இவ்வாறுதான் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இத்திரைப்படம் சிம்புவின் சினிமா பயணத்தில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் சினிமாவில் அதிகம் ரசிக்கப்பட்ட காதல் திரைப்படமாகவும் அமைந்தது.