அந்தப்படத்துல இருக்குற மொத்த வசனமும் எனக்கு மனப்பாடம்....!!! சிவாஜியையே மிரள வைத்த ஆரூர்தாஸ்
ஆரூர்தாஸ் பிரபல கதை வசன கர்த்தா என்பது நமக்குத் தெரிந்த விஷயம். எம்ஜிஆர், சிவாஜி படங்களின் உயிரோட்டமான வசனங்களை எழுதியவர் இவர் தான். 1000 படங்கள் வரை இவர் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
10.09.1931ல் திருவாரூரில் சந்தியாகு, ஆரோக்கியமேரி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் யேசுதாஸ். ஊர் பெயரையும், தன் பெயரையும் இணைத்து ஆரூர்தாஸ் என வைத்துக் கொண்டார்.
தஞ்சை ராமையாதாஸிடம் கதை மற்றும் வசனம் எழுதும் கலையைக் கற்றார். பேபி என்ற பெண்ணை மணந்து கொண்டார். இவருக்கு 4 பிள்ளைகள்.
பாசமலரால் குவிந்த வாய்ப்புகள்
படித்தால் மட்டும் போதுமா, பாசமலர், பார்மகளே பார், தாய் சொல்லை தட்டாதே, வேட்டைக்காரன், பெற்றால் தான் பிள்ளையா உள்பட பல படங்களுக்கு இவர் வசனம் எழுதி மாபெரும் வெற்றிப்படங்களாக்கினார்.
பாமர மக்களின் மனதிலும் பாசமலர் என்ற சிவாஜியின் படத்தின் மூலம் வசனம் எழுதி ஆழமாகப் பதிந்தவர் ஆரூர்தாஸ். இந்தப்படத்தின் வெற்றியினால் சிவாஜியின் 28 படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பைப் பெற்றார் ஆரூர்தாஸ்.
22 பாட்டுகளும், மொத்த வசனமும் மனப்பாடம்
சிவாஜியிடம் ஒருமுறை ஆரூர்தாஸ் இவ்வாறு சொல்கிறார். நான் பி.யு.சின்னப்பாவோட தீவிர ரசிகன். சின்ன வயசுல மாணவப்பருவத்துல அவரோட நடிப்பையும், வசன உச்சரிப்பையும், கண்டு என் மனசைப் பறிகொடுத்துருக்கேன்.
சின்னப்பா செந்தமிழ் நாடகமன்றம் என்ற பெயரில நண்பர்களை சேர்த்து நாடகமும் நடத்திருக்கேன். அவர் நடிச்ச கண்ணகி படத்தை அவருடைய நடிப்புக்காகவும் இளங்கோவனுடைய வசனத்துக்காகவும் பல தடவை பார்த்து பார்த்து ரசிச்சிருக்கேன்.
அந்தப்படத்துல இருக்குற 22 பாட்டுகளும், மொத்த வசனமும் எனக்கு மனப்பாடம்.
இப்போ கேட்டாலும் சொல்லுவேன். இன்னிக்கு அதுபோல அழகாக வசனம் பேசுறது நீங்க மட்டும்தான். உங்க வசன உச்சரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். முனை முறியாம கடைசி எழுத்து தேஞ்சி கீழே விழாம தெளிவா பேசுறீங்க.
நீங்க சொன்னா மாதிரி பெரிய செட்டுன்னு எனக்கு முந்தியே தெரியும். அந்தப் பயம் எனக்கு இல்ல. உங்களுக்கு எழுத ஒரு சந்தர்ப்பம் கிடைச்சா ஒரு அடி அடிச்சிக் காட்டுங்க. இது உறுதி. பரவாயில்ல. சந்தர்ப்பம் வரும்போது காத்திருக்கேன். இப்போ உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம் என விடைபெற்றார்.
கடந்த சில நாள்களுக்கு முன் (20.11.2022 ல்) உடல்நலக்குறைவால் காலமானார். ஜெமினிகணேசன், ஜெய்சங்கர், ரஜினி, கமல் ஆகியோரின் படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார்.
1000 படங்கள்
1955 முதல் 2014 வரை 1000 படங்களுக்கு ஆரூர்தாஸ் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். சென்னை தி.நகரில் வசித்து வந்தார். இவரைப் பற்றி கவிஞர் வைரமுத்து கூறுகையில், எம்ஜிஆர், சிவாஜி என்ற இரு துருவங்களையும் தமிழால் இணைத்துக்கொண்டு பயணப்பட்டவர் ஆரூர்தாஸ்.
வாகினி, ஏவிஎம், தேவர் பிலிம்ஸ் என்ற 3 நிறுவனங்களுக்கும் செல்லப் பிள்ளையாக இருந்தார். மற்றவர்கள் எல்லாம் நீளமான வசனங்களை எழுதிக்கொண்டு இருந்தபோது குறுகிய வசனங்களில் தனது முத்திரையைப் பதித்தார் என்றார்.
பாக்யராஜ் இவரைப் பற்றி பேசும்போது, நிதி என்ற ஒரு படத்தில் மட்டும் இவருடன் வேலை பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. எல்லாருமே சொல்வாங்க சினிமாவில் சரித்திரமா இருக்குறதுன்னு.
அந்த மாதிரி சினிமா இருக்குற வரைக்கும் இவரோட சாதனை, சரித்திரம் பேசப்படும். அதனால திரை உலகம் வந்து இவருக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கு என்றார்.
கமல் இவரைப் பற்றிக் குறிப்பிடும் போது ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்களுக்குள் கூடு விட்டு கூடு பாய்ந்தவர். என் ஆசிரியர்களுக்கும், எனக்கும், அடுத்து வந்தவர்களுக்கும் கூட வசனம் எழுதியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.