எதற்கும் துணிந்தவன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளதா?
நாட்டில் நடப்பதைத் தான் படமாக எடுக்கிறார்கள். அதனால்... என்ன இப்படி எல்லாமா எடுப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. பொள்ளாச்சி சம்பவத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அதை மீண்டும் நினைவூட்டுகிறது இந்த படம்.
பலான பலான படங்களை எடுத்து இணையதளத்தில் பதிவேற்றி வைரலாக்கி இளம்பெண்களை சீரழிக்கும் சம்பவங்கள் தற்போது நாட்டில் வளர்ந்து வரும் கலாசார சீரழிவாக உள்ளது. இதை எந்த ஒரு தமிழ்சினிமாவும் இத்தனை துணிச்சலாக எடுத்ததில்லை. இந்தப்படத்தில் இயக்குனர் பாண்டிராஜ் இதுபோன்ற சீரழிவு கலாசாரத்திற்கு ஒரு அழுத்தம் கொடுத்துள்ளார்.
அதை சூர்யாவும், பிரியங்கா மோகனும் அழகான நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளனர். கதைக்கு வலு சேர்ப்பது இவர்களின் நடிப்பு தான். விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த கிராமத்து கதைகளம் ரசிகர்களை இருக்கையுடன் கட்டிப்போட்டு விடுகிறது. மாஸான சண்டைக்காட்சிகள் இருக்கையின் நுனிக்குக் கொண்டு செல்கின்றன. டி.இமானின் பின்னணி இசை மிரட்டுகிறது. ரத்னவேலுவின் காமிராவில் வடநாடு, தென்னாடுகளின் இயற்கை அழகு மனதை அள்ளுகிறது.
படத்தின் பிளஸ் பாயிண்ட்டுகள் இப்படி இருக்க படத்தின் மைனஸ் பாயிண்டுகளும் நமக்குத் தெரிய வேண்டும். படத்தில் சூரியின் மொக்கை காமெடி அவ்வளவாக எடுபடவில்லை. அம்மாவான சரண்யா பொன்வண்ணன் சூரியாவைப் பார்த்து போனில் உச்சா போனியாடா என்றெல்லாமா கேட்க வேண்டும்? இது நகைச்சுவைக்கு சேர்த்து இருந்தாலும் ரொம்பவே ஓவராக உள்ளது.
சத்யராஜிக்கு அழுத்தமான நடிப்பு இல்லை. வில்லனுக்கு வேற வேலையே இல்லையா? டாக்டர் படத்திலும் இதுபோல் தான் நடித்து இருந்தார். கிராமத்தில் வக்கீலாகக் கெத்து காட்டும் சூரியாவுக்கு தன் வீட்டில் நடக்கும் அந்தரங்க விஷயங்களில் கூட பாதுகாப்பு இல்லாமல் இருந்தது ஏன் என்ற கேள்விகள் எழுகிறது. சூர்யா படம் கொஞ்சம் வித்தியாசத்தை எதிர்பார்க்கலாம் என்றால் வழக்கமான கிராமத்து மசாலா படமாகத் தான் பார்க்க முடிகிறது.
உள்ளம் உருகுதையா என்ற முருகக்கடவுள் பாடலை இப்படியா எடுக்க வேண்டும் என்று முகம் சுளிக்க வைக்கிறது. இதே பாடலில் கையில் ஆணுறை ஏந்திடவோ என்ற வரிகள் எல்லாம் வருகிறது பாருங்கள். பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கவில்லை.
படத்தில் ஒரு காட்சியில் செல்போன் டவர் சிக்னல் கிடைக்கவில்லை என்றதும் சிஸ்டமே சரியில்லை என்ற டயலாக்கை சூரி பேசுவார். இது ரஜினிகாந்தின் அரசியல் பேச்சை நமக்கு நினைவூட்டுகிறது. ஒரு தேர்ந்த வக்கீலாக வரும் சூர்யா சட்டத்தில் ஓட்டை உள்ளது என்று சொல்லலாமா? உள்ளதைத் தான் சொன்னாலும் அதை அவர் வாயால் சொல்லலாமா? கிளைமாக்ஸ் காட்சியில் அவரால் ஏன் தான் படித்த வக்கீல் படிப்பால் கோர்ட்டில் வாதாட முடியவில்லை என்பது போன்ற சில காட்சிகள் ஜீரணிக்க முடியவில்லை. மொத்தத்தில் கமர்ஷியல் படத்தைப் பார்க்கிறோம் என்ற எண்ணத்தில் பார்க்கச் செல்பவர்கள் படத்தைத் தாராளமாக ஒரு பொழுதுபோக்கு படமாகப் பார்க்கலாம்.