நான் பண்ண பெரிய தப்பு... விஜய் கூட சேர முடியாம போச்சி!..வருந்தும் சேரன்....
தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்கியவர் சேரன். சொல்ல மறந்த கதை திரைப்படம் மூலம் சேரன் நடிகராகவும் மாறினார்.
இவர் இயக்கிய ஆட்டோகிராப் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான திரைப்படமாகும். ஒரு இளைஞன் தன் வாழ்வில் கடந்துவரும் காதல்களை பேசிய திரைப்படம் அது. கல்லூரி மாணவ, மாணவிகள் கூட இப்படத்தை ரசித்து பார்த்தனர். இப்படத்தின் வெற்றிக்கு பின் சேரன் முழு நேர நடிகராகவே மாறினார்.
இப்படத்திற்கு அவர் நடித்து இயக்கிய ‘தவமாய் தவமிருந்து’ திரைப்படம் பலரையும் அழ வைத்தது. ஒரு தகப்பன் தன் இரண்டு மகன்களை எவ்வளவு கஷ்டப்பட்டு கரையேற்றுகிறார் என்பதை உணர்வுபூர்வமாக ஒரு வாழ்வியலாக காட்டியிருந்தார் சேரன். அதன்பின் பல படங்களில் சேரன் நடித்தாலும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. தற்போது மீண்டும் இயக்குனராக மாறியுள்ளார்.
இவர் இயக்கிய ஆட்டோகிராப் படத்தில் முதலில் சேரன் நடிப்பதாக இல்லை. விஜய், சூர்யா, விக்ரம் என பலரிடமும் கதை சொல்லி காத்திருந்தார் சேரன். ஆனால், யாரும் நடிக்க முன்வாரத காரணத்தால் ‘சரி நாமே நடிப்போம்’ என்று அப்படத்தில் நடித்தார். படம் ரிலீசான பின் ‘அட இந்த படத்தை மிஸ் செய்து விட்டோமே’ என அந்த நடிகர் எல்லோருமே வருத்தப்பட்டனர். இதில் விஜயும் ஒருவர்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு யுடியூப்பில் பேட்டி கொடுத்த சேரன் ‘ஆட்டோகிராப் படத்திற்கு பின் என்னை அழைத்து விஜய் கதை கேட்டார். விஜய் மிகவும் சின்சியராக கதை கேட்பார். 2 மணி நேரம் கதை சொன்னேன். கதை அவருக்கு மிகவும் பிடித்துப்போக. சரி கண்டிப்பாக செய்யலாம் என்றார்.
ஆனால், அப்போது நான் தவமாய் தவமிருந்து படத்தை இயக்கி கொண்டிருந்தேன். விஜய் எனக்காக காத்திருந்தார். ஆனால், அப்படம் முடிய தாமதமாகி விட்டது. எனவே, விஜய் வேறு படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அதன்பின் அவரை சந்திக்கவில்லை. அது என் தவறுதான். அந்த படத்தில் விஜய் நடித்திருந்தால் விஜயுடன் ஒரு நட்பு இருந்திருக்கும்’ என வருத்தப்பட்டு பேசினார் சேரன்.