இது ஒரு கலியுகக் கண்ணனின் கதை.. சுடுகாட்டில் படமாக்குவதில் வந்த சிக்கலை சமயோசிதமாக தீர்த்த இயக்குனர்..!
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் திரையுலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத உன்னதமான படம் அவன் தான் மனிதன். 1975ல் வெளியான இந்தப்படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. சிவாஜியின் அற்புதமான நடிப்பில் ரசிகர்கள் தங்களை மறந்து படத்தைப் பார்த்து அழுதுவிட்டனர்.
கதை அவர்களின் உள்ளங்களை எல்லாம் உருக்கியது. அப்படிப்பட்ட அற்புதமான படத்தை இயக்கிய ஏ.சி.திருலோகசந்தர் அந்த அனுபவங்களை இவ்வாறு பகிர்கிறார்.
எனக்குப் பிடித்த படங்களுள் ஒன்று அவன் தான் மனிதன். சிவாஜி, ஜெயலலிதா, மஞ்சுளா, முத்துராமன், சுந்தர்ராஜன் நடித்த படம். ஒரு பகுதி சிங்கப்பூர், மலேசியா, பாங்காக் போன்ற நாடுகளில் எடுக்கப்பட்டது.
இந்தப் படத்துக்கு வசனம் எழுதியவர் கண்ணதாசனின் சகோதரர் மகன் பஞ்சு அருணாசலம். பிரபல பாடலாசிரியர், கதாசிரியர், தயாரிப்பாளர் பஞ்சு தான். கண்ணதாசனின் மற்றொரு சகோதரர் மகன் சுப்பு தான் ஒரு பாகஸ்தரோடு இதன் தயாரிப்பாளர்.
இந்தக் கதையில் எனக்குப் பிடித்திருந்தது சிவாஜிகணேசனின் பாத்திரம் தான். அந்தக் கதாபாத்திரத்தைச் சுற்றித்தான் கதை. அவருடைய வாழ்க்கையின் வளம் குறையக் குறைய மனம் உயர்ந்து கொண்டே வந்தது. சங்கு சுட்டாலும் வெண்மை தரும். தங்கம் நெருப்பில் உருகினாலும் தரம் உயரும். அது போல நல்லவர்கள் வாழ்க்கையிலே அநியாயங்கள் தொடர்ந்து நடக்கும்போது ஆண்டவனையே நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை.
இது ஒரு கலியுகக் கண்ணனின் கதை. எதையுமே யாருக்குமே தரத் தயங்காதவன். அவன் கை என்றைக்கும், இருந்தாலும் இல்லாமல் போனாலும் மேலே உயர்ந்து நிற்குமே தவிர கீழேத் தாழ்ந்து போகாது. கொடுப்பதற்காகவே வாழ்ந்து கொடுத்து கொடுத்துத் தேய்ந்து முடியவில்லை என்ற நிலை வந்தபோது அவன் உயிர் அவனை விட்டுப் பிரிந்து விட்டது. அப்போதும் அவன் ஈம கடனுக்கான செலவுத் தொகை கையில் இருந்தது.
இதில் முன்பாதியை அவர் கோடீஸ்வரனாகச் சிங்கப்பூரில் வாழ்ந்த கால வரலாற்றை அவன் காதலித்து, காதலித்தவளையே மணந்து, ஒரு குழந்தையையும் பெறுகிறான். இருவரையும் தொலைத்துவிட்டு தன் மேல்நாட்டு சொத்துகளை எல்லாம் அனாதை ஆசிரமத்துக்கு எழுதி வைத்து விடுகிறான். தமிழ்நாட்டுக்குத் திரும்பும் வரை அங்குதான் படமாக்கினோம்.
சிங்கப்பூரின் சிங்கம் காத்து நிற்கும் கடலோரப் பகுதியில் இருந்து மூலை முடுக்குகள், வெட்ட வெளிகள், பூந்தோட்டங்கள், நீர்த்தேக்கங்கள், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், கோவில்கள், சுடுகாடுகள், ஓட்டல்கள், விமானக்கூடங்கள், பல்பொருள் அங்காடிகள், திமிங்கலப் படகுகள் என ஒன்றுவிடாமல் படமாக்கினோம். சிவாஜியின் ரசிகர்கள் அங்கும் அவரை மொய்த்துக் கொண்டனர்.
அங்கே நடந்த ஒரு அனுபவம் வேடிக்கை. வேதனையும் கூட. ஆசை இளம் மனைவியும், பெண் குழந்தையும் இறந்துவிடுகிறது. வேதனையும் தனிமையும் சிவாஜியை வாட்டி வதைக்கிறது. சுடுகாட்டிலே தனிமையை நாடி புதைகுழிகளுக்கு நடுவே சிவாஜி பாடிக்கொண்டு செல்கிறார்.
இது முன்பே திட்டமிட்ட காட்சி. கண்ணதாசனின் விரக்திப் பாடலுக்கு, எம்.எஸ்.வி. சோகமாக இசை மீட்டுகிறார். கதையின் திருப்பத்திற்குக் காரணமான முக்கியமான பாடல்.
இதற்காக அங்கு மிகப்பெரிய சுடுகாட்டைத் தேர்ந்தெடுத்தோம். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இன்று வரை இறந்த பல மாதிரியான சமாதிகளைக் கொண்ட பூமி. அந்த இடத்தை வெகு சிரமத்தோடு படமாக்க அனுமதி வாங்கினோம். எல்லோரும் ரெடி. சிவாஜியும் குறுந்தாடியுடன் வந்துவிட்டார்.
நாங்கள் கொண்டுவந்த டப்பாவில் இருந்து பாட்டிற்கான ஒலிச்சுருளை எடுத்து போட்டுப் பார்த்தால் அது வேறுபாட்டு. படமாக்குவதற்கு தேவையான பாட்டு இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திணறினோம். அங்கு செய்த தவறைச் சரிசெய்ய நேரமில்லை. சிவாஜி ஓரளவுக்கு அந்தப் பாட்டைக் கேட்டு இருந்தார்.
ஒரு உதவியாளர் சற்றுப் பாடத்தெரிந்தவர். நிதானமாக கணக்குப் போட்டுப் பார்த்தோம். லாங் ஷாட்டுகளும், குளோசப் ஷாட்டுகளும் எடுத்தோம்.
சிவாஜியின் வாயசைப்பு டைமிங்கை நம்பி குளோசப் காட்சிகளை எடுத்தோம். அப்படி எடுத்த தை வைத்து பாடலைக் கோர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது. பட்ட வேதனை மறந்து விடுகிறது.
அவன் தான் மனிதன் படத்தில் மீண்டும் அவர் வாழ்க்கையில் வசந்தம் வீசப் பார்க்கிறது. அவர் மனது ஒரு ஜெயலலிதாவிடம் சாய்கிறது. ஆனால் அவளையும் நண்பனின் சுகத்துக்காகத் தாரை வார்க்கிறார்.
அவர்கள் திருமணத்தன்று தனது பரிசாக கையிலிருந்து விலை மதிக்க முடியாத பரம்பரைச் சொத்தான மாணிக்க மோதிரத்தைப் பரிசளிக்கிறார்.
வேலையாள் சுந்தர்ராஜன் பதறிப்போகிறார். ஐயா அது உங்கள் பரம்பரைச் சொத்து...அதிர்ஷ்ட தேவதை...இப்படி கொடுத்து விட்டீர்களே என்கிறார். ஆனால் சிவாஜியோ அதிர்ஷ்டம் மோதிரத்தில் இல்லை. விதி இங்கிருக்கிறது என்று நெற்றியின் குறுக்கே விரலால் கோடு போட்டுக் காட்டுவார். அதுதான் படத்தின் இன்டர்வெல். அந்த வேலையாள் சொன்னபடியே அதிர்ஷ்ட தேவதை படிப்படியாக விலகி விடுகிறாள்.
எங்கிருந்தோ ஒரு குரல், அன்பு நடமாடும், ஆட்டுவித்தால் யாரொருவர், ஊஞ்சலுக்கு, மனிதன் நினைப்பதுண்டு ஆகிய மனது மறக்காத பாடல்கள் படத்;தில் இடம்பெற்றுள்ளன.
இந்தப்படத்தில் இடம்பெறும் அன்பு நடமாடும் கலைக்கூடமே பாடல் சிங்கப்பூரில் ஒரு மலர் கண்காட்சியில் எடுக்கப்பட்டது. அதுவும் மே மாதத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதனால் தான் பாடல் முழுவதும் கண்ணதாசன் மே என்று எழுத்து வரும் வகையில் எழுதியுள்ளார். கண்ணதாசனின் ரசனையே தனி தான். அவரை மிஞ்ச இன்னும் கவிஞர்கள் பிறக்கவில்லை.