புராண கால நாயகர்களை நாம் பார்த்திருக்க மாட்டோம். கதைகளிலும், படங்களிலும் தான் பார்;த்திருப்போம். ஆனால் அவர்களைப் படத்தில் வேடமிட்டு நடிக்க வைத்தன் மூலம் மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டனர்.
அவர்கள் பார்வையில் அந்த நாயகர்கள் மகத்தானவர்கள். அப்பேர்ப்பட்ட பெருமைக்குச் சொந்தக்காரர் தான் ஒரு தீவிர பக்தரான சினிமா இயக்குனர் ஏ.பி.நாகராஜன்.
பக்தி மணம் சொட்ட சொட்ட கதைகளை எழுதி இயக்கும் வல்லமைப் படைத்தவர். இவர் இந்து மதத்திற்கு சினிமாவின் வாயிலாக ஆற்றிய தொண்டுகள் அளப்பரியன. அவற்றில் ஒருசிலவற்றைப் பார்ப்போம்.

நடிகர் வி. கே. ராமசாமியுடன் இணைந்து, ஸ்ரீலக்ஷ்மி பிக்சர்ஸ் எனும் கம்பெனியினை தொடங்கி தயாரிப்பாளர் ஆனார். அப்படி தயாரிக்கபட்டதுதான் பெரும் பக்தி படங்கள்.
அப்படி வந்ததுதான் அழியா இந்து படங்கள் திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், திருமலை தெய்வம், நவராத்திரி என மாபெரும் பக்தி படங்கள எல்லாம் அவர்தான் தயாரித்தார்
ஆம், அவர்தான் காலத்தால் அழியா வகையில் ரசனையாக, பக்தியாக அதை கொடுத்தார். அதில் மிகச் சிறந்த பாடலும், நடிப்பும், இசையும், கதையம்சமும், நடிகர்களும் வருமாறு பார்த்து பார்த்து செய்தார்.
உண்மையில் அது படம் அல்ல. வெறும் இருமணி நேர காட்சி அல்ல. அது ஒரு இந்து உணர்வு. நாயன்மார்கள் உருகி பாடிய காட்சியும், அன்று தமிழகம் கண்ட பக்தியின் மெய்சிலிரிக்க வைக்கும் விஷயங்களையும் திரையில் பதியவைத்த இந்து தொண்டு. தமிழ் சினிமா உள்ளவரை இந்து அடையாளத்தை அழுத்தமாக பதியவைத்த வித்தை.
கல்லிலும், பனை ஓலையிலும், சிலையாகவும் பாடலாகவும் இருந்த இந்து பெருமைகளை செல்லுலாய்டில் அவர்தான் பதியவைத்தார். அந்த சேவை அக்கால அடியார்கள் யாருக்கும் குறைந்ததல்ல. தொடர்ந்து திருமலை தெய்வம் போன்ற படங்களையும் கொடுத்தார். திருப்பதி பெருமாளுக்கான காணிக்கை அது.
அகத்தியர் என அம்மாமுனியின் புராணத்தை சீர்காழி கோவிந்தராஜன் எனும் மகா கலைஞனை கொண்டு
சரியாக கொடுத்தார். திருவருட் செல்வர் எனும் படமே நாயன்மார்கள் கதையினை தாங்கிவந்த படம். சிவாஜிகணேசன் எனும் மகாநடிகனை அப்பர்சாமிகளாக அப்படியே மாற்றியிருந்தார் நாகராஜன்.
ராஜராஜசோழன் எனும் மாபெரும் சிவபக்த மன்னனின் வரலாற்றை அற்புதமாக கொடுத்தவரும் அவரே
சிவாஜிகணேசனின் அற்புதமான நடிப்பை இந்துமத பாத்திரங்களுக்கு மிக சரியாக வாங்கியவர் நாகராஜன், அவர் அளவு இன்னொரு இயக்குநர் சிவாஜி கணேசனை பயன்படுத்தவில்லை.

அருட்பெரும் ஜோதி எனும் படமும் மறக்க முடியாதது, வள்ளலாரின் வாழ்வினை திரைசித்திரமாக்கியிருந்தார் நாகராஜன். பக்தி படங்களைத் தாண்டி, ஆனந்த விகடனில் தொடராக வந்த தில்லானா மோகனப்பாள் எனும் அழகான கதையினை சினிமாவாக மாற்றி வெற்றி பெற்றார்.
பொதுவாக சில புத்தக கதைகளை சினிமாவாக மாற்றும்பொழுது சரிவராது. ஜெயகாந்தனின் அழகான கதைகள் அப்படித்தான் தோற்றன. ஆனால், தில்லானா மோகனம்பாள் படத்தை எக்கால தலைமுறையும் ரசிக்கும்படி அற்புதமாக செதுக்கினார் நாகராஜன்.
கிருஷ்ண லீலா படத்தை இயக்கிய அவர் இன்னும் பல பக்திபடங்களை தருவார். ஒவ்வொரு இந்து தெய்வங்களையும் அடியார்களையும் கண்முன் நிறுத்துவார். சினிமாவில் பதிந்து வைப்பார் என எல்லோரும் எண்ணிய பொழுதுதான் 49ம் வயதிலே மறைந்தார்.
வெறும் நாடக கம்பெனி சிறுவனாக இருந்த அவரை பெரும் தயாரிப்பாளர் வரை உயர்த்தியது அவரின் பக்தி அளப்பறிய பக்தியே.





