நான் சினிமாவுக்கு வரக்கூடாதுன்னு வேண்டினாங்க!.. ஆதிக் சொன்ன அதிர்ச்சி தகவல்!…

Adhik Ravichandran: சினிமா ஒருவரை எங்கு கொண்டு போய் நிறுத்தும் என சொல்லவே முடியாது. சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க திறமை மட்டும் போதாது. சரியான வாய்ப்புகள் அமையவேண்டும். ஒரு இயக்குனரிடம் இருக்கும் திறமையை ஒரு நடிகரோ அல்லது தயாரிப்பாளரோ நம்ப வேண்டும். அப்படி நம்பி உருவாகும் திரைப்படம் வெற்றி பெறவேண்டும். அப்போதுதான் அந்த இயக்குனருக்கு தொடர் வாய்ப்புகள் வரும்.
பல வருடங்கள் சினிமாவில் போராடி ஒரு கதையை எழுதி பல தயாரிப்பாளர்களிடமும், நடிகர்கள் பின்னாலும் அலைந்து கதையை ஓகே செய்து படத்தை உருவாக்கி அது வெளியாகி தோல்விடைந்து சினிமாவை விட்டே போனவர்கள் பலரும் இருக்கிறார்கள். சிலர் மட்டுமே நம்பிக்கையுடன் போராடி மீண்டும் வெற்றியை கொடுப்பார்கள்.
சில இயக்குனர்களுக்கு முதல் படம் சூப்பர் ஹிட்டாக அமைந்துவிடும். அதன்பின் தொடர்ந்து சில படங்களை இயக்குவார்கள். ஆனால், அவை தோல்விபடங்களாக அமைந்துவிடும். அப்படிப்பட்ட இயக்குனர்களை நடிகர்களோ, தயாரிப்பாளர்களோ நம்ப மாட்டார்கள். ஆனால், அப்படிப்பட்டவர்களையும் நம்பும் ஒரு நடிகர் தமிழ் சினிமாவில் இருக்கிறார்.

அவர்தான் நடிகர் அஜித்குமார். வாலி படம் மூலம் எஸ்.ஜே.சூர்யாவை உருவாக்கியவர் இவர்தான். சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் 4 படங்கள் நடித்தவரும் இவர்தான். இப்போது அஜித்தால் ஆதிக் ரவிச்சந்திரனின் வாழ்க்கையும் மாறியிருக்கிறது. திரிஷா இல்லனா நயன்தாரா படம் ஹிட் என்றாலும் அதன்பின் ஆதிக் இயக்கிய AAA, பகீரா ஆகிய படங்கள் தோல்வி அடைந்தது.
நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு சின்ன வேடத்தில் ஆதிக் நடித்தபோது அஜித்துடன் பழக்கம் ஏற்பட்டது. ஆதிக்கை ஒரு திறமையுள்ள இயக்குனராக பார்த்தார் அஜித். ‘நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்’ என்கிற நம்பிக்கையை கொடுத்தார். அந்த நம்பிக்கைதான் ஆதிக்கை மார்க் ஆண்டனி எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க வைத்தது. இப்போது குட் பேட் அக்லி படம் வெளியாகி ஹிட் அடித்திருக்கிறது.
ஆதிக்கின் அப்பா ரவிச்சந்திரன் 25 வருடங்களாக சினிமாவில் உதவி இயக்குனராகவே வாழ்க்கையை கழித்தவர். அவரால் ஒரு படத்தை இயக்க முடியவில்லை. இப்போது மகனுக்கு ஷூட்டிங்கில் உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ஆதிக் ‘என் அம்மா மிகவும் ஸ்டிரிக்ட்டாக இருப்பார். நான் சினிமா துறைக்கு போய்விடக்கூடாது என தினமும் சாமியிடம் வேண்டினார். ஆனால், காலம் என்னை இயக்குனர் ஆக்கிவிட்டது’ என பேசியிருக்கிறார். மேலும் ‘நான் அஜித் சாரை வைத்து படமெடுக்கிறேன் என என் பெற்றோரிடம் சொன்னபோது அவர்கள் அழுதுவிட்டார்கள்’ எனவும் உருகி பேசியிருந்தார்.