நான் இயக்குனரா? இல்லை எம்.ஜி.ஆர் இயக்குனரா?.. படப்பிடிப்பில் நடந்த களோபரம்...

by சிவா |
MGR
X

MGR

எம்.ஜி.ஆர் நடிகர் என்றாலும் அவருக்கு தயாரிப்பு, இயக்கம் என எல்லாமே தெரியும். 27 வருட நாடக அனுபவம், சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஹீரோவாக நடித்தது வரை சினிமாவை கற்றுக்கொண்டது, எந்த காட்சிக்கு கேமராவை எங்கே வைக்க வேண்டும், இசை எப்படி இருக்க வேண்டும், பாடல் வரிகள் எப்படி வர வேண்டும், பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என சினிமா தொடர்பான எல்லா வேலையும் அவருக்கு அத்துப்படி.

mgr

தான் நடிக்கும் படங்களில் அனைத்தும் சிறப்பாக வரவேண்டும் என நினைப்பவர். இயக்குனர் இல்லாமல் போனால் அவரே சில காட்சிகளை எடுத்துவிடுவார். சினிமாவில் நுழைந்து சில வருடங்களிலேயே ‘நாடோடி மன்னன்’ படத்தை தயாரித்து, இயக்கி நடித்தவர். அப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதேபோல், அவர் தயாரித்து, இயக்கி, நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது. அந்த படத்திற்காக ஹாங்காங், பாங்காக், மலேசியா, ஜப்பான் என பல நாடுகளுக்கும் சென்று படப்பிடிப்பு நடத்தினார் எம்.ஜி.ஆர்.

chakravarthi

எம்.ஜி.ஆரை வைத்து பா.நீலகண்டன் இயக்கிய முதல் திரைப்படம் சக்ரவர்த்தி திருமகள். இப்படத்தில் இடம்பெற்ற ‘ஆட வாங்க அண்ணாத்த’ என்கிற பாடல் காட்சிக்காக பிரம்மாண்ட அரங்கு ஒன்றை அமைத்திருந்தனர். அந்த அரங்குக்கு வந்த எம்.ஜி.ஆர் கேமரா வைத்திருந்த கோணத்தை பார்த்துவிட்டு ஒளிப்பதிவாளரிடம் ‘செட் நல்லா வந்திருக்கு. இது காட்சி நன்றாக வரவேண்டுமெனில் கேமரா கோணத்தை மேலே வையுங்கள்’ என சொல்லிவிட்டு மேக்கப் ரூமுக்கு சென்றுவிட்டார்.

neelakandan

இதைகேள்விப்பட்டு பா.நீலகண்டன் ‘இங்கே நான் இயக்குனரா? இல்லை எம்.ஜி.ஆர் இயக்குனரா?.. கேமராவை மேலே வைத்து லைட்டிங் செய்தால் நேரமாகும். எம்.ஜி.ஆரை போய் கூட்டி வாங்க’ என சொல்லியிருக்கிறார். அவர் பேசியதை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் ‘படத்தின் தலைப்பில் கேமரா ஆங்கிள் என என் பெயரையா போட போகிறார்கள்?.. நான் எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து நடித்து கொடுக்கிறேன்’ என சொல்ல அவர் கூறியது போலவே கேமராவை மேலே வைத்து அந்த காட்சி படம்பிடிக்கப்பட்டது. அதன்பின் எம்.ஜி.ஆரை புரிந்துகொண்ட நீலகண்டன் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குனராக மாறிப்போனார்.

எம்.ஜி.ஆரை வைத்து அதிக படங்களை இயக்கியவர் பா.நீலகண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story