Director Atlee: இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக வேலை செய்தவர் அட்லீ. நண்பன், எந்திரன் உள்ளிட்ட சில படங்களில் பணிபுரிந்த அட்லி ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக மாறினார். நண்பன் படத்தில் வேலை செய்தபோது விஜயுடன் பழக்கம் ஏற்பட்டதால் அவரை வைத்து தெறி படத்தை இயக்கினார்.
அதன்பின் மெர்சல், பிகில் என தொடர்ந்து விஜயை வைத்து படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறினார். பாலிவுட் பக்கம் போய் ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற படத்தை இயக்கினார். இந்த படம் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

எனவே, சல்மான்கான் போன்ற நடிகர்களும் அட்லீ இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்கள். அட்லிக்கு ஒரு பழக்கம் உண்டு. ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்த தமிழ் படங்களின் கதையை கொஞ்சம் மாற்றி பட்டி டிங்கரிங் பார்த்து ஒரு புது கதை போல எழுதி அதை விஜய் போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து படமாக எடுப்பார்.
மணிரத்னம் இயக்கிய மௌன ராகம் படத்தை பட்டி டிங்கரிங் செய்து ராஜா ராணி எடுத்தார். கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தை சுட்டு மெர்சல் எடுத்தார். விஜயகாந்தின் சத்ரியன் படத்தை கொஞ்சம் மாற்றி தெறி படத்தை எடுத்தார். சில பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களின் காட்சியை சுட்டு பிகில் எடுத்தார்.
அட்லி மற்ற படங்களின் கதையை சுட்டு படமெடுக்கிறார் என பல வருடங்களாக நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் அவரை கிண்டலடித்து வருகிறார்கள். ஆனால் ‘சொல்பவர்கள் சொல்லி கொண்டே இருக்கட்டும். நான் அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை’ என்பதுதான் அட்லியின் பதிலாக இருக்கிறது.

ஜவான் படம் வெளியாகி ஒரு வருடம் ஆகியும் அட்லியின் அடுத்த பட அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கக ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் நடித்து வெளியான மகதீரா என்கிற தெலுங்கு படத்தை பட்டி டிங்கரிங் செய்யும் வேலையில் அட்லி இறங்கியிருக்கிறாராம்.
இதற்காக சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் சில கதாசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்களுடன் அமர்ந்து மகதீரா படத்தை எப்படி புதிதாக மாற்றுவது என ஆலோசித்து வருகிறாராம். ஹிந்தியில் உருவாகும் இப்படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை அட்லி, சன் பிக்சர்ஸ் மற்றும் சல்மான் கான் என மூவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர் எனவும், கமல்ஹாசன் இதில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
