எம்ஜிஆரைப் பற்றி சொன்ன வதந்திகள் எல்லாமே பச்சைப் பொய்.....! சொல்கிறார் டைரக்டர் பஞ்சு
எம்ஜிஆரை வைத்து பெற்றால் தான் பிள்ளையா படம் எடுத்த டைரக்டர் பஞ்சு அந்தப்படத்தைப் பற்றிய நினைவுகளை பகிர்கிறார்.
எம்ஜிஆரை வைத்து படம் எடுக்க வேண்டும். அது வழக்கமான பாணியில் இல்லாமல் நடிப்புக்குத் தீனி போடும் கதையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்தோம். சார்லி சாப்ளின் நடித்த கிட் படம் நினைவுக்கு வந்தது. ஒரு சாதாரண ரிக்ஷாக்காரனையும் ஒரு அனாதைக் குழந்தையையும் பற்றிய கதை.
சொல்லப்போனால் காமெடி கதையை எம்ஜிஆருக்காக சீரியஸ் சப்ஜெக்டாக எடுத்தோம். இந்தத் திட்டத்தை சொல்லப் போய் பைனான்சியர் வெறுங்கையை விரித்துக் காட்டி விட்டு விலகிப் போனார்.
யார் எப்படி நடந்தால் என்ன? எப்பேர்ப்பட்ட சோதனை வந்தாலும் முடிவை மாற்றுவதில்லை என்று உறுதியாக இருந்தோம்.
கடைசியில் எம்.ஆர்.ராதா எங்களுக்கு கைகொடுக்க முன்வந்தார். எம்ஜிஆர், எம்.ஆர்.ராதா, சரோஜாதேவி, சௌகார் ஜானகி, தங்கவேலு உள்பட பலர் நடித்தனர். அப்போது எம்ஜிஆரைப் பற்றி பலவாறு வதந்திகளைக் கிளப்பி விட்டிருந்தனர். அவர் சொல்ற நடிகர், நடிகையரைத் தான் போடவேண்டும் என்பார்.
அவரது விருப்பப்படி தான் ஆடை, அணிகலன்கள், நடனம், இசை, காட்சிகள் எல்லாமே இருக்க வேண்டும் என்பார். அவரது விருப்பப்படியே கதையும் இருக்க வேண்டும் என்பார். சண்டைக்காட்சிகளை அதிகம் எதிர்பார்ப்பார் என்றனர். ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை. எல்லாம் எங்கள் எண்ணப்படி தான் நடந்தது.
இவ்வளவு ஏன்...? படத்தில் தங்கவேலுவும், சௌகார் ஜானகியும் பாடுவது போல் ஒரு பாடலும் கூட உண்டு. சண்டையே கிளைமாக்ஸில் மட்டும் தான் வரும்.
அதற்கும் அவர் சரி என்று தான் சொன்னார். படத்தில் அவருக்கு பெரிய அளவில் அலங்கார உடைகளும் கிடையாது. ஒரு கிழிந்த பேண்ட், கிழிந்த சட்டையுடன் தான் பல காட்சிகளில் வருவார். நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.
அந்த நேரத்தில் அவருக்கு சரோஜாதேவியுடன் சிறிது மனக்கசப்பு இருந்தது. அப்படி இருந்த போதும் இருவரும் எங்கள் எண்ணப்படி இணைந்து நடித்ததை மறக்க முடியாது. கண்ணன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அந்தக் காட்சியில் இருவரும் இணைந்து நடித்தனர்.
காட்சி அமைப்பு பற்றி இருவரிடமும் கூறினேன். பின்னர் எம்ஜிஆர் கூறுவதை சரோஜாதேவியிடம் கூறுவேன். சரோஜாதேவி கூறுவதை எம்ஜிஆரிடம் கூறுவேன். இருவருக்கும் மீடியேட்டர் நான் தான். இருவரையும் பேச வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் பயனில்லாமல் போனது.
ஆனால் காட்சி படமாக்கப்படத் தொடங்கியதும் பாடலோடும் காட்சியோம் ஒன்றி இருவரும் மிகவும் சிறப்பாக நடித்தனர். அங்கே கதாபாத்திரங்களைத் தான் பார்த்தோம். நடிப்பு என்று வந்துவிட்டால் அதனுடன் ஒன்றிப்போவது தான் சிறந்த கலைஞர்களின் பண்பு. அதை நேரில் பார்க்கமுடிந்தது.
அதே போல அனாதைக் குழந்தையைப் பிரித்து பெற்றோரிடம் அனுப்ப நீதிமன்றத்தில் நிரூபிக்கும் காட்சி படமாக்கப்பட்டது.
எம்ஜிஆருக்கு கோர்ட் சீனில் அதிக வசனம் கிடையாது. ஆனால் அபாரமாக நடித்திருப்பார். செல்லக்கிளியே மெல்லப் பேசு என்ற பாடலில் இயேசுவின் சிலை அருகே எம்ஜிஆர் பாடி நடிக்கும்போது படம் பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்கியது.
எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப்படத்தின் வெற்றி எங்கள் வைராக்கியத்திற்கும் சவாலுக்கும் கிடைத்த வெற்றி.