எம்.ஜி.ஆர் இருந்த மேடையிலேயே அவரை கடுமையாக விமர்சித்த மகேந்திரன்.. புரட்சித்தலைவர் என்ன செய்தார் தெரியுமா?...
“முள்ளும் மலரும்”, “உதிரிப்பூக்கள்”, “நண்டு” போன்ற தமிழ் சினிமாவின் வித்தியாசமான படைப்புகளை இயக்கிய மகேந்திரன், தனது கேரியரின் தொடக்க காலத்தில் “சபாஷ் தம்பி”, “கங்கா”, “தங்கப்பதக்கம்”, போன்ற பல திரைப்படங்களுக்கு கதையாசிரியராக இருந்துள்ளார்.
மகேந்திரன் சினிமாவுக்குள் வருவதற்கு முன்பு தனது கல்லூரி காலங்களில் பல ஆங்கில திரைப்படங்களை பார்ப்பதற்கு வாய்ப்புகள் அமைந்தன. அந்த காலகட்டத்தில் ஆங்கில திரைப்படங்களின் மேல் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். ஆதலால் தமிழ் சினிமாவின் மீது எப்போதும் ஒரு விமர்சனப் பார்வை இருந்தது. மேலும் தமிழ் சினிமாக்களின் மீது மிகுந்த கோபத்தோடு இருந்தார். தமிழ் சினிமா யதார்தத்திற்கு மிக தள்ளி இருக்கிறது என்பதே அவரது பார்வையாக இருந்தது.
இந்த நிலையில் ஒரு முறை மகேந்திரன் படித்துக்கொண்டிருந்த காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர் ஒரு விழாவில் கலந்துகொண்டார். அப்போது மகேந்திரன் உட்பட மூன்று மாணவர்களுக்கு மேடையில் பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதுதான் தனக்கு கிடைத்த சந்தர்ப்பம் என்று நினைத்த மகேந்திரன், எம்.ஜி.ஆர் அமர்ந்திருந்த மேடையிலேயே அவரது திரைப்படங்களை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
“கல்லூரியில் படிப்பவர்கள் யாராலையாவது நிம்மதியாக காதலிக்க முடிகிறதா? எங்கே போனாலும் அந்த காதலுக்கு எதிர்ப்புத்தான் வருகிறது” என பேசிய மகேந்திரன், அங்கே அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரை குறிப்பிட்டு “இதோ இவர் இருக்கிறாரே, ஊரே பார்க்கும்படி டூயட் பாடி காதலிக்கிறார். இவரை எந்த கல்லூரி முதல்வராவது இதுவரை கண்டிச்சிருக்கிறாரா? சரி கல்லூரி முதல்வரை விடுங்கள், ஊர்க்காரர்களாவது கண்டிக்கிறார்களா? என்றால் ஊர்க்காரர்கள் அதனை பொருட்படுத்துவதே இல்லை” என்று கூறினார்.
இவ்வாறு எம்.ஜி.ஆர் படங்களை மகேந்திரன் விமர்சித்ததை பார்வையாளர்கள் மட்டுமல்லாது எம்.ஜி.ஆரே மிகவும் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தாராம். மகேந்திரன் பேசி முடித்தபோது பார்வையாளர்கள் பலரும் கைத்தட்டினார்கள். அதே போல் எம்.ஜி.ஆரும், மகேந்திரனின் பேச்சை பாராட்டும் விதமாக கைத்தட்டினார்.
அதன் பின் மகேந்திரனை அழைத்த எம்.ஜி.ஆர், “எனக்கு ஒரு காகிதம் கிடைக்குமா?” என கேட்க, அதற்கு மகேந்திரன் அவரது கையில் ஒரு காகிதத்தைக் கொடுத்தாராம். அதில் சில வார்த்தைகளை எழுதி மகேந்திரனிடம் நீட்டிவிட்டுப் போய்விட்டாராம். அதன் பின் அந்த காகிதத்தை படித்துப்பார்த்தார் மகேந்திரன். அதில் “நல்ல பேச்சு, நல்ல கருத்து, நகைச்சுவையுடன் கூடிய நல்ல வன்மையான உணர்ச்சியுடன் கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்க தகுந்தவர். வாழ்க. அன்பன் எம்.ஜி.ராமச்சந்திரன்” என எழுதியிருந்ததாம்.
இதையும் படிங்க: கமல்ஹாசன் படத்தை தவறாக எடைப்போட்ட ஆர்.ஜே.பாலாஜி… கடைசில இப்படி ஆகிடுச்சே!