Cinema History
அடுத்த பத்தே நாளில் சூப்பரான கதை எனக்கு வேணும்…மணிவண்ணனுக்கு கட்டளையிட்ட பாரதிராஜா..!
கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் 1954ல் ஜூலை 31 ம் நாள் ஆர்.எஸ்.மணி மரகதம்மாளுக்கு மகனாகப் பிறந்தார்.
இவரது தந்தையும் தாயும் அரிசி வியாபாரம் செய்தனர். ஜவுளித்தொழிலிலும் ஈடுபட்டனர். அது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு இருந்தனர். பள்ளி படிப்பை முடித்து கோவை அரசுக்கல்லூரியில் பியுசி முடித்தார். அப்போது நடிகர் சத்யராஜ் உடன் நட்பு ஏற்பட்டது. படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்த மணிவண்ணன் மேடை நாடகங்களில் ஆர்வமுடன் நடித்தார்.
மணிவண்ணனின் கல்லூரி ஆசிரியர் கம்யூனிசக் கொள்கையில் ஈடுபாடு கொண்டு இருந்தார். அதனால் கம்யூனிசம் சம்பந்தமான பல புத்தகங்களை இவரிடம் கொடுத்து படிக்கச் செய்தார். அன்று முதல் கம்யூனிச கொள்கைகளில் தீவிரமானார் மணிவண்ணன். அது மட்டுமின்றி நக்சலைட் தலைவர் ஒருவரையும் சந்தித்துள்ளார். முக்கிய நக்சல்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ள காவல்துறை திட்டமிட்டது.
அதில் முதல் பெயராக இருந்தது மணிவண்ணன் தான். இதை அறிந்த அவரது நண்பர்கள் மணிவண்ணனை சென்னைக்குக் கடத்தினார்கள் என்பது வேடிக்கையான விஷயம். பாரதிராஜாவின் தீவிர ரசிகர் மணிவண்ணன். பாரதிராஜாவைப் புகழ்ந்து 100 பக்கங்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இதைப் பார்த்து வியந்தார் பாரதிராஜா. தொடர்ந்து மணிவண்ணனை நேரில் சந்தித்தார். அது மட்டுமல்ல.
தான் இயக்கிக் கொண்டிருந்த கல்லுக்குள் ஈரம் படத்தில் உதவி இயக்குனராகவும் சேர்த்துக் கொண்டார். மணிவண்ணன் சொன்ன நிழல்கள் என்ற கதை பிடித்துப் போனதால் அதையே தனது அடுத்த படத்தின் கதையாக வைத்துக்கொண்டு அதற்கு வசனம் எழுதும் பொறுப்பை மணிவண்ணனிடமே கொடுத்தார். தொடர்ந்து வெற்றிப்படங்களையே கோடுத்து வந்த பாரதிராஜாவுக்கு மணிவண்ணன் வசனம் எழுதிய இந்தப்படம் தோல்வியில் முடிந்தது.
இதனால் பாரதிராஜாவுக்கே தோல்வியா என நண்பர்கள் கிண்டல் அடித்தனர். இதனால் கோபமான பாரதிராஜா இதே மணிவண்ணனை வைத்து பெரிய ஹிட் கொடுக்கிறேன் என்று சவால் விட்டார். உடனே மணிவண்ணனிடம் பாரதிராஜா உன்னை நம்பி அவனுங்கள்ட சவால் விட்டுட்டேன். நீ என்ன செய்வீயோ தெரியாது. அடுத்த பத்தே நாளில் சூப்பரான ஒரு கதையை எழுதி விட வேண்டும் என்று கட்டளையிட்டார்.
இதனால் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த மணிவண்ணன் அப்படி எழுதிய கதை தான் அலைகள் ஓய்வதில்லை. அந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழக அரசின் 9 விருதுகளையும் அள்ளியது. புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பொற்கரங்களால் அவ்விருதை மணிவண்ணன் பெற்றார் என்பது மகிழ்ச்சியான தருணம்.
சூட்டிங்ஸ்பாட்டில் ஸ்கிரிப்ட் புக்கை எங்கடா என பாரதிராஜா உதவியாளர் மணிவண்ணனிடம் கேட்க, அவரோ மற்றொரு உதவியாளரான மனோபாலாவைக் கைகாட்டியுள்ளார். நீங்க கொண்டு வந்திருப்பீங்கன்னு நான் நெனைச்சேன் என்று சொன்னாராம். இதைக் கேட்டு வெகுண்டு எழுந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா இருவரையும் மீனம்பாக்கத்தில் இருந்து கத்திப்பாரா வரை துரத்தோ துரத்து என்று துரத்தினாராம்.
பாரதிராஜாவின் அம்மாவுக்குத் தெரிந்த பெண்ணுக்கு மாப்பிள்ளைத் தேடிக் கொண்டு இருந்தனர். யதார்த்தமாக ஒரு நாள் பாரதிராஜா அந்தப் பெண்ணுக்கு மாப்பிள்ளைத் தேடிக்கொண்டு இருந்த விஷயத்தை மணிவண்ணனிடம் சொல்ல, அவரோ அந்தப் பெண்ணை நானே கல்யாணம் பண்ணிக்கிறேனே என டக்கென சொல்லிவிட்டார்.
இதனால் பதில் ஏதும் சொல்லாமல் போய் விட்டார் பாரதிராஜா. ஒரு ஆண்டுகாலம் கழித்து மணிவண்ணனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் கல்யாணம் செய்து வைத்தார். அந்தப்பெண்ணின் பெயர் செங்கமலம். இவர்களுக்கு ரகுவண்ணன் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர்.
தனது குருவான பாரதிராஜாவின் நல்லாசியுடன் கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தை முதன் முதலாக இயக்கினார். இவர் இரண்டாவதாக இயக்கிய படம் ஜோதி. இது அவருடைய பேவரைட் மூவி. இதனால் அந்தப்படத்தின் பெயரையே தனது மகளுக்கு சூட்டி விட்டார்.
1989ல் கொடி பறக்குது என்ற படத்தை இயக்கி அதில் வில்லனாக வந்தார். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். ஆரம்பத்தில் சத்யராஜ் உடன் நடித்து அவருக்குக் கைதட்டல் பெற்றுக் கொடுத்தார். பெரியார் மற்றும் கம்யூனிச கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டு இருந்தார்.
ஆரம்ப கால கட்டங்களில் திராவிடக்கட்சிகளில் பணியாற்றினார். முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி போருக்குப் பின்னர் சீமானின் நாம் தமிழர் கட்சி மேடைகளில் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தார். ஈழத்தமிழருக்கான ஆதரவு போராட்டங்களிலும் பங்கேற்றார். சீமானுடன் சேர்ந்த மணிவண்ணனை பாரதிராஜா திடீரென புறக்கணித்தார். இதனால் மணிவண்ணன் மனம் வருந்தினார். தந்தையை பிரிந்து வாழ்வதைப் போல உள்ளது என்றார்.
எவ்வளவு பெரிய டைரக்டரா இருந்தாலும் எத்தனையோ பேர் என்னைப் பெருமையா பேசினாலும் நான் எப்பவுமே பாரதிராஜாவோட அசிஸ்டண்ட் தான் அப்படின்னு ஒரு பேட்டியில சொல்லிருக்காரு மணிவண்ணன். என் மேல கோபம் இருந்தா ஒரு அறை விட்டுருங்க. பேசாம மட்டும் இருந்துடாதீங்கன்னு அந்தப்பேட்டியில் சொல்லியுள்ளார். பாரதிராஜாவின் உதவி இயக்குனர்களில் இருவர் மட்டுமே மிகவும் பிரபலமானார்கள்.
ஒருவர் கே.பாக்யராஜ். மற்றவர் மணிவண்ணன். ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், சுந்தர்.சி., செல்வபாரதி, சீமான் ஆகியோர் மணிவண்;ணனிடம் உதவி இயக்குனர்களாக இருந்தனர். 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனக்கென தனி பாணியைக் கடைபிடித்து சிகரம் தொட்ட இயக்குனர்களில் ஒருவர் தான் இந்த மணிவண்ணன்.
2013 ஜூன் 15ம் நாள் காலமானார். அவரது விருப்பப்படி அவரது உடல் தமிழ் ஈழக்கொடியால் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கணவனின் பிரிவைத் தாங்காத அவரது மனைவி செங்கமலம் மணிவண்ணன் இறந்த இரண்டே மாதங்களில் உயிர் நீத்தார்.