சார் எனக்கு அப்பா கூட இல்ல சார்!.. பாக்கியராஜ் காலில் விழுந்து கதறிய பாண்டியராஜன்...
சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராவது இரண்டும் அவ்வளவு சுலபம் இல்லை. தொடர்ச்சியாக படம் இயக்கும் பெரிய இயக்குனர்களிடம் உதவியாளராக சேர்ந்து அவருடன் பல படங்களில் வேலை செய்ய வேண்டும். அப்படி இருந்தால்தான் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும். 80,90களில் பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாக்கியராஜ், மணிரத்னம், ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட சிலர் முன்னணி இயக்குர்களாக இருந்தனர்.
எனவே, அவர்களிடம் உதவியாளராக சேர பலரும் முயன்றனர். ஆனால், அதில் சிலருக்குதான் வாய்ப்புகள் கிடைத்தது. அப்படி அவர்களிடம் வேலை செய்தவர்கள் பின்னாளில் முக்கிய இயக்குனர்களாக மாறினார்கள். அப்படி, பாக்கியாரஜிடம் உதவியாளராக பல படங்களில் வேலை செய்து ‘கன்னி ராசி’ படம் மூலம் இயக்குனராக மாறியவர் பாண்டியராஜன். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது.
அதன்பின், ஆண் பாவம், மனைவி ரெடி உள்ளிட்ட பல படங்களை இயக்கி நடித்தார். காமெடி கலந்த குடும்ப படங்களை இயக்கினார். மற்ற இயக்குனர்கள் இயக்கத்தில் பல படங்களில் நடித்தும் இருக்கிறார். சமீபத்தில் ஒரு ஊடகம் ஒன்றில் பாக்கியராஜிடம் உதவியாளராக சேர்ந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்ட பாண்டியராஜன் ‘நான் தூயவன் என்கிற வசனகர்த்தாவிடம் உதவியாளராக இருந்தேன். எனக்கு பாக்கியராஜை மிகவும் பிடிக்கும்.
ஒருநாள் தூயவனை பார்க்க பாக்கியராஜ் சார் வந்தார். போண்டா, பஜ்ஜி உள்ளிட்ட ஸ்னேக்ஸ் வகைகளை வாங்கி கொடுப்பேன். அவருக்கு நெருக்காமான் ஒருவர் மூலம் அவரிடம் உதவியாளராக சேர முயன்றேன். ஆனால், ‘என்னிடம் நிறைய பேர் இருக்கிறார்கள். வேண்டாம்’ சொல்லிவிட்டார். ஒருநாள் அவரிடம் உங்களின் உதவியாளராக சேர்த்துக்கொள்ளுங்கள் என நானே கேட்டேன். அதற்கு அவர் கோபப்பட்டு ‘ஏற்கனவே சொல்லிவிட்டேனே தம்பி..இப்போது முடியாது’ என சொல்லிவிட்டார்.
அதன்பின் கம்பெனி உதவியாளராக 10 நாட்கள் மட்டும் அவர் இயக்கும் ஒரு படத்தில் வேலை செய்தேன். அவரின் உதவியாளர்களுக்கு தேவைப்பட்டதையெல்லாம் செய்து கொடுத்தேன். எனவே, அவர்களுக்கு என்னை பிடித்துப்போனது. அடுத்து பாக்கியராஜ் சார் ‘மௌன கீதம்’ எடுக்க திட்டமிட்டார். அந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த நாள் துவங்கியது. அவரின் உதவி இயக்குனர்கள் ‘சரி நீ நாளைக்கு இந்த இடத்திற்கு வா பாத்துக்கலாம்’ என்றார்கள். சென்னை அடையாறு பகுதியில் படப்பிடிப்பு துவங்கியது.
கிளாப் அடிக்கும் வேலையை நானாக எடுத்துக்கொண்டேன். ஆனால், அவர் (பாக்கியராஜ்) கண்ணில் படவே இல்லை. ஒரு காட்சியில் அவருக்கு கிளாப் அடித்துவிட்டு ஓடி ஒளிந்துகொண்டேன். அந்த காட்சி முடிந்ததும் ‘கிளாப் அடித்தது யார்?’ என கேட்டார். நான் அவரின் எதிரே போனேன். ‘நீ எதுக்கு இங்க வந்த?’ என கோபமாக கேட்டார்.
உடனே அவரின் காலில் விழுந்துவிட்டேன். ‘சார் அப்பா கூட இல்லாதவன் சார். சினிமான்னா எனக்கு ரொம்ப ஆசை சார். என்னை வெளிய அனுப்பிடாதீங்க சார்’ என கதறி அழுதேன். எல்லோரும் என்னை பாவமாக பார்த்தார்கள். என்ன நினைத்தாரோ ‘சரி கண்டினியு பண்ணு’ என சொன்னார். அப்போதுதான் எனக்கு உயிரே வந்தது. அதன்பின் அவர் இயக்கி 'டார்லிங் டார்லிங் டார்லிங்' உள்ளிட்ட பல படங்களில் வேலை செய்தேன்’ என பாண்டியராஜன் கூறினார்.