More
Categories: Cinema History Cinema News latest news

சிவாஜியின் 100 ஆவது படத்துக்கு நடந்த போட்டி… நடிகர் திலகத்தை கைவிட்டு எம்.ஜி.ஆரை பிடித்துக்கொண்ட பிரபல இயக்குனர்…

தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனராக திகழ்ந்த பி.ஆர்.பந்துலு சிவாஜியை வைத்து கிட்டத்தட்ட 7 திரைப்படங்களை இயக்கியவர். சிவாஜி கணேசனுக்கும் பி.ஆர்.பந்துலுவுக்கும் இடையே மிக நெருங்கிய நட்பு இருந்து வந்தது. ஆனால் அந்த நட்பிற்கு இடையே ஒரு காலகட்டத்தில் சிறு விரிசலும் விழுந்தது. அந்த விரிசல் சிவாஜி கணேசன் 100 ஆவது திரைப்படத்தின்போது வந்தது.

Sivaji Ganesan and B.R.Panthulu

அதாவது சிவாஜி கணேசன் 99 திரைப்படங்களில் நடித்து முடித்த பிறகு, பி.ஆர்.பந்துலுவின் “முரடன் முத்து”, ஏ.பி.நாகராஜனின் “நவராத்திரி” ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார். அந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில், அதாவது 1964 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி வெளியாக இருந்தது.

Advertising
Advertising

அப்போதுதான் ஒரு சிக்கல் எழுந்தது. அதாவது இரண்டு திரைப்படங்களில் எந்த திரைப்படம் சிவாஜி கணேசனின் 100 ஆவது திரைப்படமாக அமையப்போகிறது என்பதுதான் அந்த சிக்கல். இது குறித்து சிவாஜி கணேசனே முடிவெடுக்க வேண்டியதாக இருந்தது.

Navarathri

இயக்குனர் பி.ஆர்.பந்துலு, தான் இயக்கிய “முரடன் முத்து” திரைப்படத்தைத்தான் சிவாஜி கணேசன் 100 ஆவது திரைப்படமாக அறிவிப்பார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால் சிவாஜிக்கு நெருக்கமானவர்கள் பலரும் “நவராத்திரி” படத்தில் சிவாஜி 9 கெட்டப்களில் நடித்திருந்ததால் அத்திரைப்படம் 100 ஆவது திரைப்படமாக அமைந்தால் நன்றாக இருக்கும் என கூறினார்களாம்.

ஆதலால் சிவாஜி கணேசன் தனது நண்பர்களின் மனம் நோகக்கூடாது என்பதற்காக “நவராத்திரி” திரைப்படத்தை தனது 100 ஆவது திரைப்படமாக அறிவித்திருக்கிறார். இதனால் பி.ஆர்.பந்துலுவுக்கும் சிவாஜிக்கும் இடையே சிறு விரிசல் ஏற்பட்டுவிட்டதாம்.

B.R.Panthulu

அந்த காலகட்டத்தில் சிவாஜி கணேசனை வைத்து படம் இயக்குபவர்கள் யாரும் எம்.ஜி.ஆரை வைத்து படம் இயக்க மாட்டார்களாம். அதே போல் எம்.ஜி.ஆரை வைத்து படம் இயக்குபவர்கள் சிவாஜியை வைத்து படம் இயக்கமாட்டார்களாம். ஆனால் பி.ஆர்.பந்துலுவுக்கு எம்.ஜி.ஆரை இயக்கும் வாய்ப்பு வந்தது.

ஒரு நாள் கடற்கொள்ளையை அடிப்படையாக வைத்து வீனஸ் பிக்சர்ஸ் கிருஷ்ணமூர்த்தியிடம் ஒரு கதையை கூறியிருக்கிறார் பந்துலு. அந்த கதையை கேட்ட கிருஷ்ணமூர்த்தி, இந்த கதையை எம்.ஜி.ஆரிடம் கூறுங்கள், அவர் நிச்சயமாக நடிப்பார் என கூறினாராம். அதற்கு பந்துலு “எம்.ஜி.ஆர் எப்படி என்னுடைய படத்தில் நடிப்பார்” என கேட்டாராம்.

Aayirathil Oruvan

“அதெல்லாம் நிச்சயமாக எம்.ஜி.ஆர் நடிப்பார். உனக்கு விருப்பம் என்றால் சொல். நான் பேசிப்பார்க்கிறேன்” என கிருஷ்ணமூர்த்தி கூற, அதற்கு பந்துலுவும் ஒப்புக்கொண்டுள்ளார். அதன் பின் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி எம்.ஜி.ஆரை சந்தித்து பந்துலு உங்களுக்காக ஒரு கதை வைத்திருப்பதாக கூற, அதன் பின் எம்.ஜி.ஆரும் பந்துலுவிடம் அந்த கதையை கேட்டார். எம்.ஜி.ஆருக்கு அந்த கதை பிடித்துப்போக அப்படி உருவான திரைப்படம்தான் “ஆயிரத்தில் ஒருவன்”. அதன் பின் எம்.ஜி.ஆரை வைத்து பல திரைப்படங்களை இயக்கினார் பி.ஆர்.பந்துலு.

இதையும் படிங்க: கே.எஸ்.ரவிக்குமார் படப்பிடிப்பில் நடிகையுடன் வாக்குவாதம் செய்த சேரன்… ஆனால் கடைசியில் நடந்ததுதான் டிவிஸ்ட்டே!!

Published by
Arun Prasad

Recent Posts