வெற்றிமாறனால் நாட்டுக்கு ஆபத்து… நீங்கள் என்ன மனநோயாளியா??... கொந்தளித்த விஜய் பட இயக்குனர்…
தமிழின் முன்னணி இயக்குனராக திகழும் வெற்றிமாறன் “பொல்லாதவன்”, “ஆடுகளம்”, “அசுரன்” என முக்கிய வெற்றித்திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் ஒரு டிரெண்ட் செட்டராக திகழ்ந்து வருகிறார். சினிமாவில் சாதிக்க விரும்பும் உதவி இயக்குனர்கள் பலருக்கும் வெற்றிமாறன் ஒரு முன்னோடியாக திகழ்கிறார்.
வெற்றிமாறன் தற்போது “விடுதலை” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் சூரி கதாநாயகராக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்திலும் நடிக்கிறார். இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக “விடுதலை” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால் இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் காத்திருப்பும் அதிகமாகியுள்ளது.
இதனிடையே சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய வெற்றிமாறன் “திருவள்ளுவருக்கு காவி அடையாளம் கொடுக்கிறார்கள். ராஜராஜ சோழனை இந்துவாக மாற்றுகிறார்கள்” என்று கூறினார். இது இணையத்தில் பெரும் சர்ச்சையானது. வெற்றிமாறனின் பேச்சுக்கு பல எதிர்ப்புகளும் எழுந்துவருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் பேசிய இயக்குனர் பேரரசு “வெற்றிமாறன் ராஜராஜ சோழனை இந்துவாக காட்டுகிறார்கள் என்று கூறுகிறார். அப்படி என்றால் ராஜராஜ சோழன் வேற்று மதத்தைச் சேர்ந்தவரா என்ன? கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் எல்லா கடவுள்களையும் வணங்குகிறார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இதில் என்ன பிரச்சனை?
ஒரு காலத்தில் நாம் தனி தனி மாகாணங்களாக இருந்தோம். ஆனால் இப்போது இந்தியா என்ற நாட்டுக்குள் இருக்கிறோம். அப்படி என்றால் நாம் இந்தியர்கள் இல்லை என்று சொல்லமுடியுமா? உங்களை போன்ற போலி நாத்திகர்களால் தான் நாட்டுக்கு ஆபத்து, நீங்கள் எல்லாரும் மனநோயாளிகள்” என வெற்றிமாறனை கடுமையாக விமர்சித்துள்ளார்.
எனினும் “ஒரு காலத்தில் சைவர், வைணவர் என்ற பிரிவு இருந்தது. இதில் ராஜராஜசோழர் சைவ சமயத்தை பின்பற்றியவர். இதனை குறிப்பிடும்படியாகத்தான் வெற்றிமாறன் அவ்வாறு பேசினார்” என இணையத்தில் சிலர் வெற்றிமாறனுக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
“பேரரசு பல காலமாக தொடர்ந்து பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து வருபவர். ஆதலால் தான் வெற்றிமாறனை எதிர்த்து பேசுகிறார்” எனவும் இணையத்தில் பல பேச்சுக்கள் அடிபடுவதும் குறிப்பிடத்தக்கது.