நான் ஜாகுவார் கார்ல வந்தா உனக்கு ஏன் எரியுது?!.. சர்ச்சைகளுக்கு பதில் சொன்ன பா.ரஞ்சித்..

அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் பா.ரஞ்சித். தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளையும், வலிகளையும் தனது படங்களில் பேசுவார். குறிப்பாக இவரின் படங்களில் தலித் அரசியல் அதிகம் விவாதிக்கப்படும். வட சென்னை மக்களை பற்றியும் இவரின் படங்களில் அதிகம் பேசியிருக்கிறார்.
ரஜினியை வைத்து கபாலி படத்தை எடுத்தார். மலேசியா போன்ற நாடுகளில் தமிழர்கள் டான்-ஆக இருக்கும் விஷயத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருந்தார். அதோடு, தொலைந்து போன மனைவியை கணவன் தேடும் செண்டிமெண்ட் காட்சிகளும் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது.
இந்த படம் ஹிட் அடிக்கவே மீண்டும் ரஜினியை வைத்து காலா படத்தை எடுத்தார். மும்பை தாராவியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களை அங்கிருந்து அகற்றிவிட்டு அந்த இடத்தை ஆக்கிரமிக்க நினைக்கும் அரசியலுக்கு எதிரான குரலை இந்த படத்தில் ரஞ்சித் பதிவு செய்திருந்தார். வலதுசாரி ஆதரவாளரான ரஜினியையே இந்த படத்தில் அந்த கொள்கைக்கு எதிராக பேச வைத்தார். ஆனால், இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆர்யாவை வைத்து இவர் இயக்கிய சார்பேட்டா பரம்பரை படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

சினிமாவில் இயக்குனர் என்பதோடு மட்டுமில்லாமல் நீலம் என்கிற அமைப்பை துவங்கி தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளையும், கலைகளையும் அதில் பேசி வருகிறார். அதுபோன்ற கருத்துக்களை சொல்லும் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். ஒருபக்கம் ரஞ்சித்தின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் அவரை விமர்சிப்பது உண்டு. சமீபத்தில் கூட நீயா நானா நிகழ்ச்சியில் பேசிய காமெடி நடிகர் ஒருவர் ‘தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனையை பேசி சம்பாதித்து அந்த மக்களுக்கு நல்லது செய்யாமல் இவர்கள் ஜாலியாக காரில் போகிறார்கள்’ என பேசினார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் ஒரு சினிமா விழாவில் பேசிய பா.ரஞ்சித் ‘என் மீதான விமர்சனங்களை சின்ன வயதிலேயே பார்த்துவிட்டேன். கடைக்கு சென்று பால் வாங்கினால் என் கை மீது உன் கை படக்கூடாது’ என கடைக்காரர் சொன்னார். எனக்கு எல்லாம் பழகிவிட்டது. முதலில் இவனெல்லாம் சினிமாவுக்கு வரக்கூடாது என்றார்கள். அதன்பின் இவனெல்லாம் படம் எடுக்கக் கூடாது என்றார்கள். படம் ஹிட் அடித்தவுடன் ‘சம்பாதித்த காசை மற்றவர்களுக்கு கொடுக்கலாமே’ என்கிறார்கள்.
இவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதே தெரியவில்லை. உங்களுக்கு நான் படமெடுப்பது பிரச்சனையா இல்லை அந்த காசில் கார் வாங்கியது பிரச்சையா?’ என கேள்வி எழுப்பிய ரஞ்சித் ‘உண்மையில் நான் படமெடுப்பதுதான் அவர்களுக்கு பிரச்சனை. ஆனால், அதை செய்யாமல் இருக்க முடியாது’ என பேசியிருக்கிறார்.