வலியோடு இருப்பவர்களுக்கு கருவியாக இருங்கள் - சமுத்திரகனியின் 'நச்" சென்ற பேச்சு
படவிழா ஒன்றில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனி இளைஞர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் நச்சென்று இருந்தன. நெகிழ்ச்சியாகவும் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்கள் மற்றும் சந்தோஷமான தருணங்களையும் சுவைபட கூறுகிறார் பாருங்கள்.
நாம போறதும் தெரியக்கூடாது. செய்றதும் தெரியக்கூடாது. நல்லது செஞ்சிட்டு திரும்ப பார்க்காம போய்க்கிட்டே இருக்கணும். வீட்ல இருந்தா சேட்டை பண்றேன்னு 4 வயசுல பள்ளியில சேர்த்தாங்க. அதனால ஒரு வயசுக்கு முந்தியே 14வயசுல 10வது படிச்சேன். அப்புறமா சினிமாவுல ஆசைப்பட்டு அப்பாவோட பாக்கெட்ல கொஞ்சம் காச எடுத்துக்கிட்டு சென்னைக்குப் போனேன். அங்கே போய் என்ன செய்றதுன்னு தெரில. கைல ஒரு டைரி மட்டும் வச்சிருந்தேன்.
அதில கொஞ்சம் நடிகர் மற்றும் டைரக்டர்களோட அட்ரஸ் இருந்தது. அண்ணா மேம்பாலத்துக்கு கீழே நைட் பசியோடு படுத்துக்கிட்டு இருந்தேன். ஒரு போலீஸ்காரர் என்னை எழுப்பி விசாரித்து ஸ்டேஷன் கூட்டிப் போய் நைட் தங்க வைத்தார். காலைல எனக்கு அட்வைஸ் பண்ணி ஊருக்குப் போகச் சொன்னார். இல்ல நான் தி.நகருக்கு போகணும் எந்த பஸ்ல போகணும்னு கேட்டேன். நீ சினிமாவுல ஜெயிச்சுடுவடா போடான்னு சொல்லி எந்த நம்பர் பஸ் போகும்னு சொல்லி என்னை அனுப்பி வைத்தார். அந்த நல்ல உள்ளத்தை இன்னிக்கு வரைக்கும் தேடிக்கிட்டு இருக்கேன்.
உன்னைச்சரணடைந்தேன்...நெறைஞ்ச மனசு என 2 படங்கள் பண்ணினேன். ஆனால் அது பெரிய அளவுல ஹிட் ஆகவில்லை. நாம எந்த இடத்துல தோக்குறோம். ஏதோ ஒண்ணு நமக்குத் தெரில. அதைக் கத்துக்கிடணும். அதுக்கு அப்புறம் தான் டைரக்ட் பண்ணனும்னு முடிவு பண்ணினேன். உடனே அமீர் சார்ட போய் சேர்ந்தேன் பருத்திவீரனில் உதவி இயக்குனர் ஆக ஒர்க் பண்ணினேன்.
உச்சி வெயில்ல ஊரோரம் புளிய மரம் சாங் எடுத்தாங்க. அப்போ யாரோட நிழலும் தரையில அதிகமா விழக்கூடாது என்கிறதால 12 மணிக்கு மேல நல்லா வெயில் அடிக்கும் போது ஷ_ட்டிங் எடுத்தாங்க. எனக்கு மூக்குல இருந்து ரத்தம் வருது. உடனே ஒருத்தர் நல்லா செக் பண்ணுங்க. பிளட் கேன்சரா இருக்கப் போவுதுன்னு பயமுறுத்தினார்.
கொஞ்ச நேரம் எனக்கு மண்டை எல்லாம் குடைஞ்சது. அப்புறம் அப்படியே உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துட்டு வேலையைப் பார்த்தேன். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ரத்தம் வந்து கிட்டே இருந்தது. நானும் என்னென்னவெல்லாமோ ட்ரீட் மெண்ட் எடுத்துப் பார்த்தேன். ஒண்ணும் கேக்கல. நிறைய செக் அப் பண்ணி பார்த்தாங்க.
பிரயோஜனமே இல்ல. அதுக்கு அப்புறமா செல்வி சீரியல் எடுத்துக்கிட்டு இருந்தேன். அப்போது அங்கு கடவுள் வருவார்னு சொன்னாங்க. கடவுள்னா யார்றா...நாமளும் பார்க்கணுமேன்னு நெனச்சி அவர பார்க்க ஆவலா இருந்தேன்.
சிவானந்தர் தான் வந்தார். உடனே அவர் என்னப் பற்றி நலம் விசாரிச்சார். உங்களுக்கு என்ன வேணும்னு கேட்டார். ஒண்ணும் வேண்டாம். மூக்குல இருந்து ரத்தம் வருது. அதைத் தடுத்தா போதும்னு சொன்னேன். உடனே சிவானந்த குரு மூக்கில் இருந்து ரத்தம் வருவதைத் தடுக்க டேபிளட் கொடுத்தார். என்னய்யா நானும் எவ்வளவோ மெடிசின் பண்ணிருக்கேன்.
நீங்க 4 மாத்திரையைக் கொடுத்து சாப்பிட சொல்றீங்க. இதைப் போட்டா போதும்னு சொல்றீங்கன்னு கேட்டேன். போடுப்பா...போயிடும்னு சொல்லிக்கிட்டு போய்க்கிட்டே இருந்தார். அவரு கொடுத்ததுல 2 மாத்திரை தான் போட்டேன். இன்னிக்கு வரை எந்த பிரச்சனையும் இல்ல. அதுக்கு அப்புறமா அவரைத் தேடிப் போய் நன்றி சொல்லலாம்னு போனேன். அவருக்கிட்ட போய் உதவியாளர்கள் சொல்ல. அவன் எதுக்கு என்ன பார்க்கணும். நான் அவனப் பார்க்கத் தயாரா இல்லன்னு சொல்லு என்றார்.
பிரச்சனை உள்ள இடத்துக்குப் போய் நாம சரி செஞ்சிட்டு போய்க்கிட்டே இருக்கணும். நாம செய்றதும் தெரியக்கூடாது. செய்யணும்னு நினைச்சா போதும். எல்லாம் தானா தேடி வரும். கொடுக்கறதுக்கு மட்டும்தான் மனசு இருக்கணும். நாம ஒரு கருவியாத் தான் இருக்கணும். வலியோடு இருப்பவர்களுக்கு ஒரு கருவியாக இருக்கணும்.
சேத்தூர் காளீஸ்வரி தியேட்டர். நான் சிகப்பு மனிதன் படம் ஓடுது. படம் பார்க்க காசு இல்ல. கேன்டீன்ல போய் நான் முறுக்கு விக்கிறேன்னு சொன்னேன். அப்போதான் படம் பார்க்க முடியும்னு நெனச்சு அந்த வேலையை செய்து டெய்லி 4 ஷோ பார்த்தேன்.
விசாரணை படம் பார்த்து ரஜினி பாராட்டினார். உங்களுக்கும் எனக்கும் ஒரே குரு. பாலசந்தர் சார் தான். ஆனால் நான் உங்கள சந்திக்கவே இல்ல என சொன்ன ரஜினி கட்டிப்பிடித்துக் கொண்டார்.
தொண்டன் படத்தை சீக்கிரமா முடிப்பதில் வந்த காச எல்லோருக்கும் பிரிச்சிக்கொடுத்துட்டேன். ரஜினியுடன் ஒரு படத்திலாவது சேர்ந்து நடித்துவிட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அப்போ தான் ரஞ்சித் சார் கபாலி படத்தில நடிப்பதற்காக என்னை அழைத்தார். நாம் எதைத் தேடி வந்தோமோ அது நம்மைத் தேடி சரியாக வரும்.
நாம் காற்று, நீர், புயல் மாதிரி இருக்கணும். ஆனால் நான் தான் செஞ்சேன்....என யாருக்கும் தெரியக்கூடாது. கடந்து போகணும். நாம் செய்றது யாருக்குமே தெரியக்கூடாது. அதை விளம்பரப்படுத்தக்கூடாது. நாம செய்றது மண்ணுக்குத் தெரியும். காற்றுக்குத் தெரியும். கடலுக்குத் தெரியும். ஏன் இந்த சுவர்களுக்கும் தெரியும் என்று வாழ்க்கையின் யதார்த்தத்தைப் படம் பிடித்துக் காட்டினார் சமுத்திரக்கனி.