எத்தனையோ காதல் படங்கள் வந்தாலும் இந்த அளவு எபெக்ட் வேறு எதிலுமில்லை...!
காதல் படங்கள் என்றாலே அந்தக் காலம் அம்பிகாவதி படத்திலிருந்து இந்தக்காலம் லவ் டுடே வரை இளைஞர்கள் ரசிக்கத் தான் செய்கிறார்கள்.
பல படங்கள் கதைக்கேற்ப ரசிகர்களுக்கு ரசனை விருந்தை அளிக்கிறது. சில படங்கள் சோடை போன சில சம்பவங்களாலும் அரைத்த மாவையே அரைப்பதாலும் கதையை சொதப்பி ரசிகனைத் திரையரங்கின் பக்கம் வரவிடாமல் செய்து விடுகிறது. என்றாலும் உண்மைக்காதல் மட்டும் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை ஜெயித்துக்கொண்டே இருக்கிறது.
இங்கு நாம் அப்படிப்பட்ட ஒரு காதலை மையமாகக் கொண்ட படத்தைப் பற்றி நாம் பார்ப்போம். படமானது அந்தக் காதலுக்கு சாதியால் உண்டாகும் இடையூறுகளையும் முடிவில் சாதியா, காதலா என்பதையும் தோலுரித்துக் காட்டியுள்ளது பாரதி கண்ணம்மா.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு இளைஞன் பாரதி. தன் தங்கையுடன் வாழ்ந்து வருகிறான். அதே ஊரைச் சேர்ந்த பண்ணையாரிடம் சிறுவயது முதலே வேலை பார்த்து வருகிறான். அவரது நன்மதிப்பையும் பெற்றவன். அவன் மீது பண்ணையாரும் மிகுந்த அன்பு கொண்டவராக உள்ளார். இதற்கிடையில் அவரது உயிரைக் கூட பாரதி காப்பாற்றி விடுகிறான்.
பண்ணையார் சாதிப்பற்று அதிகளவில் கொண்டவர். இவரது ஒரே மகள் கண்ணம்மா. பட்டணத்தில் படித்து வந்த இவள் மீது அதிக அக்கறைக் கொண்டவர் பண்ணையார். தன் மகளுக்குத் தன் சாதியில் உள்ள ஒருவரைத் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
பாரதியின் பண்பையும் அவன் தன் மீது காட்டும் அன்பையும் மதித்து அவனைக் காதலிக்க ஆரம்பிக்கிறாள் கண்ணம்மா. ஆனால் பாரதி முதலில் இதை மறுக்கிறான்.
தன் மகள் ஒருவனைக் காதலிக்கிறான் என்பது பண்ணையாருக்குத் தெரிகிறது. ஆனால் அவன் யாரென்று அவரால் அறிய முடியவில்லை.
இதற்கிடையில் தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாட்டையும் செய்கிறார் பண்ணையார். திருமணத்திற்கு முதல் நாள் கண்ணம்மா தற்கொலை செய்து கொள்கிறாள். அவள் உடலுக்கு நெருப்பு வைக்கும் வேளையில் திடீர் என யாரும் எதிர்பாராத வகையில் ஒரு நிகழ்வு அரங்கேறுகிறது.
ஆம்...அவள் இழப்பைத் தாங்க முடியாத பாரதி, அவளை எரிக்கும் தீயில் விழுந்து தானும் உயிரையே விடுகிறான். இதை அந்தக்காலத்தில் உடன்கட்டை ஏறுதல் என்பார்கள். ஆனால் கணவன் இறந்ததும் அந்தத் தீயில் மனைவி தான் உடன்கட்டை ஏறுவாள். இங்கு அது தலைகீழாக நடக்கிறது.
அப்போது தான் தன் மகளைப் பாரதி தான் காதலித்துள்ளான் என்ற விஷயம் பண்ணையாருக்கேத் தெரிகிறது. மகளும் அவனைத் தான் விரும்பி இருக்கிறாள் என்பதும் தெரிகிறது. தன் சாதிவெறி தான் மகளது இழப்பிற்குக் காரணம் என்பதையும் உணர்ந்து மீளாத் துயரத்தில் ஆழ்கிறார்.
காதலுக்கு சாதி எத்தனையோ படங்களில் தடையாக உள்ளது. ஆனால் இந்தப் படத்தில் தான் அந்தக் கருத்தை ஆழமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சேரன்.
1997ல் வெளியான இந்தப் படத்தில் பார்த்திபன் பாரதியாக வாழ்ந்துள்ளார். மீனா கண்ணம்மாவாக நடித்துள்ளார். விஜயகுமார், வடிவேலு, ரஞ்சித் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவா இசை அமைத்துள்ளார்.
சின்ன சின்ன கண்ணம்மா, நாலெழுத்து படிச்சவரே, பூங்காற்றே பூங்காற்றே, ரயிலு புல்லட் ரயிலு, இரட்டைக்கிளி ரெக்கை, தென்றலுக்குத் தெரியுமா, வாடிப்பட்டி மேளமடா ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.