ஒரு பாட்டுக்கு இத்தனை கோடி செலவா?!..ஆந்திராவிலும் ஆட்டத்தை காட்டும் ஷங்கர்...என்ன ஆகப்போகுதோ!..
தமிழ் சினிமாவில் அதிக செலவில் திரைப்படங்களை இயக்கும் பிரம்மாண்ட இயக்குனர் என்கிற பெயரை எடுத்தவர் இயக்குனர் ஷங்கர். ஆனால், அது ரசிகர்களுக்கு காட்சி விருந்தாகவும், ரசிகர்களை கவர்ந்து அவரின் திரைப்படங்கள் வெற்றியும் பெறுவதால் தயாரிப்பாளர்கள் துணிந்து செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள்.
குறிப்பாக பாடல் காட்சிகளுக்கு ஷங்கர் மிகவும் மெனக்கெடுவார். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் கலந்து அழகாக காட்சி கோர்வையாக்கி ரசிகர்களுக்கு விருந்தளிப்பார். இதற்காக ஒரு பாடல் காட்சிக்கே சில கோடிகளை அவர் செலவு செய்வார். ஒருவேளை அவரின் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை எனில், அது தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தில் முடியும்.
எனவே, அதிக பட்ஜெட்டில் படம் தயாரிக்க முடிந்த தயாரிப்பாளர்கள் மட்டுமே ஷங்கரின் படத்தை தயாரிக்க முடியும் என்கிற நிலை உருவாகி பல வருடங்களாகிவிட்டது. தற்போது லைக்கா புரடெக்ஷன் நிறுவனத்தின் ‘இந்தியன் 2’ மற்றும் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் ஒரு படம் என இரண்டு திரைப்படங்களை ஷங்கர் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், ராம்சரண் படத்திற்காக நியூஸ்சிலாந்து நாட்டில் ஒரு பாடல் காட்சியை எடுக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம். இந்த ஒரு பாடல் காட்சிக்காக மட்டும் ரூ.15 கோடி செலவு செய்யவுள்ளனராம். இதுவரை எந்த படத்தின் பாடல் காட்சியும் அந்த நாட்டில் எடுக்கப்படவில்லை. இதற்காக அழகான இடங்களை ஷங்கர் தேர்வு செய்து வைத்துள்ளாராம்.
இந்த திரைப்படத்தை தெலுங்கில் பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரிக்கும் தில்ராஜு தயாரித்து வருகிறார். விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்திற்கும் இவர்தான் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.