More
Read more!
Categories: Cinema History Cinema News latest news

கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி…! ஸ்ரீதருக்கு இயக்குனர் பரிசை தந்த கல்யாணப்பரிசு..!

தமிழ்த்திரை உலகில் புரட்சிரமான இயக்குனர்களில் ஒருவர் டைரக்டர் ஸ்ரீதர். அன்றாட வாழ்வில் எப்படி பேசுகிறார்களோ அதே போன்ற தமிழை வசனமாக எழுதுவதில் வல்லவர்.

இவர் முதன் முதலில் ரத்தபாசம் என்ற படத்திற்கு வசனம் எழுதி புரட்சி செய்தார். இயக்குனராக அவதாரம் எடுத்த முதல் படம் கல்யாணப்பரிசு.

Advertising
Advertising

அது எப்படி சாத்தியமானது என்பதை அவரே சொல்லக் கேட்போம்.

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே செங்கற்பட்டில் தான். இளம் வயதிலிருந்தே கதை, கட்டுரைகளைப் படிப்பதிலும் எழுதுவதிலும் அதிக ஆர்வமாக இருந்தது. பாடப்புத்தகங்களை விட கதை, கட்டுரைகளைத் தான் அதிகம் படித்தேன்.

இதனால் பாடப்புத்தகங்களை வெறுத்து ஒதுக்கவில்லை. பரீட்சையிலும் நான் தேறாமல் இருந்தது இல்லை. படிப்பு முடித்த கையோடு கூட்டுறவு சங்கத்தில் குமாஸ்தா வேலை கிடைத்தது. ஓய்வு நேரங்களில் வீட்டில் எதையாவது எழுதிக்கொண்டே இருப்பேன்.

எனது தாயார் ஏன் இந்த பேப்பரையும் பேனாவையும் கட்டிக்கொண்டு மாரடிக்கிறாய்? நாளைக்கு இதுவா உனக்கு சோறு போடப்போகிறது என்று கேட்பார். ஆனால் அந்த நேரத்தில் அந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அது ஒரு புதிரான வாழ்க்கை.

ஒரு சமயம் ஆங்கில நாடகமேதை ஷேக்ஸ்பியரின் கதை ஒன்றைப் படித்தேன். அதை 3 மணி நேரம் ஓடக்கூடிய நாடகமாக்கி நடித்தேன். உரையாடல்களையும் நானே எழுதினேன். கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றிய போது உலகம் சிரிக்கிறது என்ற நாடகத்தை நடத்தி நானும் அதில் நடித்தேன்.

அன்று நாடகத்திற்கு தலைமை வகித்த சங்கத்தின் மூத்த அதிகாரி நீ எதிர்காலத்தில் பெரிய ஆளாக வருவாய் என பாராட்டினார். அதன்பிறகு அவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. என்னிடம் ஒரு கடிதத்தைத் தந்தார்.

10 நாள்கள் நீ ஒழுங்காக வேலை செய்யாத காரணத்தால் வேலையிலிருந்து நீக்குகிறேன் என்று எழுதி இருந்தது. தொடர்ந்து நண்பர்களின் ஊக்கத்தால் லட்சியவாதி என்று நான் எழுதி வைத்த நாடகத்துடன் சென்னை சென்றேன்.

எனக்கு விலாசம் தெரிந்த படக்கம்பெனிகள் எல்லாவற்றிற்கும் சென்று கதை எழுதியிருக்கிறேன். தேவையா என்று கேட்டேன். அப்போது என்னை யாரும் ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. அந்த நேரத்தில் பத்திரிகை ஆசிரியராக உள்ள நண்பர் ஒருவரை சந்தித்தேன்.

Director Sridhar 2

அவர் டி.கே.எஸ்.சகோதர்களிடம் சென்று உன் நாடகத்தைக் கொடு. நல்ல நாடகமாக இருந்தால் அவர்கள் நிச்சயம் அரங்கேற்றுவார்கள். அதன் மூலம் நீ சினிமாவுலகில் எளிதில் புகுந்து விடலாம் என்றார். டி.கே.சண்முகம் அவர்களை நான் சந்தித்தேன். என்ன தம்பி வேண்டும் என்று கேட்டார். நான் வந்த விவரத்தை எடுத்துச் சொல்லி லட்சியவாதி என்ற கதைச்சுருக்கத்தை அவரிடம் கொடுத்தேன்.

என்னிடம் முதலில் அவர் சொன்ன வார்த்தை இதுதான். தம்பி…என்னிடம் 250 கதைகள் உள்ளன. இது 251வது கதை. இப்போது நீ என்ன சொல்கிறாய் என்று கேட்டார். தொடர்ந்து நான் கொடுத்த கதைச்சுருக்கத்தைப் புரட்டினார். அதில் உள்பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் இவ்வாறு எழுதியிருந்தேன்.

மனிதன் பிறக்கும்போதே அயோக்கியனாகப் பிறப்பதில்லை. சூழ்நிலையும் சந்தரப்பமும் தான் ஒருவனை நல்லவனாகவோ அயோக்கியனாகவோ செய்து விடுகிறது..! என்று எழுதியிருந்தேன்.

அதைப் படித்ததும் கதையின் முதல் பக்கத்தைப் படிக்க ஆரம்பித்தார். தம்பி மாலை 7 மணிக்கு என்னை வந்து பார் என்றார். கதை என்னிடமே இருக்கட்டும் என்றும் சொன்னார்.

அப்படி சொன்னதும் என் மனதிற்குள் பட்டாம்பூச்சி பறந்தது. மாலை 7 மணிக்கு முன்னரே அலுவலகத்துக்குச் சென்றேன். தம்பி என்று என்னை அழைத்தவர்…இந்த கதையை நீதான் எழுதினாயா என்று கேட்டார். ஆம் என்றேன்.

Ethirparathathu

உண்மையிலேயே நீதான் எழுதினாயா என 2ம் முறை கேட்டார். ஆம் என்றேன். அப்படியானால் இந்த கதைக்கான வசனங்களை எழுதியுள்ளாயா என்று கேட்டார். ஆம். ஆனால் அது செங்கற்பட்டில் உள்ளது. நாளை கொண்டுவருகிறேன் என்றேன். மறுநாள் அதைக் கொண்டு சென்று கொடுத்தேன்.

அவர் ஒருசில மாற்றங்களைச் சொன்னார். அதேபோல கிளைமாக்ஸ் காட்சிக்கு தன் வீட்டிலேயே கதை எழுதச் சொன்னார். எழுதிக் கொடுத்தேன். உண்மையிலேயே நீதான் எழுதினாயா என உன்னை சோதிக்கத் தான் நான் இங்கு எழுதச் சொன்னேன்.

உண்மையிலேயே உன்னிடம் திறமை உள்ளது என்றார். எனது லட்சியவாதி நாடகத்திற்கு ரத்த பாசம் என்ற பெயரிட்டு மேடையேற்றினார் டி.கே.எஸ்.

அன்று என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. எதிர்பாராதது எனது முதல் படமாக வெளியானது. அதில் பேரும் புகழும் கிடைத்ததும் ரத்தபாசமும் படமானது. இரண்டும் மாபெரும் வெற்றிபெற, மகேஸ்வரி படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. எழுதி முடித்தேன்.

அப்போது நண்பர் கிருஷ்ணமூர்த்தி என்னைச் சந்தித்தார். நாமே ஏன் சொந்தமாகப் படம் எடுக்கக்கூடாது என்று கேட்டார். இருவரும் சேர்ந்து சிவாஜியிடம் வந்தோம். எங்கள் எண்ணத்தையும் நிலையையும் எடுத்துச் சொன்னோம். நீங்கள் எங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டேன்.

தம்பி கலங்காதே. மேலே காரியத்தை நடத்திக் கொண்டு போ. நான் இருக்கிறேன் எல்லாவற்றையும் கவனிக்க என்று என்னை ஊக்கப்படுத்தினார். அந்த ஊக்கத்தில் வந்தது தான் அமரதீபம், உத்தமபுத்திரன். படம் சக்கை போடு போட்டது.

உடனே கிருஷ்ணமூர்த்தி என்னை நீ டைரக்ட் செய் என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அதே நேரம் எனக்குள் அந்த ஆவலும் இருந்தது. என்னைப் பொறுத்தவரை உன்னிடம் திறமை இருக்கிறது. நீ நன்றாக டைரக்ட் செய்வாய் என்றார்.

Kalyanaparisu

வட இந்திய டைரக்டர் சாந்தாராமை நான் குருவாக நினைத்து இருந்தேன். அவரைப் போல டைரக்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அமரதீபம், உத்தமபுத்திரன் உருவான போது டைரக்டர் பிரகாஷ் ராவ் ஸெட்டில் வேலை செய்வதை நான் உன்னிப்பாகக் கவனித்தேன். நண்பரின் உந்துதலில் எனக்கு தன்னம்பிக்கை வந்தது.

கல்யாணப்பரிசு படத்தின் டைரக்டர் ஆனேன். கதையின் ஒவ்வொரு காட்சியையும் நான் பல நண்பர்களுக்கு விளக்கமாகச் சொல்லி, அவர்களது யோசனைகளைக் கேட்டேன். ஒவ்வொரு நாள் இரவும் படக்காட்சிகளை எப்படி படமாக்கலாம் என்று யோசித்து வருவேன்.

படம் வெளியாகி வெள்ளிவிழா கண்டது. எனது டைரக்ஷன் துறைக்கு இது ஒரு பிள்ளையார் சுழியாக அமைந்தது.

Published by
sankaran v

Recent Posts