சினிமா உலகில் ஸ்ரீதர் நுழைந்த கதை… நடிகனாக விரும்பியவருக்கு அடித்த லக்!

Published on: April 19, 2026
director sridhar
---Advertisement---

தமிழ்த்திரை உலகிலே பல சாதனைகளைச் செய்த புதுமை இயக்குனர் ஸ்ரீதர். கல்யாணப்பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம் உள்பட பல வெற்றிகரமான படங்களை இயக்கிய ஒரு பெரிய லெஜண்ட் இயக்குனர் ஸ்ரீதர். இவர் சினிமா உலகிலே எங்கே தனது வாழ்க்கையைத் தொடங்கினார்னு தெரியுமா? எப்படியாவது சினிமாவில் சேர்ந்து நடிகனாகி விட வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாக இருந்தது.

அவர் வாய்ப்பு தேடி அலைந்தபோது அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. அப்போது அவர் கண்ணில் பட்டதுதான் ஜூபிடர் பிக்சர்ஸ் விளம்பர போர்டு. அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தால் எப்படியாவது சினிமாவில் சேர்ந்துடலாம்னு அங்கு வேலை தேடினார் ஸ்ரீதர். அங்கு அவருக்கு தரப்பட்டது ஃபிலிம் ரெஃப்ரசன்டேட்டிவ் வேலை. அந்தக் காலகட்டத்துல வேலைக்காரி என்ற படத்தை ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. அந்தப் படம் மிகவும் வெற்றிகரமாக தமிழ்நாடு முழுவதும் ஓடிக்கொண்டு இருந்தது.

அந்தப் படத்துக்கு ரெஃப்ரசன்டேட்டிவாகப் போன ஸ்ரீதருக்கு ஒரு நாளைக்கு சம்பளம் இரண்டரை ரூபாய். அந்த வேலை ஸ்ரீதருக்கு ரொம்ப பிடித்து இருந்தது. அதுக்கு முக்கியமான காரணம் நிறைய நேரம் அவருக்குக் கிடைத்தது. மதியம் 2மணிக்கு படம் ஆரம்பிக்கும்போது தியேட்டருக்குப் போனா போதும். அப்புறம் அங்கு ஒரு மணி நேரம் இருந்துட்டு திரும்பிடுவாரு. திரும்ப மாலை 6மணிக்குப் போகணும். இரவு காட்சியில் பாதி வரை இருந்துட்டு திரும்ப தன்னோட அறைக்கு வந்துடுவார். நேரம் நிறைய கிடைத்ததால அதைப் பயன்படுத்திக் கொண்டு லட்சியவாதின்னு ஒரு அருமையான கதையை எழுதி முடித்தார் ஸ்ரீதர்.

அந்தப் படம்தான் ரத்த பாசம் என்ற பெயரில் படமாகி தமிழ் சினிமா உலகின் கதவை ஸ்ரீதருக்குத் திறந்து விட்டது. அந்தக் கதையைக் கொண்டு போய் சேர்க்கறதுக்கு ஸ்ரீதர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. அந்தக் காலகட்டத்தில் ஸ்ரீதர் ஊரான செங்கற்பட்டுல இருந்துதான் பேசும்படம் பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டு இருந்த சம்பத்குமார் என்பவர் வந்து கொண்டு இருந்தார். அவர் அந்த ஊர்வாசி. அதனால அவருக்கிட்ட போய் சினிமா உலகத்துல நான் சேர ஏதாவது வழி காட்டுங்கன்னு ஸ்ரீதர் கேட்டார். அப்போ ரொம்ப பிரபலமாக இருந்த நாடககம்பெனி டிகே பிரதர்ஸ். இந்தக் கதையை அவங்க நாடகமா போட்டாங்கன்னா நிச்சயமா உங்க வாழ்க்கையில திருப்புமுனை ஏற்படும்னு ஸ்ரீதரை அவரை சந்திக்க அனுப்பி வைத்தார். டிகே.ஸ்கூல்ல ஸ்ரீதர் சந்தித்த முதல்; நபர் டிகே.சண்முகம்.

கதையை முழுமையா எழுதிட்டீங்களான்னு கேட்டதற்கு, கதையை முழுமையா எழுதிட்டேன். இப்ப அது இல்ல. கதைச்சுருக்கம் மட்டும்தான் கையில இருக்குன்னு சொன்னார் ஸ்ரீதர். அந்த 3 பக்க கதைச்சுருக்கத்தை ஸ்ரீதர் கொடுத்ததும் அதைப் படித்துப் பார்த்தார் டிகே.சண்முகம். அந்த இளைஞனிடம் ஒரு ஃபயர் இருக்கு என்பதைத் தெரிந்து கொண்டார். முழு கதையும் கொண்டு வாங்க. நாடகமாகப் போடறதுக்கு யோசிக்கலாம் என்றவர் ஸ்ரீதரிடம் இருந்து முழு கதையையும் வாங்கிப் படித்துப் பார்த்தார். வாழ்க்கையில் பிறக்கும்போதே ஒருவன் கெட்டவனா பிறக்குறது இல்லை.

சந்தர்ப்பமும், சூழ்நிலையும்தான் ஒருவனை நல்லவனாகவும், கெட்டவனாகவும் மாற்றுது என்பதுதான் ஸ்ரீதர் எழுதி இருந்த கதையின் மூலக்கரு. கரூர் டிகே.சண்முகத்துக்கு இந்த கதை ரொம்ப பிடிச்சிருந்ததால இந்தக் கதையை நாங்க நிச்சயமாக நாடகமா போடுறோம். நீங்க வச்சிருந்த லட்சியவாதிங்கற பேரு பொருத்தமாக தோணல. அதனால ரத்த பாசம்னு பேரை மாற்றி நாடகமாகப் போட்டார் டிகே.சண்முகம். அந்த நாடகத்தின் வெற்றி தான் ஸ்ரீதருக்கு சினிமா உலகிலே கதவைத் திறந்தது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.