“பத்து பைசா கிடையாது”… சிவாஜியை வைத்து தயாரிப்பாளர் ஆன பிரபல இயக்குனர்… பலே ஆளுதான்!!
நவீன தமிழ் சினிமாவின் தந்தை என அழைக்கப்பட்ட இயக்குனர் ஸ்ரீதர், “கல்யாணப் பரிசு”, “காதலிக்க நேரமில்லை”, “ஊட்டி வரை உறவு” என 60க்கும் மேற்பட்ட பல வெற்றித்திரைப்படங்களை இயக்கியுள்ளார். அக்காலத்தில் தமிழின் முன்னணி இயக்குனராக திகழ்ந்த ஸ்ரீதர், தயாரிப்பாளர் ஆன கதை மிகவும் சுவாரசியமானது.
பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய ஸ்ரீதருக்கு திடீரென திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அவரது நெருங்கிய சினிமா நண்பர்களான எஸ். கிருஷ்ணமூர்த்தி, டி. கோவிந்தராஜன் ஆகிய சிலருடன் இணைந்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்தார். ஆனால் அவரிடம் படம் தயாரிக்கும் அளவுக்கு பணம் இல்லை. எனினும் ஸ்ரீதர் அப்போது சினிமாவில் பிரபலமான இயக்குனராக திகழ்ந்தார். ஆதலால் எப்படியாக பணத்தை திரட்டிவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அப்போதுதான் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.
சிவாஜியை சென்று நேரில் பார்த்த ஸ்ரீதர், “அமரதீபம்” என்ற கதையை கூறினார். கதை கேட்ட சிவாஜி, நடிக்க ஒப்புக்கொண்டார். அப்போது ஸ்ரீதர் சிவாஜியிடம் “மிகவும் நன்றி. ஆனால் உங்களுக்கு அட்வான்ஸ் கொடுக்க கூட எங்களிடம் பணம் இல்லை. நீங்கள் இந்த படத்தில் நடிப்பதாக விளம்பரப்படுத்தினால் நிச்சயமாக இத்திரைப்படத்திற்கு ஃபைனான்சியர்கள் கிடைப்பார்கள்” என கூறியுள்ளார்.
இதை கேட்ட சிவாஜி, ஸ்ரீதர் மேல் உள்ள நம்பிக்கையிலும் நட்பிலும் சரி என்று தலையாட்டிவிட்டார். இதுமட்டுமல்லாது சிவாஜி நடிக்கிறார் என்ற காரணத்தால் பத்மினியும் அட்வான்ஸ் வாங்காமல் நடிக்க ஒப்புக்கொண்டார்.
பிரகாஷ் ராவ் என்பவர்தான் “அமரதீபம்” திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. பிரகாஷ் ராவும் நடிகை சாவித்திரியும் நண்பர்கள். ஆதலால் பிரகாஷ் ராவிற்காக சாவித்திரியும் இத்திரைப்படத்தில் அட்வான்ஸ் வாங்காமல் நடிக்க ஒப்புக்கொண்டார். இவ்வாறு மூன்று உச்ச நடிகர்களையும் ஒப்பந்தம் செய்துவிட்டார் ஸ்ரீதர்.
தமிழின் உச்ச நட்சத்திரங்கள் நடிப்பதனால் ஸ்ரீதருக்கு பல ஃபைனான்சியர்கள் பணம் கொடுத்தனர். இப்படி துரிதமாக பிளான் போட்டுத்தான் ஸ்ரீதர் ஒரு தயாரிப்பாளராக ஆனார். அவர் தயாரித்த முதல் திரைப்படமே அமோக வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.