இயக்குனர் சொன்ன அந்த ஒரே வார்த்தை… மொத்தமாக படத்தில் இருந்தே விலகிய சிவாஜி கணேசன்… ஏன் இப்படி??
1962 ஆம் ஆண்டு முத்துராமந், தேவிகா, கல்யாண் குமார் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “நெஞ்சில் ஓர் ஆலயம்”. இத்திரைப்படத்தை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கியிருந்தார்.
“நெஞ்சில் ஓர் ஆலயம்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இத்திரைப்படத்தை ஹிந்தியில் “தில் ஏக் மந்தீர்” என்ற பெயரில் ரீமேக் செய்தார் ஸ்ரீதர். இதில் ராஜேந்திர குமார், மீனா குமாரி, ராஜ் குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது கதாநாயகி மீனா குமாரிக்காக ஒரு கார் தேவைப்பட்டது. ஆதலால் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணியிடம் வாடகைக்கு ஒரு கார் தேவைப்படுவதாக கூறினார் ஸ்ரீதர்.
உடனே ஒரு காரை கொண்டு வந்தார் ஜி.என்.வேலுமணி. காருக்கான வாடகை எவ்வளவு என்பது குறித்து ஸ்ரீதர் கேட்டபோது “வாடகை எல்லாம் வேண்டாம், என்னுடைய தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கிக்கொடுங்கள். அது போதும். இந்த காரை அந்த படத்திற்கான அட்வான்ஸாக நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்” என ஜி.என்.வேலுமணி கூறினாராம்.
இதன் பின் சில மாதங்கள் கழித்து ஸ்ரீதரை தேடி வந்தார் வேலுமணி. அப்போது “எழுத்தாளர் ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் என்ற கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். நீங்கள்தான் அதனை இயக்கவேண்டும்” என ஸ்ரீதரிடம் கூறினார் வேலுமணி.
அதற்கு ஸ்ரீதரும் சரி என்று ஒப்புக்கொள்ள, “யாருக்காக அழுதான்” திரைப்படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கியது. இந்த படத்திற்கு சிவாஜி கணேசனையும் சாவித்திரியையும் ஜோடியாக நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து “யாருக்காக அழுதான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் அத்திரைப்படத்தை முழுவதுமாக போட்டுப் பார்த்தார் இயக்குனர் ஸ்ரீதர். அவரோடு சிவாஜி கணேசனும் அத்திரைப்படத்தை பார்த்தார்.
ஸ்ரீதர் அத்திரைப்படத்தை முழுவதுமாக பார்த்து முடித்தபின் அதில் சிவாஜியின் தோற்றம் அவ்வளவு நன்றாக இல்லை என அவருக்குத் தோன்றியது. அதன் பின் இருவரும் காரில் சென்றுகொண்டிருந்தபோது ஸ்ரீதர், சிவாஜியிடம் “இந்த படத்தில் உங்களுடைய விக் (டோப்பா முடி) சரியாக அமையவில்லை. அதை மட்டும் கொஞ்சம் மாற்றி மீண்டும் வேறு மாதிரி எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்” என கூறினார். இதற்கு சிவாஜி எந்த பதிலும் கூறவில்லை.
இதனை தொடர்ந்து “நெஞ்சம் மறப்பதில்லை” திரைப்படத்தை இயக்குவதற்காக ஸ்ரீதர் வெளியூர் சென்றுவிட்டாராம். அத்திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பினார் ஸ்ரீதர். அப்போது ஸ்ரீதரை சந்தித்த வேலுமணி, “யாருக்காக அழுதான் திரைப்படத்தை டிராப் செய்துவிடலாம் என நினைக்கிறேன்” என கூறினார். இதனை கேட்ட ஸ்ரீதர் அதிர்ச்சியில் “ஏன்?” என கேட்டார்.
அதற்கு வேலுமணி “சிவாஜியின் விக்கை பற்றி நீங்க ஏதோ தப்பா பேசிட்டீங்களாம். அதில் சிவாஜிக்கு ஒரு சின்ன மனவருத்தம் ஏற்பட்டுவிட்டது. அதனால் இந்த படத்தை இதோட விட்டுடலாம்ன்னு இருக்கேன்” என கூறினார். எனினும் அதன் பின் சிவாஜியை வைத்து பல திரைப்படங்களை ஸ்ரீதர் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.