நீ ஒரிஜினல் இல்லை நீதான் டூப்பு- சத்யராஜை கண்டபடி பேசிய இயக்குனர்… ஏன் தெரியுமா?
சத்யராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருந்தது. தற்போது தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி என கலக்கி வருகிறார் சத்யராஜ். அவ்வாறு புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்து வரும் சத்யராஜை பார்த்து ஒரு இயக்குனர் “நீதான்யா டூப்பு” என கூறியுள்ளார். அந்த இயக்குனர் யார்? ஏன் அவ்வாறு கூறினார்? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
1992 ஆம் அண்டு ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “திருமதி பழனிச்சாமி”. இத்திரைப்படத்தில் சத்யராஜ், சுகன்யா, கவுண்டமணி உட்பட பலரும் நடித்திருந்தனர். இப்போதும் இத்திரைப்படம் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது படமாக்கப்பட்ட ஒரு சண்டை காட்சியில் ஹீரோ உயரத்தில் இருந்து குதிப்பது போன்று ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த காட்சியில் வழக்கம்போல் சத்யராஜிற்கு பதிலாக டூப் ஒருவரை நடிக்க வைத்து படமாக்கினார்கள். சினிமாவில் மிக ரிஸ்கான சண்டை காட்சிகளில் டூப் போடுவது வழக்கமான ஒன்றுதான்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு, மொத்தமாக எடிட் செய்து படக்குழுவினர் திரையிட்டு பார்த்தார்கள். அப்போது சத்யராஜ் அந்த சண்டை காட்சியை பார்த்துவிட்டு அருகில் அமர்ந்திருந்த சுந்தர்ராஜனிடம், “அண்ணே, டூப்பு என்னமா நடிச்சிருக்காருண்ணே” என புகழ்ந்தாராம்.
அதற்கு சுந்தர்ராஜன், “அவர்தான் ஒரிஜினல், நீதான் டூப்பு, யாரு ஒரிஜினலா பண்றாங்களோ அவுங்களை டூப்புன்னு சொல்றோம், யார் டூப்பா இருக்காங்களோ அவுங்கள ஹீரோன்னு சொல்றோம். சினிமாவுல இப்படி பேசியே பழக்கமாகிடுச்சி” என கூறினாராம். இதனை கேட்டு சத்யராஜ், கோபப்படவில்லையாம், மாறாக சிரித்தாராம்.