வெற்றிமாறனை இனி யாருக்கும் பிடிக்காமல் போகலாம்- ஜெய் பீம் நடிகர் ஓப்பன் டாக்…
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள “விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார் என்பதும் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்பதும் பலரும் அறிந்ததே.
வெற்றிமாறன் இதற்கு முன் இயக்கிய “விசாரணை”, “அசுரன்” ஆகிய திரைப்படங்களை நாவல்களில் இருந்து தழுவி படமாக்கியுள்ளார். “லாக்கப்” என்ற நாவலை தழுவி “விசாரணை”-ஐ உருவாக்கினார். அதே போல் “வெக்கை” என்ற நாவலை தழுவி “அசுரன்” திரைப்படத்தை உருவாக்கினார்.
இதனை தொடர்ந்து ஜெயமோகன் எழுதிய “துணைவன்” என்ற சிறுகதையை “விடுதலை” திரைப்படமாக உருவாக்கியுள்ளார். முந்தைய இரண்டு திரைப்படங்களிலும் சமூகப் பிரச்சனைகளை மிக தைரியமாக அணுகியிருக்கிறார் வெற்றிமாறன். “விசாரணை”, “அசுரன்” ஆகிய திரைப்படங்கள் ஒரு வகையில் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் விமர்சித்தே வந்துள்ளது.
வெற்றிமாறனை பிடிக்காமல் போகலாம்
அதே போல் “விடுதலை” திரைப்படமும் போலீஸின் அராஜகத்தை தோலுரித்துக் காட்டும் திரைப்படமாக உருவாகியிருப்பதாக தெரிய வருகிறது. இந்த நிலையில் “ஜெய் பீம்”, திரைப்படத்தில் குரு மூர்த்தி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவரும் “டாணாக்காரன்” என்ற திரைப்படத்தை இயக்கியவருமான தமிழ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார்.
அப்போது, “வெற்றிமாறன் விடுதலை படத்தின் படப்பிடிப்பின்போது அடிக்கடி கூறுவார். ரொம்ப கவனமாக கையாள வேண்டிய அரசியல் இது என்று. ஒரு இன விடுதலை அரசியலை குறித்து பேசும்போது கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்க வேண்டும். இந்த படத்தை பார்த்துவிட்டு, இது வரை வெற்றிமாறனை ஆதரித்தவர்கள் கூட அவரை எதிர்க்கலாம். இதுவரை வெற்றிமாறனை எதிர்த்தவர்கள் கூட அவரை ஆதரிக்கலாம். அப்படி ஒரு வாய்ப்பு இந்த படத்திற்குள் இருக்கிறது. வெற்றிமாறனும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.