தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன் ஆடுகளம், வடசென்னை, அசுரன், விடுதலை, விடுதலை 2 போன்ற படங்கள் மூலம் இந்திய சினிமாவின் சிறந்த மற்றும் கவனிக்கத்தக்க இயக்குனராகவும் மாறினார். இவரின் படங்களில் நடிக்க ஜூனியர் என்டிஆர், ஷாருக்கான் போன்ற நடிகர்களே ஆசைப்படுகிறார்கள். அந்த அளவுக்கு தனது படங்களில் வரும் கதாநாயகனின் கதாபாத்திரத்தை அற்புதமாக சித்தரிப்பார்.
மேலும் சில தேசிய விருதுகளையும் வெற்றிமாறன் வாங்கியிருக்கிறார். தற்போது சிம்புவை வைத்து அரசன் திரைப்படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்த படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் சென்னையில் அடுத்த கட்டப்படிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர். முதல் முறையாக வெற்றிமாறனுடன் சிம்பு இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது..
ஒருபக்கம் அடுத்து யாரை வைத்து வெற்றிமாறன் படம் இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் உருவாகி இருக்கிறது. சூர்யாவை வைத்து அவர் எடுக்க திட்டமிட்ட வாடிவாசல் படம் டேக் ஆப் ஆகுமா என்கிற எதிர்பார்ப்பு சூர்யா ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. ஆனால், வரும் செய்திகளை பார்த்தால் அது நடப்பது போல தெரியவில்லை.

ஏனெனில், நடிகர் கமல்ஹாசனுக்கு வெற்றிமாறன் ஒரு கதையை சொல்லியிருக்கிறாராம். ஒருபக்கம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கும் ஒரு கதையை சொல்லியிருக்கிறாராம். யாரிடமிருந்து சாதகமான பதில் வருகிறதோ அவர்களை வைத்து அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்குவார் எனத் தெரிகிறது. வெற்றிமாறனும் கமலும் இணைந்தால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் அது ஒரு முக்கிய படமாக உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
