அன்றும் இன்றும் என்றும் நெஞ்சைவிட்டு நீங்காத பாடல்களில் முத்திரை பதித்த ஈ.வி.சரோஜா...!
மீனைப்போன்ற கண்கள், வசீகர சிரிப்பு, தமிழ்த் திரையுலகின் கலையரசி என்று போற்றப்படும் நடிகை ஈ.வி.சரோஜா. இவரது வாழ்க்கைக் குறிப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.
1935ல் திருவாரூர் மாவட்டம் என்கண் கிராமத்தில் வேணுபிள்ளை, ஜானகி தம்பதியருக்கு 2வது மகளாகப் பிறந்தார். பிறந்த ஊரின் முதல் எழுத்துடன், தந்தையின் பெயரையும் சேர்த்து ஈ.வி.சரோஜா என்று பெயர் வைத்தார். இவருடன் மூத்த அண்ணன், 2 தம்பிகள் உள்ளனர்.
வீட்டில் ஒரே மகள் என்பதால் பெற்றோர் இவரை சீரும் சிறப்புமாக மகாலெட்சுமி போல் வளர்த்தனர். சிறுவயது முதலே நடனமாடுவது, பாடுவது என தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார். இவரது 8ம் வயதில் தந்தை காலமானார்.
வழுவூர் ராமையாபிள்ளையிடம் ஈ.வி.சரோஜா நடனம் கற்றார். 1952ல் என் தங்கை என்ற படத்தில் அறிமுகமானார். இந்தப்படத்தில் எம்ஜிஆரின் தங்கையாக நடித்து இருந்தார்.
பணமின்றி வறுமையில் வாழ முடியாது என்ற நிலையில் இறந்து போகிறார் ஈ.வி.சரோஜா. சோகம் தாங்காமல் தானும் கடலில் இறங்கித் தற்கொலை செய்து கொள்கிறார் எம்ஜிஆர். படம் கதை எதிர்மறையாக வெளியானதால் வெற்றி பெறவில்லை. இதன்பிறகு எம்ஜிஆர் இதுபோன்ற கதை அம்சம் கொண்ட படங்களில் நடிப்பதே இல்லை.
1955ல் ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் கே.ஏ.ராமசாமி, ராஜசுலோச்சனா நடித்த நீதிபதி என்ற படத்தில் இடம்பெற்ற நடனத்தில் ஈ.வி.சரோஜாவும், அவரது தோழி விஜயலெட்சுமியும் இணைந்து அற்புதமாக நடனமாடினர்.
குலேபகாவலியில் குல்சார் என்ற கதாபாத்திரத்தில் சரோஜா தோன்றி நடித்து அசத்தினார். ஜிக்கியின் பின்னணி குரலில் சொக்கா போட்ட நவாபு செல்லாது உங்க ஜவாபுன்னு அசத்தலாக பாடி, ஆட்டம் போடுவார்.
பெண்ணரசி என்ற படத்தில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துத் தாய்மார்களின் பேராதரவைப் பெற்றார். பலே ராமுடு என்ற தெலுங்கு படத்தில் நடனமங்கையாக அறிமுகமானார்.
1956ல் வெளியான அமரதீபம், பாசவலை படங்களில் நடித்து நடிப்பில் தனக்கென தனிமுத்திரை பதித்தார். 1956ல் லேனா செட்டியார் இயக்கத்தில் எம்ஜிஆருடன் இணைந்து பானுமதி மதுரை வீரன் படத்தில் நடித்தார். இந்தப்படத்தில் கிள்ளி என்ற கதாபாத்திரத்தில் ஈ.வி.சரோஜா நடித்தார்.
வாங்க மச்சான் வாங்க என்ற பாடலுக்கு ஆடிப்பாடி எம்ஜிஆரை கலாய்த்திருப்பார். அடுத்து கே.ஏ.தங்கவேலு, பானுமதி இணைந்து நடித்த ரம்பையின் காதலி படத்தில் ஊர்வசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
1957ல் டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த புதுமைப்பித்தன் படத்தில் அபராஜிதா என்ற கதாபாத்திரத்தில் ஈ.வி.சரோஜா நடித்தார். சந்திரபாபுவுடன் இணைந்து தில்லானா பாட்டுப்பாடி என்ற பாடலுக்கு செம ஆட்டம் போடுவார். ஜெமினிகணேசன், சாவித்ரியின் நடிப்பில் வெளியான கற்புக்கரசியில் சசிகலாவாகத் தோன்றினார்.
எங்கள் வீட்டு மகாலெட்சுமியில் பட்டணம் தான் போகலாமடி பொம்பள என்ற பாடலுக்கு ஆடிப்பாடி ஜமாய்த்திருப்பார். வீரக்கனல், காத்தவராயன், பிள்ளைக்கனியமுது படங்களில் நடித்து முத்திரை பதித்திருப்பார்.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார். 1960ல் பீம்சிங் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜியுடன் படிக்காத மேதை படத்தில் நடித்தார்.
டி.ஆர்.மகாலிங்கம் நடிப்பில் ஆடவந்த தெய்வம் படத்தில் பைரவியாக தோன்றி அசத்தினார். 1961ல் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பாக்ய லட்சுமி படத்தில் ஜெமினியின் 2வது மனைவி ராதாவாகத் தோன்றி அசத்தினார். மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்ற பாடலில் சௌகார் ஜானகி உடன் வீணை வாசித்தபடி அசத்தலாக நடித்திருப்பார்.
நல்லவன் வாழ்வான் படத்தில் இடம்பெற்ற ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான், குத்தால அருவியிலே குளித்தது போல் இருக்குதா? பாடலில் ஈ.வி.சரோஜா பின்னி எடுத்திருப்பார். தம்பி ஈ.வி.ராஜன் தயாரிப்பில், பி.நீலகண்டன் இயக்கிய கொடுத்து வைத்தவள் படத்தில் நடித்துள்ளார்.
எம்ஜிஆருடன் இணைந்து மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் தோன்றி அசத்தினார். இப்படி 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
புகழின் உச்சியில் இருந்தபோதே பழம்பெரும் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணாவை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஈ.வி.சரோஜா மற்றும் ராமண்ணாவுக்கு 1974ல் கலைமாமணி விருதை அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி வழங்கி கௌரவித்தார். 2002ல் முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆர் விருதை ஈ.வி.சரோஜாவுக்கு வழங்கி கௌரவித்தார். 2006ல் உடல்நலக்குறைவால் காலமானார்.