தமிழ்சினிமாவில் எக்காலத்துக்கும் பொருந்தும் ரசனை ததும்பும் படங்கள்

Mahanathi Kamal, Suganya
தமிழ்ப்படங்களைப் பார்க்கும் போது சில படங்களை அடிக்கடி பார்க்க வேண்டும் என்று எண்ணத் தோன்றும். அவற்றை கொஞ்சம் உற்று நோக்கினால் அவை எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கும். அப்படிப்பட்ட படங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
எங்க வீட்டுப் பிள்ளை
1965ல் வெளியான புரட்சித்தலைவரின் படம். சாணக்யா இயக்கியுள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் முத்து முத்தானவை. சரோஜாதேவி, தங்கவேலு, நாகேஷ், பண்டரிபாய், சக்கரபாணி, எஸ்.வி.ரங்காராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். முற்றிலும் மாறுபட்ட இரட்டை வேடங்களில் எம்ஜிஆர் நடித்துள்ளார்.

enga veetu pillai
நான் ஆணையிட்டால், நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், கண்களும் காவடி சிந்தாகட்டும், பெண் போனாள், இந்த பெண் போனால், மலருக்குத் தென்றல் பகையானால், குமரிப்பெண்ணின் உள்ளத்திலே ஆகிய பாடல்கள் அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி...நம்மை உணர்வுப்பூர்வமாக ரசிக்கச் செய்து விடும். இந்தப்படத்தின் கதையானது சுவாரசியமானது. ஒருவர் கோழை என்றால் மற்றவர் வீரம் நிறைந்தவர். கோழைக்கே உரிய அப்பாவித்தனம் கொண்டு எம்ஜிஆர் நடித்து ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்துள்ளார்.
அதே நேரம் வீரம் என்றால் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? அநியாயம் நடக்கும்போது எப்படி பொங்கி எழ வேண்டும் என்பதை நடித்துக்காட்டும் போது நமது தூங்கிக்கிடந்த உணர்வுகளைத் தட்டி எழுப்பி விடுவார் எம்ஜிஆர். இது எக்காலத்துக்கும் பொருந்தும் விதத்தில் அமைந்திருக்கும். இன்றும் நாம் கண்கூடாக நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்காமல் செல்வோர் எத்தனை பேர்? நமக்கென்ன வம்பு என்று பார்த்தும் பாராமல் தானே செல்கின்றனர்.
நாடோடி மன்னன்

nadodi mannan
1958ல் வெளியான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்து தயாரித்து இயக்கிய படம். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்துள்ளார். எம்ஜிஆருடன் இணைந்து பானுமதி, பி.எஸ்.வீரப்பா, எம்.என்.ராஜம், சரோஜாதேவி, எம்.என்.நம்பியார், சந்திரபாபு, சக்கரபாணி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தைப் பார்க்கும் போது இதில் வரும் அரசியல் வசனங்கள் எக்காலத்துக்கும் பொருந்துவதாக அமைந்திருக்கும்.
கண்ணில் வந்து மின்னல், சும்மா கிடந்த, தூங்காதே தம்பி தூங்காதே, உழைப்பதிலா, தடுக்காதே, மானைத் தேடி மச்சான், கண்ணோடு கண்ணும் கலந்து, பாடுபட்டதனாலே ஆகிய முத்து முத்தான பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. தூங்காதே தம்பி தூங்காதே, உழைப்பதிலா ஆகிய பாடல்களின் வரிகளை உற்றுக் கவனித்து அதன்படி நடந்தால் அவை மனித வாழ்வை செம்மைப்படுத்தும் என்பது நிச்சயம்.
படிக்காத மேதை

padikkatha medhai
படிக்காதவர்களில் பலர் இன்றும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வாழ்க்கையில் உச்சநிலையை அடைகின்றனர் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த படம். இவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அனைத்தையும் சமாளிக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள். இந்தப்படத்தில் படிக்காத மேதையாக சிவாஜி வாழ்ந்து இருக்கிறார்.
படத்தை இயக்கியவர் ஏ.பீம்சிங். சிவாஜியுடன் எஸ்.வி.ரங்கராவ், டி.ஆர்.ராமச்சந்திரன், அசோகன், முத்துராமன், சௌகார் ஜானகி, கண்ணாம்பா உள்பட பலர் நடித்துள்ளனர். கே.வி.மகாதேவன் இசை அமைத்துள்ளார். ஆடி பிழைத்தாலும், எங்கிருந்தோ வந்தான், இன்ப மலர்கள் பூத்து, ஒரே ஒரு ஊரிலே, படித்ததனால் அறிவு, பக்கத்திலே கன்னிப் பெண், சீவி முடிச்சு சிங்காரிச்சு, உள்ளதைச் சொல்வேன் ஆகிய பாடல்கள் உள்ளன.
தர்மதுரை

dharmadurai
பணம் வந்ததும் ஒருவனது குணம் எப்படி எல்லாம் மாறுகிறது. சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்து ஒருவன் எப்படி எல்லாம் சம்பாதிக்கிறான்? சமுதாயத்தில் அவனது அந்தஸ்து எப்படி உள்ளது என்பதை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல சொல்லியிருக்கிறார்கள். பணம் மட்டுமே ஒருவனுக்கு வாழ்க்கையாகி விடாது. வாழ்க்கைன்னா என்னன்னு ஒரே வரியில் படத்தின் கிளைமாக்ஸில் ரஜிகாந்த் கூறும் வசனம் நம்மை மெய்சிலிர்க்கச் செய்து விடும்.
மது, கௌதமி, நிழல்கள் ரவி, சரண்ராஜ், வெண்ணிற ஆடை மூர்த்தி, செந்தில், பயில்வான் ரங்கநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ரகங்கள். ஆணென்ன பெண்ணென்ன, அண்ணன் என்ன தம்பி என்ன, மாசி மாசம் ஆளான பொண்ணு, ஒண்ணு ரெண்டு, சந்தைக்கு வந்த கிளி ஆகிய பாடல்கள் உள்ளன. 1991ல் ராஜசேகரின் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது.
மகாநதி
1994ல் வெளியான இந்தப்படத்தை சந்தானபாரதி இயக்கியுள்ளார். கமல், சுகன்யா, கொச்சி ஹனிபா, பூரணம் விஸ்வநாதன், சோபனா, எஸ்.என்.லட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர்.
படத்தைப் பார்க்கும் போது நம்மை அறியாமலேயே நாம் அழுதுவிடுவோம். அப்படிப்பட்ட ஒரு யதார்த்தமான திரைக்கதை. படத்தில் கமல்ஹாசன் கிருஷ்ணசாமி என்ற நடுத்தர வர்க்க குடும்பத் தலைவராகவே வாழ்ந்துள்ளார். நல்லவங்களை ஆண்டவன் எப்படி எல்லாம் சோதிக்கிறான்...கெட்டவங்களுக்கு மட்டும் ஏன் எல்லவாற்றையும் தட்டுல வச்சிக் கொடுக்கான என கமல் தேம்பித் தேம்பி அழுகையில் நம் மனம் கனத்துப் போகிறது. இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் செம மாஸ்.
அன்பான தாயாய், எங்கேயோ திக்கு திசை, பொங்கலோ பொங்கல், ஸ்ரீரங்க ரங்கநாதனின், சொல்லாத ராகங்கள், தன்மானம் உள்ள நெஞ்சம் ஆகிய பாடல்கள் நமது உணர்வைத் தட்டி எழுப்புபவை. சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதைத் தட்டிச் சென்றது.