Cinema History
சம்பளமே வாங்காம ரஜினி நடிச்ச படம்!.. இனிமே அப்படி ஒரு பாட்டு அமையவே அமையாது!..
ரஜினி நடித்த வேலைக்காரன் படத்தில் கேட்க கேட்க ஒரு ஏக்கத்தை உண்டாக்கும் பாடல் உள்ளது. அது தான் வா வா வா வா கண்ணா வா பாடல். இந்தப் பாடலை மனோ, சித்ரா குழுவினர் பாடியுள்ளனர். ரசித்து ரசித்து வியந்து பிரபல யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி வர்ணனை செய்துள்ளார். பார்க்கலாமா…
ரஜினி நடித்த 100வது படம் ஸ்ரீராகவேந்திரா. இந்தப் படத்தைத் தயாரித்தவர் பாலசந்தர். இந்தப் படத்தால பெரிய நஷ்டமானது. அதனால் அவரோட அடுத்த படமான வேலைக்காரன் படத்தில் ரஜினி பணமே வாங்காமல் நடித்துக் கொடுத்தாராம்.
இந்தப்படத்தில் ரஜினி, ஜனகராஜ், வி.கே.ராமசாமி என காமெடியில் எல்லோருமே பொளந்து கட்டியுள்ளார்கள். மனோ முதன் முதலாக ரஜினிக்கு இந்தப் படத்தில் தான் பாடியுள்ளார். இந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடி அமலா.
வாவா வா கண்ணா வா பாடல் முழுக்க முழுக்க காஷ்மீரில் எடுக்கப்பட்டது. இந்தப் பாடலைப் பார்த்தாலே ஒரு குளு குளு உணர்வு ஏற்படும். இந்தப் படத்தை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். நிறைய பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளார். காஷ்மீரில் அவ்வளவு குளிரில் ஆடுவது என்பது சிரமமான விஷயம் என்பதால் ரஜினிக்கும், அமலாவுக்கும் கனத்த ஸ்வெட்டர் போன்ற டிரெஸ் போட்டு ஆட வைத்திருப்பார்.
அதே பாடலில் பரதநாட்டியம் ஆடும்போது காலில் செருப்பு போடக்கூடாது. ஆனால் அந்தப்பனிப்பொழிவுல அப்படி நடிக்க முடியாது என்பதால் ஜமுக்காளத்தை விரித்து அதில் ஆட வைத்திருப்பார் இயக்குனர். அப்படியும் குளிர் தாங்காத அமலா ஆடி முடித்ததும் ஓடி வந்து ஷூ போட்ட ரஜினியின் கால்களின் மேல் ஏறிக்கொள்வாராம்.
இந்தப் பாடலை இளையராஜா ஹம்சவர்த்திணி ராகத்தில் இசை அமைத்திருப்பார். இந்தப் பாடலில் ட்ரம்பட், சாக்சபோன், எலக்ட்ரிக் கிதார் என வெஸ்டர்ன் இசைக்கருவிகளால் இசை அமைக்கப்பட்டு இருக்கும். புல்லாங்குழல் இசை அருமையாக இருக்கும். கர்நாடக இசையில் பாடல் கொண்டு வந்து இருப்பார்.
இந்தப்பாடலை எழுதியவர் கவிஞர் மேத்தா. ஆசையோடு பேச வேண்டும் ஆவல் இங்கு கொஞ்சமே… ஆசையாக வந்த போதும் தஞ்சம் உந்தன் நெஞ்சமே… என காதலர்கள் இருவரும் அழகாக தங்கள் காதலை எடுத்துரைக்கின்றனர். பாடலின் முடிவில் நானும் நீயும் காதல் கைதி என்ன என்ன இனிக்குது என்று சொல்லி முடிக்கிறார். பாடலை வார்த்தைகளால் அலங்கரித்துள்ளார் கவிஞர் மேத்தா.
அடுத்ததாக, மேத்தா அருமையான வரிகளை போட்டு ஜாதி, மத மோதலுக்கு காதலாலேயே ஒரு தீர்ப்பு சொல்லி இருப்பார் கவிஞர். காளிதாசன் காண வேண்டும் காவியங்கள் சொல்லுவான்… கம்பநாடன் உன்னைக்கண்டு சீதை என்று கொஞ்சுவான்… அதாவது பாடலில் இப்படி காதலியை வர்ணிக்கிறான் காதலன். காளிதாசன் பார்த்து விட்டால் பல காவியங்களைப் படைத்து விடுவான். கம்பன் பார்த்து விட்டால் சீதை கிடைத்துவிட்டாள் என்று இன்னொரு ராமாயணத்தையே எழுதி விடுவான் என்கிறார்.
அடுத்ததாக சொல்லும் வரிகளில் தான் தீர்ப்பு. தாஜ்மகாலின் காதிலே ராமகாதை கூறலாம்… மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம்… என்ன ஒரு அருமையான வரிகள். இனி இப்படி ஒரு பாடல் வருமா என்பது சந்தேகம் தான்.