“பிரின்ஸ் படுதோல்வி… சிவகார்த்திகேயன் அப்படி பண்ணதுதான் காரணம்”… வெளுத்துவாங்கிய மூத்த பத்திரிக்கையாளர்…
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த 21 ஆம் தேதி வெளியான திரைப்படம் “பிரின்ஸ்”. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஆங்கிலேயர் மரியா என்பவர் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் சத்யராஜ், சூரி, பிரேம்ஜி, சதீஷ் கிருஷ்ணன், ஆனந்தராஜ் என பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை அனுதீப்.கே.வி இயக்கியிருந்தார்.
வழக்கம்போல் சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்குமோ, அதே அளவு எதிர்பார்ப்பு “பிரின்ஸ்” படத்திற்கும் இருந்தது. ஆனால் இத்திரைப்படம் பெரும்பாலான ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
“பிரின்ஸ்” திரைப்படம் வெளியானபோது, அத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலருக்கும் இத்திரைப்படம் ஏமாற்றத்தையே தந்தது. குறிப்பாக “பிரின்ஸ்” திரைப்படத்தின் திரைக்கதை மிகவும் சுமாராக எழுதப்பட்டிருந்ததாக பல விமர்சனங்கள் வெளிவந்தன.
சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் காமெடி காட்சிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆனால் “பிரின்ஸ்” திரைப்படத்தின் காமெடி காட்சிகள் சுத்தமாக எடுபடவில்லை எனவும் ரசிகர்கள் பலர் கூறி வந்தனர். இது போன்ற பல விமர்சனங்களால் “பிரின்ஸ்” திரைப்படத்திற்கான வரவேற்பு குறைந்தது.
இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி சமீபத்திய பேட்டி ஒன்றில் “பிரின்ஸ்” திரைப்படத்தின் தோல்விக்கான காரணம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். அதாவது “கடந்த சில வருடங்களாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களில் அவரது தலையீடு அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள். பிரின்ஸ் திரைப்படத்தை பார்க்கும்போது ஒரு வேளை அது உண்மை என்றுதான் தோன்றுகிறது. புது இயக்குனர்கள் இயக்கும்போது ஒரு நடிகர் தனது விருப்பம் போல் காட்சிகளை வைக்கவேண்டும் என்று அத்திரைப்படத்தின் கதையில் தலையிடுவது வழக்கம். அதைத்தான் சிவகார்த்திகேயனும் செய்துள்ளார். இதுதான் பிரின்ஸ் தோல்விக்கு காரணமாக இருக்கும்” என கூறியுள்ளார்.
“பிரின்ஸ்” திரைப்படத்தின் இயக்குனர் அனுதீப் கே.வி. இதற்கு முன் தெலுங்கில் “ஜதி ரத்னலு” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அத்திரைப்படம் ரூ.4 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.60 கோடி வசூல் ஆனது. இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்துதான் சிவகார்த்திகேயன் அனுதீப்பின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். எனினும் “பிரின்ஸ்” திரைப்படத்தின் தோல்விக்கு அனுதீப்தான் காரணம் என பலரும் விமர்சித்து வந்தனர்.
இது குறித்து அப்பேட்டியில் மேலும் பேசிய பத்திரிக்கையாளர் பிஸ்மி “பிரின்ஸ் திரைப்படத்தின் தோல்விக்கு சிவகார்த்திகேயனின் அதிகமான தலையீடுதான் காரணமே தவிர, இயக்குனருக்கு சரக்கு தீர்ந்துவிட்டது என நாம் கூறமுடியாது” என்று வெளிப்படையாக கூறியது குறிப்பிடத்தக்கது.