பிரபல இயக்குநர், நடிகர் மரணம்.. அதிகாலையில் தமிழ் சினிமாவில் அதிர்ச்சி.. தனுஷை இயக்கியவரின் கடைசி கால சோகம்!

by Giri |   ( Updated:2025-04-14 21:27:49  )
பிரபல இயக்குநர், நடிகர் மரணம்.. அதிகாலையில் தமிழ் சினிமாவில் அதிர்ச்சி.. தனுஷை இயக்கியவரின் கடைசி கால சோகம்!
X

தமிழ் சினிமாவில் தனுஷ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரை வைத்து படம் இயக்கியவர் இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி. இவர் ஸ்ரீகாந்த் - சினேகா நடிப்பில் வெளியாகி நல்ல படம் எனப் பேசப்பட்ட ஏப்ரல் மாதத்தில் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இதன்பின், தனுஷை வைத்து புதுக்கோட்டையில் இருந்து சரவணன் திரைப்படத்தை இயக்கினார்.

இந்தப் படமும் தமிழ் சினிமாவில் பேசப்பட்ட படமாக அமைந்தது. இதன்பின் ஸ்ரீகாந்தை வைத்து மெர்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை என இரண்டு படங்களை இயக்கியவர் அதன்பின் இயக்குநர் பணியை விடுத்து நடிகரானார்.

அதன்படி, பெரியார், மணிரத்னத்தின் இராவணன், விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை, மகாராஜா உட்பட பல படங்களில் துணை நடிகராகவும் நடித்திருக்கிறார். கடைசியாக ‘மகாராஜா’ படத்தில் நடித்திருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இயக்குநர் ஸ்டான்லி, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நடிகர் தனுஷ் மருத்துவ உதவிகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

Dhanush
Dhanush

இந்நிலையில் தான் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து இன்று அதிகாலை எஸ்.எஸ்.ஸ்டான்லி உயிர் பிரிந்தது. அவரது மறைக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறுதி சடங்குகள் இன்று மாலை வளசரவாக்கம் மின் மயானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இறுதிக்காலத்தில் படத்தில் நடிப்பதோடு யூடியூப் தளங்களுக்கு பேட்டியளித்து வந்தார். தனது உடல்நிலை பற்றி எங்கும் குறிப்பிடாத அவர் அதனை மறைத்து ரசிகர்களுக்கு சுவாரஸ்ய தகவல்களை கொடுத்து வந்தார். மேலும், உடல்நிலை குன்றிய அவருக்கு தனுஷ் உதவி வந்ததும் தெரியவந்துள்ளது. இந்தநிலையில், அவரது மறைவு தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story