“நீ உருப்படவே மாட்ட”… வாலிக்கு சாபம் விட்ட பிரபல இசையமைப்பாளர்… ஆனால் நடந்தது என்னமோ வேற!!
தமிழ் சினிமாவின் முன்னோடி கவிஞராக திகழ்ந்த வாலி, திரையுலகில் நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதிய பெருமைக்கு சொந்தக்காரர். காலத்துக்கு ஏற்றார் போல் தன்னை அப்டேட் செய்துகொண்டதால் இவரை வாலிப கவிஞர் என்றும் அழைப்பார்கள்.
கவிஞர் வாலி தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத கவிஞராக புகழ் பெற்றிருந்தாலும் அவரது தொடக்க காலத்தில் பல துயரங்களை கடந்து வந்துள்ளார். மூன்று வேளை சாப்பாட்டிற்க்கு கூட வழியில்லாமல் சென்னையில் வாலி வாய்ப்பு தேடி அலைந்த காலமும் உண்டு.
அப்போது அவருக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்தவர் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன். எப்படியாவது வாலியை பாடலாசிரியராக்கி விட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தார். அவர் மூலம் பல வாய்ப்புகள் வாலிக்கு வந்தாலும், கானல் நீர் போல் அந்த வாய்ப்பு மறைந்துவிடும் துயரமும் நிகழ்ந்தது.
வி.கோபாலகிருஷ்ணனுக்கு அடுத்ததாக அவருடன் நெருக்கமாக இருந்தவர் பிரபல இசையமைப்பாளரான ஜி.கே.வெங்கடேசன். வாலிக்கு பாடல் எழுத வாய்ப்பு தரவில்லை என்றாலும் அவருக்கு அவ்வப்போது பண உதவி செய்து வந்தார் வெங்கடேசன்.
இந்த நிலையில் ஒரு நாள் ஜி.கே.வெங்கடேசன், வாலியை அழைத்து “இனிமே நீ இப்படி கஷ்டப்பட்டுட்டு இருக்க வேண்டாம். மாசம் 300 ரூபாய் வருமானம் வருகிற மாதிரி உனக்கு ஒரு வேலையை ஏற்பாடு பண்ணிருக்கேன்” என கூறினாராம். அதற்கு வாலி “எனக்கு குமாஸ்தா வேலை எல்லாம் வேண்டாம். நான் சென்னைக்கு வந்ததே பாட்டெழுதுறதுக்குத்தான். எனக்கு பாட்டெழுத ஒரு வேலையை வாங்கித்தாங்களேன்” என கூறினார்.
“உனக்கு பாட்டெழுதுற வேலைக்குத்தான்டா ஏற்பாடு பண்ணிருக்கேன். கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளரா உன்னைய சேர்த்து விடுறேன். அவர் பாடல் சொல்ல சொல்ல நீ எழுதனும். உனக்கு மாசம் 300 ரூபாய் அவர் கொடுத்துவிடுவார்” என ஜி.கே.வெங்கடேசன் கூறினார்.
இதனை கேட்ட வாலி “அண்ணே, கண்ணதாசனிடம் உதவியாளராக சேர்ந்தால் நான் எப்படி பாடலாசிரியராக ஆக முடியும். ஒரு டெயிலரிடம் உதவியாளராக சேர்ந்தால் கடைசி வரை உதவியாளராகத்தான் இருக்க முடியும். அதே போல்தான் இதுவும்” என கூறினார். இதனை கேட்ட ஜி.கே.வெங்கடேசன் கடும் கோபத்திற்குள்ளானார். “நீ உருப்படவே மாட்டடா” என கூறிவிட்டு சென்றுவிட்டாராம். எனினும் அவரது வார்த்தை பழிக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.