Connect with us
RMV MGR

Cinema History

‘சத்யா மூவீஸ்’ உருவான கதை … அந்தப் பேரு வந்ததுக்கு பின்னால் உள்ள ரகசியம் இதுதான்!

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பெரும்பாலான திரைப்படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அவரது நேர்மையைப் பற்றி நன்றாக அறிந்தவர் ஏ.வி.எம் மெய்யப்ப செட்டியார். அவர் உதவி செய்ய ஆர்எம்வீரப்பன் தயாரிப்பாளர் ஆனார். அவர் மட்டும் உதவி செய்யலேன்னா என் வாழ்க்கையில நான் தயாரிப்பாளராகவே ஆகியிருக்க முடியாது என்றார் ஆர்.எம்.வீரப்பன்.

1963 அக்டோபர் மாதம் விஜயதசமி அன்று சத்யா மூவீஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். மக்கள் திலகம் எம்ஜிஆர் குத்துவிளக்கேற்றி அந்த நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார். அந்த நிறுவனத்திற்கு ஏன் சத்யா மூவீஸ் என்று பெயர் வைத்தார் என்று தெரியுமா? அதற்கு ஆர்எம்.வீரப்பன் சொன்ன பதில் இதுதான்…

எம்ஜிஆரின் அன்னை பெயர் சத்யா. நான் எம்ஜிஆருக்கிட்ட வேலை செய்றதுக்கு சில நாள்களுக்கு முன்னர் தான் அந்த அம்மையார் தவறி இருந்தார். எம்ஜிஆர் போன்ற தவப்புதல்வனைத் தமிழகத்துக்குத் தந்தவர் அந்த அம்மையார் தான். அதனால அவரோட பேரையே என் படக்கம்பெனிக்கு வைக்கணும்னு நான் விரும்பினேன். அதனால தான் அந்தப் பெயரை நான் வைத்தேன் என்றார்.

அப்போது எம்ஜிஆர் ராஜா காலத்துப் படங்கள் தான் நடித்துக் கொண்டு இருந்தார். அவரைத் தன்னோட படங்கள்ல வித்தியாசமாகக் காட்ட வேண்டும் என்று நினைத்தார். தன்னோட முதல் படத்தையே எம்ஜிஆரை வைத்து வித்தியாசமாக எடுக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த சமயத்தில் தான் கேம்ப்லர் என்ற இந்திப் படத்தை சின்னப்பா தேவர் போட்டுப் பார்த்தார். தேவர் ஒரு படத்தைப் பார்த்தார்னா நிச்சயமா அதுல விஷயம் இல்லாம இருக்காதுன்னு நினைத்தார் ஆர்எம்.வீரப்பன்.

Theivathai

Theivathai

அதனால் அந்தக் கதையை வைத்தே எம்ஜிஆர் படத்தை எடுக்க நினைத்தார் ஆர்எம்.வீரப்பன். அந்தக் கதை பிடித்துவிடவே அந்தப் படத்தோட உரிமையை வாங்கினார் அவர். வாங்கிய பிறகு அவருக்குக் கொஞ்சம் சந்தேகம் வந்தது. இந்தப் படத்தைத் தயாரிக்கலாமா என்று. அதனால் அந்தப் படத்தை அப்போது பிரபல வசனகர்த்தாவாக இருந்த முரசொலி மாறனுக்குப் போட்டுக் காட்டினார்.

அப்போது முரசொலி மாறன் இந்தக் கதையைக் கொஞ்சம் மாற்றி எடுத்தா நிச்சயமா வெற்றி பெறும் என்றார். அதுதான் தெய்வத்தாய் படம். இந்தப்படத்திற்கு வசனம் எழுதியவர் கே.பாலசந்தர். இயக்குனராக பி.மாதவனை நியமித்தார். எம்எஸ்.விஸ்வநாதனை இசை அமைக்கவும், வாலியை பாடல் எழுதவும் வைத்தார்.

18.7.1964 ல் இந்தப் படம் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. எம்ஜிஆருக்கு ஜோடியாக சரோஜா தேவி நடித்தார். நம்பியார், அசோகன், நாகேஷ், பண்டரிபாய் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் தான் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், இந்த புன்னகை என்ன விலை, வண்ணக்கிளி சொன்ன மொழி, ஒரு பெண்ணைப் பார்த்து என சூப்பர்ஹிட்டான பாடல்கள் இடம்பெற்றன.

எம்ஜிஆரிடம் வேலைக்கு சேர்ந்து பத்தே ஆண்டுகளில் அவரை வைத்தே படம் எடுக்கும் அளவுக்கு முன்னேறியவர் ஆர்.எம்.வீரப்பன் என்று சொல்லலாம். எம்ஜிஆரை வைத்து நான் ஆணையிட்டால், காவல்காரன், கண்ணன் என் காதலன், ரிக்ஷாக்காரன், இதயக்கனி ஆகிய சூப்பர்ஹிட் படங்களை எடுத்தது இந்த நிறுவனம் தான்.

google news
Continue Reading

More in Cinema History

To Top