"கரகாட்டக்காரன் இந்த படத்தின் காப்பி தான்.." - இத்தனை வருடங்கள் கழித்து உண்மையை உடைத்த கங்கை அமரன்!

by Giri |
கரகாட்டக்காரன் இந்த படத்தின் காப்பி தான்.. - இத்தனை வருடங்கள் கழித்து உண்மையை உடைத்த கங்கை அமரன்!
X

தமிழக மக்கள் கொண்டாடி தீர்த்தப் படம் "கரகாட்டக்காரன்". கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா என நட்சத்திர பட்டாளமே கரகாட்டக்காரன் படத்தில் நடித்திருந்தனர்.

கரகாட்டக்காரன் ராமராஜனுக்கு முக்கியமான திருப்பமாக அமைந்த திரைப்படம். படம் வெளியானது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக, ரிப்பீட்டட் ஆடியன்ஸின் கைத்தட்டி, ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டது. பல ஊர்களில் 200 நாட்களுக்கும், மதுரை போன்ற ஊர்களில் 350 நாட்களுக்கும் மேலாக ஓடிய இந்த படம், தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படங்களில் ஒன்றாகும்.

ராமராஜன், கனகா இருவரும் கரகாட்டக் கலைஞர்கள். ஊர்த்திருவிழா நடக்கிறது. ராமராஜன் வெளியூர் ஆட்டக்காரர். அவர் உள்ளூர் ஆட்டக்காரி கனகாவை சந்திக்கிறார். வழக்கம் போல காதல் அரும்புகிறது. கனகாவின் மாமா சந்திரசேகர் உள்ளூர் பண்ணையார் சந்தான பாரதிக்கு செட்டப் செய்யப் பார்க்கிறார். அதிலிருந்து ராமராஜன் எப்படி கனகாவை காப்பாற்றி தன்வசப்படுத்துகிறார் என்பதே கதை. ராமராஜன் நாதஸ் கோஷ்டியில் கவுண்டமணி, செந்தில், கோவை சரளா குழுவினர் காமெடியில் பட்டையைக் கிளப்பி இருப்பர். தமிழ் சினிமா உலகில் காமெடியில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்திய படம் இது. அந்த அளவுக்கு ஐகானிக் காமெடி சீன்கள் இடமபெற்றிருந்தன. இனி யாரும் இது போன்ற படத்தை எடுக்கவும் முடியாது.

ஆனால், இந்தப் படமே ஒரு படத்தின் காப்பி என்று இத்தனை வருடங்கள் கழித்து உண்மையை உடைத்திருக்கிறார் அதன் இயக்குநர் கங்கை அமரன். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கை அமரன், "கரகாட்டக்காரன் நீங்கள் பார்த்து ரசித்த தில்லானா மோகனாம்பாள் படத்தின் காப்பி தான். அங்கு நாட்டியம், இங்கு கிராமப்புற கரகாட்டம். அவ்வளவு தான். அந்தப் படத்தில் பாலைய்யா பேசிய வசனத்தை தான் ஊரு விட்டு ஊரு வந்து பாடலாக செய்தேன். அந்தப் படத்தில் பாடல் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவில்லை. ஆனால் நாங்கள் பாடல் வைத்தோம். படம் சூப்பர் ஹிட் ஆனது." என்றார்.

Thillana Moganambal
Thillana Moganambal

சிவாஜி, பத்மினி ஜோடிக்கு காலத்தால் மறக்க முடியாத திரைப்படம் ஆனது தில்லானா மோகனாம்பாள். இந்தப் படத்தின் பல சிறப்பம்சங்களை கரகாட்டக்காரன் படத்திலும் காணலாம். சிவாஜிக்கு பதிலாக இங்கு ராமராஜன் நடித்துள்ளார், பத்மினிக்கு பதிலாக கனகா நடித்துள்ளார். ஜூனியர் பாலையாவிற்குப் பதிலாக கவுண்டமணி, நாகேஷிற்குப் பதிலாக சந்திரசேகர், நம்பியாருக்குப் பதிலாக சந்தான பாரதி ஆகியோர் நடித்துள்ளனர். ஒவ்வொருவரின் கதாபாத்திரத்தை கவனித்தால் இதை புரிந்து கொள்ளலாம்.

தில்லானா மோகனாம்பாள் படத்தில் திருவிழாவுக்காக நாட்டியம் ஆட பத்மினியும், நாதஸ்வரக் குழுவும் வருகின்றனர். சிவாஜி நாதஸ்வர கலைஞர், பத்மினி நாட்டியக்காரி. அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்ததும் காதல் மலர்கிறது. ஆரம்பத்தில் சிறிது முரண்பாடு இருந்தாலும் பின் காதலாக மாறுகிறது. கரகாட்டக்காரனில் ராமராஜன், கனகா இருவரும் கரகாட்டக் கலைஞர்கள். திருவிழாவில் கரகாட்டம் ஆட வரும் வெளியூர் கலைஞர் ராமராஜன், அங்கு உள்ளூர் கலைஞர் கனகாவை சந்திக்கிறார். இதேபோல் காதல் மலர்கிறது. கனகாவின் மாமா சந்திரசேகர், பண்ணையார் சந்தான பாரதிக்கும் செட்டப் செய்வதற்கு முயற்சிக்கிறார்.

தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாகேஷ் பத்மினியை முதலில் பண்ணையாருக்கும், பின் ராஜாவுக்கும் செட்டப் செய்ய முயற்சிக்கிறார். ஜூனியர் பாலையா கலாட்டா காமெடி செய்கிறார். கரகாட்டக்காரன் படத்தில் ராமராஜனின் குழுவில் கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகியோர் காமெடி பங்குபெறுகின்றனர்.

Next Story