மகாநடி படத்தை இயக்கி தெலுங்கு பட இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கியுள்ள திரைப்படம்தான் கல்கி 2898 ஏடி. இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோ என்றாலும் அமிதாப்பச்சன் உள்ளிட்ட மற்ற நடிகர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த படத்தில் கமல்ஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும். தீபிகா படுகோனே, அஸ்வித் தத், துல்கர் சல்மான், திஷா பத்தானி, ரானா ரகுபதி, அன்னா பெண் என பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கிறது. இன்னும் 874 வருடங்கள் கழித்து உலகம் எப்படி இயங்கும். மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை கற்பனை செய்து ஹாலிவுட் பாணியில் படமாக எடுத்திருக்கிறார்கள். அதோடு, கொஞ்சம் மகாபாரத கதையை நுழைத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ‘கல்கி’ படம் பார்த்த சூப்பர் ஸ்டார்! படத்தை பற்றி என்ன சொல்லியிருக்காரு பாருங்க
இந்த படத்தின் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த 27ம் தேதி ஜூன் உலகமெங்கும் வெளியானது. சில தியேட்டர்களில் 2டி தொழில் நுட்பத்திலும் வெளியானது. விரைவில் 3டி தொழில் நுட்பத்திலும் இப்படம் வெளியாகவுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் இதுவரை இல்லாத ஒரு கெட்டப்பில் இப்படத்தில் நடித்திருக்கிறார்.
படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் முதல் பாதி கொஞ்சம் மெதுவாக போனாலும், 2ம் பாதி விறுவிறுப்பாக செல்வதாக கூறியுள்ளனர். குறிப்பாக ஹாலிவுட் ரேஞ்சுக்கு VFX செய்யப்பட்டிருப்பதாகவும் படம் பிரமிப்பாக இருப்பதாகவும், இந்திய சினிமாவில் இது புதிய முயற்சி எனவும் பாராட்டி வருகிறார்கள்.

வசூலை பொறுத்தவரை உலக அளவில் 280 கோடியை இப்படம் வசூல் செய்திருக்கிறது என சொல்லப்படுகிறது. இப்படத்தின் பட்ஜெட் 700 கோடி என சொல்லப்படுவதால் ஆயிரம் கோடி வசூல் செய்தால் மட்டுமே தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைக்கு என சொல்லப்படுகிறது.
என்னதான் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இருந்தாலும் கதை, திரைக்கதை வலுவாக இருந்தால் மட்டுமே படம் ரசிகர்களை ஈர்க்கும். அப்படி பார்க்கும்போது கல்கி ரசிகர்களை முழுமையாக கவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பிரபாஸுக்கு கடந்த சில படங்கள் சரியாக ஓடவில்லை. எனவே, இந்த படம் ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
