ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கிய முன்னணி ஹீரோ..தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!.

by Akhilan |   ( Updated:2022-10-03 06:26:23  )
ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கிய முன்னணி ஹீரோ..தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!.
X

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கி நடிகர் ராஜ்கிரண் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார்... அப்போது என்ன நடந்தது?

காதர் என்கிற இயற்பெயர் கொண்டவர் ராஜ்கிரண். படத்துக்காக தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்ட அவர், 1989-ம் ஆண்டு வெளியான என்னைப் பெத்த ராசா படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின்னர் வெளியான என் ராசாவின் மனசிலே, அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய படங்கள் இவரை முன்னணி நடிகராக்கியது.

படங்களில் நடிப்பதோடு இவரே இயக்கிய இந்தப் படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. பல்வேறு புதுமுக நடிகர்களை அறிமுகப்படுத்தியவர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் ராஜ்கிரண். இவரது பெருமைமிகு அறிமுகங்களுள் முக்கியமானவர் வைகைப்புயல் வடிவேலு என்பது குறிப்பிடத்தக்கது.

1990-களின் பிற்பகுதியின் முன்னணி நாயகனாக வலம்வந்த இவர், ஒரு படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கியிருக்கிறார். எல்லாமே என் ராசாதான் படம் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த சமயத்தில், காங்கிரஸ் கட்சி பிரமுகரான ஏ.ஜி.சுப்ரமணியன் ராஜ்கிரணை வைத்து ஒரு படம் இயக்கத் திட்டமிட்டார். அந்தப் படத்தைப் பிரபல இயக்குநர் பி.வாசுவின் உதவி இயக்குநரான கிருஷ்ணன் இயக்குவதாகத் திட்டமிடப்பட்டது.

இதையும் படிங்க: என் ராசாவின் மனசிலே 2 எப்போது வெளிவரும்? சொல்கிறார்……இயக்குனர் ராஜ்கிரண்

அப்படி ராஜ்கிரணை ஏ.ஜி.எஸ் அணுகியபோது எனக்கு ஒரு கோடியே பத்து லட்ச ரூபாய் சம்பளம் வேண்டும்; அதில், 50 லட்ச ரூபாயை அட்வான்ஸாகக் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டிருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி அப்போது ஒரு படத்துக்கு ஒரு கோடி ரூபாய் என்கிற அளவில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாராம். அந்த சமயத்திலேயே ரஜினியை விட 10 லட்ச ரூபாய் சம்பளம் அதிகம் கேட்டிருக்கிறார் ராஜ்கிரண். தயாரிப்பாளர் தரப்பும் சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டு, ஷூட்டிங்கைத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்தப் படம் தயாரிப்பில் இருந்த காலகட்டத்திலேயே ராஜ்கிரண் நடித்த மாணிக்கம், பாசமுள்ள பாண்டியரே ஆகிய படங்கள் வெளியாகின. அதுவரை ஏறுமுகத்தில் இருந்த ராஜ்கிரணின் சினிமா வாழ்வு, இந்த இரண்டு படங்கள் மூலம் இறங்குமுகமாக மாறியது. அந்த இரண்டு படங்களும் தோல்வியைத் தழுவவே, பொண்ணு விளையிற பூமி படத்துக்கான வியாபாரம் தடுமாறியது.

பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு வெளியான அந்தப் படமும் படுதோல்வியடைந்தது. இது ராஜ்கிரணின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். அதன்பிறகு, தலைமுறை, வீரத்தாலாட்டு படங்களில் நடித்த ராஜ்கிரண், 1998-ம் ஆண்டுக்குப் பிறகு படங்களில் நடிக்கவில்லை. நீண்ட இடைவேளைக்குப் பிறகு பாலா இயக்கிய நந்தா படம் மூலம் 2001-ல்தான் ராஜ்கிரண் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

Next Story